கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான தொற்றாளர்கள் மூவரே இன்று இதுவரை காணப்பட்ட நிலையில் , மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகமான தொற்றாளர்கள் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு, அவ்வாறு தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளதாக தெரிவித்தது.
தற்போதும் வெலிசறை கடற்படை முகாமின் வீரர்களை மையப்படுத்திய தொடர்பாடல் வட்டத்துக்குள் உள்ளோரே பெரும்பாலும் தற்போது கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், தற்போதும் வெளிசறை கடற்படை முகாமின் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளைச் செய்து முடித்துள்ளதாகவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.
இந்நிலையில் இன்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் 516 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 176 ஆகும். அவர்கள் நாடளாவிய ரீதியில் 29 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

