முப்படையினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக அமைக்குமாறு எவ்வித ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

படை வீரர்களை தனிமைப்படுத்துவதற்காக அரச பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன, எந்தவொரு பாடசாலைகளும் படைவீரர்களை தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தவில்லை எனவும் மாறாக அவைகள் இராணுவத்தினரின் தற்காலிக மேலதிக முகாம் களுக்காகவே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

முப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறைகள் மற்றும் குறுகிய கால விடுமுறைகள் அனைத்தும் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அனைவரும் உடனடியாக சேவைக்கு திரும்பும் வகையில் தத்தமது முகாம்களுக்கு வருமாறு எம்மால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை அடுத்து  ஒரேநேரத்தில  பெருமளவிலான படை வீரர்கள் வருகை தந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் பிரதான செயற்பாடானது சமூக இடைவெளியை பேணுவதாகும்.

அவ்வாறு சமூக இடைவெளியை பேணுவம் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள் தங்கும் முகாம்களில் போதியளவு வசதிகள் காணப்படாததை அடுத்தே கல்வி அமைச்சின் அனுமதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடசாலைகளில் சுகாதார மற்றும் சமூக இடைவெளிகளைக் கொண்ட தங்குமிட வசதிகளை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் முப்படை தளபதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் தற்போது 54 இராணுவ தனிமைப்படுத்தும் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இதில் இன்றுவரை சுமார் 3, 292 பேர் தனிமைப்படுத்தும் நிலையங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக  தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 4,526 பேர் தங்களது இறுதி சுகாதார பரிசோதனைகளை நிறைவு செய்துக் கொண்டு தனிமைப்படுத்தலுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என சந்தேகிக்கப்படும் முப்படை வீரர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் பாடசாலைகளில் தங்ககுமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளவர்கள்   தனிமைப்படுத்தும் நிலையங்களில் உள்ளவர்கள் அணிந்துள்ள பாதுகாப்பு கவசங்கள் போல் அல்லாது முகக் கவசங்கள் மாத்திரமே அணிந்திருப்பதாகவும் தெரிவித்த மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, அடிப்படையற்ற அறிக்கைகளை வெளியிடுவது நெறிமுறையானதல்ல எனவும், இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் அரசியல் இலாபம் ஈட்டும் வகையில் இதுபோன்ற தவறான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version