காகங்கள், நாய்கள் திடீரென இறந்த மர்மம் என்ன.. விஷம் காரணமா?
பூம்புகாரில் அடுத்தடுத்து காகங்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்ததும், நாய்கள் மடிந்ததும், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
பூம்புகார் மீனவக் கிராமத்தில் சுமார் 2,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலைவாய்பை இழந்து வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பூம்புகார் மீனவக் குடியிருப்பு பகுதியில் காகங்கள் கூட்டமாய் அமர்ந்து கரைந்து கொண்டிருந்தன. சற்று நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட காகங்கள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்தன. கொரோனா வைரஸ் அச்சத்தால் வீடுகளில் முடங்கியிருந்த மீனவர்கள் வீட்டைச் சுற்றி காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
அதே பகுதியில் மூன்று நாய்களும் இறந்துகிடந்தன. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் இறந்த காக்கைகள் மற்றும் நாய்களை அப்புறப்படுத்தியதுடன் மஞ்சள்நீர் வேப்பிலை கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும், அவை மர்மமான முறையில் இறந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
ஏதேனும் நோய்த் தொற்றால், நாய்கள் காகங்கள் இறந்தனவா அல்லது யாரேனும் விஷம் வைத்துக் கொன்றார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 50- க்கும் மேற்பட்ட காக்கைகளும் 3 நாய்களும் இறந்த சம்பவம் பூம்புகார் மீனவர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.