கொரோனாநச்சுக்கிருமியால் உருவான கொவிட்-19 தொற்றுநோயால்
மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. பல செல்வந்த நாடுகளே கொவிட்-19இன்
தாக்குதலால் திணறும் போது ஏற்கனவே அமெரிகாவின் இறுக்கமான பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள

ஈரான் பன்னாட்டு நாணய நிதியத்திடம் ஐம்பது பில்லியன் டொலர் கடனாக கேட்டிருந்தது. மத்திய கிழக்கைச் சேர்ந்த அவதானிகள் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் பார்க்க ஈரான் கொவிட்-19 தொற்று நோயை சிறப்பாகக் கையாண்டதாகத் தெரிவிக்கின்றனர்.

ஈரானில் 2020 மார்ச் வரை கொவிட்-19 நோயால் 48,000 பேர் பாதிக்கப்பட்டதுடன் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

மார்தட்டிய ஈரான்

ஈரானில் கொரொனாநச்சுக்கிருமி பரவத்தொடங்கியவுடன் போக்குவரத்துத்
தடை, தனிமைப்படுத்தல், மக்கள் வழிபாட்டிற்காக கூடுதலைத் தடுத்தல் போன்றவற்றைச் செய்யவில்லை.

2020 மார்ச் 20-ம் திகதி ஈரானில் புத்தாண்டு நாளானதால் பலர் உள்ளூர்பயணங்களை மேற்கொண்டனர்.

தங்களால் கோவிட்-19 தொற்றுநோய் பரவுதலை இலகுவாகத் தடை செய்ய முடியும் என்று ஈரானிய ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். ஈரானில் தொற்றுநோய்த் தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஆட்சியாளர்கள் மறைத்தார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டது.

பொருளாதாரத்தடையால் விழுந்த ஈரானை கொரோனா ஏறி மிதித்து

கொவிட்-19 தொற்றுநோய் ஈரானில் தீவிரமடைடந்ததைத் தொடர்ந்து ஈராக், துருக்கி, பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஈரானுடனான
தமது எல்லையை மூடிவிட்டன. கட்டார் விமானச் சேவை மட்டும் ஈரானுக்கான பறப்புக்களை மேற்கொள்கின்றது.

அமெரிக்கப் பொருளாதாரத்தடை இரண்டு ஆண்டுகளாக ஈரானுக்கு ஏற்படுத்திய பாதிப்பிலும் பார்க்க அதிக பாதிப்பை கொவிட்-19 தொற்று நோய் ஒரு சில வாரங்களில் ஏற்படுத்தியுள்ளது என ஓர் ஈரானிய பொருளியலாளர் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் கணிப்பின் படி 2019இல் ஈரானியப் பொருளாதாரம் 9.5% சுருங்கியிருந்தது. அத்துடன் பணவீக்கம் 40%ஆகவும் உயர்ந்தது.

பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானில் இருந்து வெளியேறியுள்ளன. 2018 மே மாதம் டொனால்ட் டிரம்ப் பொருளாதாரத் தடை விதித்த பின்னர் ஈரான் தனது எரிபொருள் தவிர்ந்த மற்றப் பொருள்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியது. அதிக உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருந்தது.

2019 செப்டபர் முதல் டிசம்பர் வரையில் ஈரானின் விவசாய உற்பத்தி 7.8% ஆலும் தொழிற்றுறை
உற்பத்தி 7% ஆலும் சுரங்கமிடல் 1.2%ஆலும் வளர்ச்சியடைந்தது.

வெளிநாட்டு நிறுவன்ங்கள் வெளியேறியதால் அவற்றின் உற்பத்தியை ஈரானிய அரசுசார் நிறுவன்ங்கள் செய்யத் தொடங்கின.

பிரெஞ்சு மகிழுந்து உற்பத்தி நிறிவனங்கள் வெளியேறிய போது அவற்றின் உற்பத்தியை ஈரானிய் நிறுவனம் ஈடு செய்தது. ஈரானுக்கு பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்கும் 40 ஆண்டு கால அனுபவம் உண்டு.

மருந்தும் மருத்துவ உபகரணங்களும்

ஈரானுக்கு மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை இல்லை. ஆனால் கொவிட்-19இன் தாக்குதலைச் சமாளிக்கத் தேவையான மருந்துகளையும் உபகரணங்களையும் வாங்குவதற்கான அந்நியச் செலவாணிக் கையிருப்பு ஈரானிடம் இல்லை.

