தமிழ்நாட்டில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று மேலும் 76 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால், இதுவரை தமிழ்நாட்டில் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 178 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 635ஆக உயர்ந்துள்ளது.
ஆகவே தற்போது கொரோனா நோய்க்காக சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை 940ஆக உள்ளது. இன்று உயிரிழந்தவருடன் சேர்த்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா நோய் தாக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீடுகளில் 22,254 பேரும் அரசின் தனிமைப்படுத்தும் விடுதிகளில் 145 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 53,045 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா நோய் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் 1917 பேர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றனர்.
இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 76 பேரில் 55 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிவந்த 25க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக இதுவரை 358 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.