கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையே, இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 56 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான அமெரிக்காவில் இதுவரை ஆறரை லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32,186 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்ரிக்காவில் பரவும் கொரோனா

ஆப்ரிக்காவில் முதன்முறையாக கொரோனா தொற்று உறுதியாகி இரண்டு மாதங்கள் ஆகின்றன.

தென் ஆப்ரிக்காவில்தான் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளது. அங்கு 2500க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் எகிப்து மற்றும் அல்ஜீரியாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் கேமரூன், நைஜர், ஐவரி கோஸ்ட் மற்றும் கினியா ஆகிய நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்தது.

ஆப்ரிக்க பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்டிலும் அதிக விளைவுகளை ஏற்படுத்தும்.

பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளில் 10 லட்சம் பேருக்கு ஐந்தே தீவிர சிகிச்சை படுக்கைகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ஐரோப்பாவில் 10 லட்சம் பேருக்கு 4000 படுக்கைகள் உள்ளன.

இருப்பினும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இன்னும் நேரம் உள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்க கண்டம் கடந்த காலங்களில் பல மோசமான பெருந்தொற்றுகளை எதிர்கொண்டுள்ளது.

ஆனால் இது ஒரு புதிய வைரஸ் எனவே இதனை எதிர்கொள்ள ஆப்ரிக்கா தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version