அமெரிக்காவின் மருத்துவ உதவிகளை ஏற்க ஈரான் மறுத்திருந்தது. அமெரிக்கா அனுப்பும் மருந்திலும் நோய்பரப்பும் நச்சுக்கிருமிகள் இருக்கும் என்றது ஈரான். அமெரிக்காவே ஈரானில் கொவிட்-19 நோயைப் பரப்பியது என ஈரானிய ஆட்சியாளர்கள் அடித்துச் சொல்வதுடன் அதை மக்கள் மத்தியில் பரப்புரை செய்கின்றனர்.

அமெரிக்க ஊடகங்கள் ஈரான் கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதிலும் பார்க்க அமெரிக்கா மீது குற்றம் சுமத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றது எனக் குற்றம் சாட்டுகின்றன.

பராக் ஒபாமா ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் ஈரானுக்கு கிடைத்த வருமானத்தை ஈரான் சிரியா, ஈராக், லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கவே பெரிதும் பயன்படுத்தியது.

தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப்பயன்படுத்தவில்லை என
வாஷிங்டனில் உள்ள ஈரானிய எதிர்ப்பாளர்களும் இஸ்ரேலிய ஆதரவாளரக்ளும் கருதுகின்றனர்.

மேலும் அவர்கள் ஈரானிய மதவாத தன்னதிகார ஆட்சியாளர்கள் மக்கள் நலனிலும் பார்க்க ஆட்சிமீதான தமது பிடியின் மீதே அதிக கரிசனை கொண்டுள்ளனர் எனவும் கூறுகின்றனர்.

ஈரானுக்கு மருத்துவ உதவிக்கு வழங்கப்பட்ட நிதி சிரியா இரசியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு திசை திருப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டும் 2019இல் முன்வைக்கப்பட்டது.

பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடைகளில் உள்ள நெழிவு சுழிவுகளைப் பாவித்து ஈரானுக்கு மருந்துகளையும் உபகரணங்களையும் அனுப்பின.

உலகெங்கும் பரவும் தொற்றுநோய்க்கு உலகின் எல்லா முலைகளிலும்
தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல் அவசியம் என்பதால் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை இடை நிறுத்தும் படி அந்த மூன்று நாடுகளும் அமெரிக்காவிற்கு வேண்டுகோளும் விடுத்திருந்தன.

ஜெனிவாவில் செயற்படும் ஐநா மனித உரிமைக்கழகமும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

அதே வேளை ஈரானின் புரட்சிப் பாதுகவல் படையின் இளைஞரணியினர் அமெரிக்காவில் சுவாசக்கவச முகமூடிகளின்றித் தவிக்கும் மக்களுக்கு தாம் அவற்றை அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் ஈரானில் உள்ள தீவிரப் போக்கு உடையவர்கள் ஈரானுக்கு அதிக மருத்துவ உபகரணங்கள் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். இது அங்கு ஒரு உள்ளக முரண்பாட்ட்டை உருவாக்கியுள்ளது.

தொடரும் குற்றச் சாட்டுக்கள்

2019இன் இலையுதிர்காலத்தில் அமைதியான ஆர்ப்பாட்டம் செய்த 1500 பொதுமக்களை ஈரானிய ஆட்சியாளர்கள் கொன்றதாகவும் வாஷிங்டனில் இருந்து குற்றம் சுமத்தப்படுகின்றது.

பல மேற்கு நாட்டவர்களை உளவாளிகள் எனக் குற்றம் சாட்டி ஈரான் சிறையில் அடைத்து வைத்துள்ளமையையும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Transparency International என்ற வெளிப்படைக்கான அமைப்பு ஈரான் ஊழலுக்கான உலகநாடுகளின் பட்டியலில் ஈரான் 146வது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கின்றது. அந்த நிறுவனம் ஈரானுக்கு பராபட்சமாக நடக்கும் என்பதை மறுக்க முடியாத போதிலும் ஈரானில் நடக்கும் ஊழல்களையும் மறைக்க முடியாது.

ராயட்டர் செய்தி நிறுவனம் தாம் ஆறுமாதங்களாகத் திரட்டிய தகவல்களை
அடிப்படையாக வைத்து ஈரானிய உச்சத்தலைவர் கொமெய்னிக்கும் அவரது மகனுக்கும் 95பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களை வைத்திருக்கின்றார்கள் என்ற செய்தியை வெளியிட்டது.

