ஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடும் கலைஞராக அறியப்படுபவர் ‘விக்ரம்’. இன்று (ஏப்ரல் 17)அவருடைய 54ஆவது பிறந்தநாள். விக்ரமின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
அவர் கடந்து வந்த பாதை குறித்த ரீவைண்ட்ர் இதோ!
- விக்ரமின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். இவர் பிறந்த ஊர் சென்னை.
- தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே கராத்தே, நீச்சல், குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.
- திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விக்ரமிற்கு சிறு வயதிலேயே இருந்தாலும் அவருடைய தந்தையின் வற்புறுத்தல் காரணமாக முதுகலை வணிக மேலாண்மை படிப்பை சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் படித்தார்.
- கல்லூரியில் படிக்கும்போது ஒரு வாகன விபத்தில் படுகாயமடைந்து பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு மீண்டு வந்தார்.
- சினிமா பின்னணியிலிருந்து வந்தவராக இருந்தாலும் தன்னை ஒரு நடிகராக நிலைநிறுத்துவதற்கு ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.
- பின்னர் தன்னுடைய கவனத்தை டப்பிங் பக்கம் செலுத்தியிருக்கிறார். நடிகர் அஜித்திற்கு அவருடைய முதல் படமான ‘அமராவதி’யில் விக்ரம் தான் டப்பிங் கொடுத்திருக்கிறார். அவ்வளவு ஏன் காதலன் படத்தில் பிரபுதேவாவின் குரலுக்கு சொந்தக்காரரும் விக்ரம் தான்.
- டப்பிங்கில் மும்முரமாக இருந்த இவரை சேது படம் மீண்டும் நடிப்புத் துறைக்குள் கொண்டுவந்தது. ‘கென்னி’ என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விக்ரமை ‘சீயான்’ என அவருடைய ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்ததும் இந்தப் படத்திற்கு பின்னர் தான்.
- அந்நியன், காசி, தெய்வத்திருமகள் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு மக்களிடையே பாராட்டைப் பெற்றுத் தந்தது.
- இவருடைய வெற்றிக்கான காரணம் அவருடைய அர்ப்பணிப்பு மட்டும் தான். ’ஐ’ படத்தில் நடிப்பிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கிடலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய நடிகர் இவர். திரைக்கதைக்காக எந்த வேடமானாலும் எடுத்து நடிக்கக்கூடிய கலைஞர் ஆவார்.
- பிதாமகன் படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.
- விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வெளியான ‘ஆதித்யா வர்மா’ படம் வெளியாகி பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
- விக்ரம் தற்போது நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து விக்ரம் பிறந்தநாள் பரிசாக பொதுவாக அவருடைய ரசிகர்கள் பயன்படுத்தும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். விக்ரம் இதற்கு முன்னதாக நடித்த கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து ஸ்பெஷல் போஸ்டராக அதை வடிவமைத்திருக்கிறார்.
- விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ’கோப்ரா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 7 விதமான கேரக்டர்களில் விக்ரம் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.