மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆறு வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரை வல்லுறவு செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அந்தச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் அவரது முகம் மற்றும் கண்களிலும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

அந்தச் சிறுமி ஒருவேளை தன்னை அடையாளம் காட்டி விடக்கூடாது எனும் நோக்கில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட நபர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஜபல்பூர் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார் என்று காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இந்த பாலியல் வல்லுறவு ‘வெட்கக்கேடானது’ என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

தாமோ மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அந்தச் சிறுமி புதன்கிழமை மாலை கடத்தப்பட்ட போது தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தனது கைகள் கட்டப்பட்ட நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பழைய கட்டடத்தில் வியாழன் காலை அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

“சிறுமியின் கண்கள் மோசமாக காயமடைந்துள்ளது. குற்றவாளி அந்த சிறுமியின் முகத்தில் காயப்படுத்தியுள்ளார்,” என்று பிடிஐ செய்தி முகமையிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹேமந்த் சவுகான் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏற்கனவே சந்தேகநபர்கள் சிலரிடம் விசாரணை நடத்திவரும் காவல்துறை, குற்றவாளி குறித்து தகவல் தருவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை சம்பவத்திற்கு பிறகு நடந்த போராட்டங்களால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு சட்டங்கள் கடுமையாக மாற்றப்பட்டன. எனினும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

சமீபத்திய தரவு ஒன்றின்படி இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் பெண்களில் நான்கில் ஒரு பங்கினர் சிறுமிகள் ஆவர்.

பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version