பிரித்தானிய ஊடகம் ஒன்று ஈரானிய அரசு அறிவிப்பதிலும் பார்க்க ஐந்து மடங்கு பேர் கொவிட்-19 நோயால் இறந்துள்ளார்கள். மேலும் அந்த ஊடகம் ஈரானில் காலாவதியான மருந்துகள் கொடுக்கப்பட்டு நோயாளிகள் இறக்கின்றனர் என்றது. பினான்:சியல் ரைம்ஸ் பத்திரிகை ஈரானில் கொவிட்-19 தொற்றுநோய் அதிகம் பரவினால் அங்கிருந்து அதன் அயல்நாடுகளுக்குப் பரவலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தி ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை நீக்கப் படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அந்த தொண்ணூறு நாட்கள்

அமெரிக்க பாராளமன்றத்தின் மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த பலர் ஈரானுக்கான தடைவிலக்கல் நீடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆகக் குறைந்தது 90 நாட்களாவது பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கல் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தினர் ஈரான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தல், ஏவுகணைத் திட்டம், யுரேனியப் பதப்படுத்தல் போன்றவற்றை நிறுத்தினால் மட்டுமே பொருளாதாரத் தடை விலக்கப் படும் என்கின்றனர்.

இரசியா, சீனா போன்றவற்றுடன் ஈரான் செய்யும் சில வர்த்தகங்களுக்கு அமெரிக்கா விதிவிலக்கு அளித்திருந்தது. அந்த விதிவிலக்கை மேலும் மூன்று மாதங்கள் நீடிக்க
டொனால்ட் டிரம்ப் ஒத்துக் கொண்டமை ஈரானுக்கு எதிரானவர்களை ஆத்திரப்படுத்தியது.

ஈரான் தொற்றுநோய் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு ஏதுவாக ஈரானுக்கு மென்பொருட்களை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதித்துள்ளது.

மற்ற இஸ்லாமியர்களை ஆத்திரப்படுத்தும்

தற்போது எரிபொருள் மோசமாக வீழ்ச்சியடைந்திருப்பது அமெரிக்க எரிபொருள் உற்பத்தித் துறையைப் பாதித்துள்ளது. இந்த நிலையில் ஈரானை சுதந்திரமாக எரிபொருள் விற்பனை செய்ய அனுமதித்தால் எரிபொருள் விலை மேலும் குறையலாம் என்பதையும் அமெரிக்கா கருத்தில் கொள்ளும்.

ஈரானியர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இரக்கமற்ற நிலைப்பாடு ஈராக்கில் உள்ள சியா இஸ்லாமியர்களை
அமெரிக்காவிற்கு எதிராக கிளர்ந்து எழச் செய்யும்.

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் மத்தியிலும் கொவிட்-19 தொற்றுநோய் பரவியுள்ளது. அவரகள் தற்போது படை நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். அது மட்டுமல்ல ஈரானியர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டால் பல சுனி இஸ்லாமியர்களும் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பலாம்.

தாக்குதல் நடக்குமா?

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் கொவிட்-19 நோய் பரவலை இட்டு கரிசனை கொண்டுள்ளனர். அந்த நிலையை தமக்குச் சாதகமாக பயனடுத்தி அமெரிக்கப்
படைகள் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போன்ற போராளி அமைப்புக்கள் தாக்குதல் நடத்தலாம்.

அப்படி ஒரு தாக்குதலை ஈரான் தூண்டினால் ஈரான் மீது அமெரிக்கப் படைகள் நேரடியாகத் தாக்குதல் நடத்தும் என ஏப்ரல் முதலாம் திகதி டொனால்ட் டிரம் என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதாரப் பிரச்சனையையும் தொற்றுநோய்ப் பிரச்சனையையும்
எதிர் கொள்ளும் ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு விட்டுக் கொடுக்கும் நிலையில்
இல்லை.

இஸ்ரேல் அழியட்டும் அமெரிக்கா ஒழியட்டும் என்ற அவர்களது நிலைப்பாடு மாறுவதாகத்
தெரியவில்லை. ஈரானியர்கள் விரக்தியடையும் போது ஹோமஸ் நீரிணையூடாகச் செல்லும் எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம். அதனால் எரிபொருள் விலை அதிகரிக்கும் என்பதால் அது இரசியாவிற்கு தேவையான ஒன்றாகவும் உள்ளது.

-வேல்தர்மா-

Share.
Leave A Reply

Exit mobile version