அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தின் இரண்டு வயது மகளின் மனு உரிய முறையில் ஆராயப்படவில்லை என தெரிவித்தள்ள சமஸ்டி நீதிமன்றம் இதன் காரணமாக தமிழ் குடும்பத்தினை உடனடியாக நாடு கடத்த முடியாது என அறிவித்துள்ளது.
தருணிகாவின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட விசா மனுவை உரிய முறையில் ஆராயவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதி மார்க் மொசின்ஸ்கை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், தமிழ் குடும்பத்தின் சட்டத்தரணிகளிற்கு அதிகாரிகள் இதனை தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்;ளனர்.

2019 இல் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் மேற்கொண்ட மதிப்பீட்டு நடைமுறை நியாயமானதாக காணப்படவில்லை என தெரிவித்துள்ள நீதிமன்றம் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீதிபதியின் இந்த உத்தரவு காரணமாக இறுதி உத்தரவு வழங்கப்படும் வரை தமிழ் குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவில் தங்க வைக்கவேண்டும் என்ற உத்தரவு நீடிக்கின்றது.