சாட்டை மற்றும் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கப்படும் முறையை சௌதி அரேபிய அரசு கைவிட உள்ளதாக அந்த நாட்டின் சட்ட ஆவணம் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாட்டை மற்றும் பிரம்பால் அடிப்பதற்கு பதிலாக சிறை அல்லது அபராதம் விதிக்கலாம் என்று சௌதி அரேபிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
சௌதி அரேபிய அரசர் சல்மான் மற்றும் நாட்டின் நடைமுறை ஆட்சியாளராக இருக்கும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் மேற்கொள்ளும் மனித உரிமைகள் தொடர்பான சீர்திருத்தத்தின் ஓர் அங்கம் என்று இந்த தண்டனை ஒழிப்பை அந்த ஆவணம் விவரிக்கிறது.
அரசுக்கு எதிரான கருத்துடையவர்களை சிறையில் அடைப்பது, அரசுக்கு எதிராக எழுதிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை உள்ளிட்டவற்றில் சௌதி அரேபிய அரசு மனித உரிமைகளை பின்பற்றவில்லை என்று நீண்டகாலமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
சௌதி அரேபியாவில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பெருமளவில் முடக்கப்பட்டு உள்ளதாகவும் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்கள் காரணம் ஏதுமின்றி கைது செய்யப்படுவதாகவும், சௌதி அரேபியா உலகிலேயே மோசமான மனித உரிமை மீறல்களை கொண்டுள்ள நாடுகளில் ஒன்று என்றும் அந்நாட்டிலுள்ள செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
2015ஆம் ஆண்டு ராய்ஃப் பதாவி எனும் வலைப்பதிவர் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகவும், இணையவழிக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு பொது இடத்தில் வைத்து சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்ட நிகழ்வு அப்போது பெருமளவில் செய்திகளில் இடம் பிடித்தது.
இந்த தண்டனை முறையை சௌதி அரசின் பிம்பத்துக்கு சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பிபிசியின் அரேபிய விவகாரங்களுக்கான ஆசிரியர் செபாஸ்டியன் உஷர் கூறுகிறார்.
இனிமேல் இந்த தண்டனை முறை முழுமையாக கைவிடப்படும் என்று கருதப்படுகிறது.
எனினும் மன்னர் மற்றும் பட்டத்து இளவரசருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் தொடர்ந்து சௌதி அரேபியாவில் கைதுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த, அப்துல்லா அல் ஹமீது எனும் செயல்பாட்டாளர் ஒருவர் வெள்ளியன்று உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கு காரணம் அவருக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படாதே என்று அவரது சக செயல்பாட்டாளர்கள் சௌதி அரேபிய அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.