உயிரிழந்துவிட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டு, சடலங்களைப் பொதியிடுவதற்கான பையில் (பொடி பேக்) அடைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் பராகுவேயில் இடம்பெற்றுள்ளது.

தென் அமெரிக்க நாடான பராகுவேயின் கொரோனெல் ஒவீடோ நகரைச் சேர்ந்த கிளேடியாஸ் ரொட்றிகஸ் டி டுவார்ட்டே (Gladys Rodríguez de Duarte) எனும் 46 வயதான பெண்ணே இவ்வாறு உயிருடன் புதைக்கப்படுவதிலிருந்து தப்பினார்.

சூலகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இப்பெண், இரத்த அழுத்தம் அதிகரிப்பு காரணமாக கொரோனானெல் ஒவீடோ (Coronel Oviedo )  நகரிலுள்ள சான் பெர்னாண்டோ வைத்தியசாலையில் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டார் என உள்ளூர் பத்திரிகையான ஏ.பி.சி. கலர் தெரிவித்துள்ளது.

 

2 மணித்தியாலங்களின் பின்னர், டாக்டர் ஹெரிபேர்டோ வேரா (Dr Heriberto Vera), இப்புற்றுநோய் காரணமாக இறந்துவிட்தாக தவறுதலாக அறிவித்ததுடன், இறப்புச் சான்றிதழை அப்பெண்ணின் கணவர் மற்றும் மகளிடம் கையளித்தார்.

கிளேடியாஸின் உடலை இறுதிக்கிரியை நடத்துபவர்கள் மலர்ச்சாலையொன்றுக்கு ஏற்றிச்சென்றனர்.

ஆனால், பின்னர் அந்த பிரேதப் பைக்குள் உடலில் அசைவு ஏற்படுவதை மலர்ச்சாலை ஊழியர்கள் அவதானித்தனர்.
அதையடுத்து ஊழியர்கள் கிளேடியாவை அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.அவர் தற்போது ஸ்திரமான நிலையில் உள்ளார் என ஏ.பி.சி கலர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கிளேடியாவின் கணவர் மெக்ஸிமினோ டுவார்ட்டே பெரெய்ரா, சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

தனது மனைவிக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்க விரும்பாமல் அவர் இருந்துவிட்டதாக மேற்படி மருததுவர் அறிவித்துவிட்டார் என மெக்ஸிமினோ பெரேய்ரா குற்றம் சுமத்தியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version