முகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர் காலை ஏழு மணியளவில், யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள செங்கோட்டையில் தனது காலைத் தொழுகையை செய்து முடித்திருந்தார்.

அப்போது யமுனைப் பாலம் அருகே அமைந்திருக்கும் ‘சுங்கச் சாவடியில்’ இருந்து புகை வருவதைக் கண்டார்.

காரணத்தைக் கண்டறிய அவர் உடனடியாக தனது சேவகர்களை அனுப்பினார். பிறகு, பிரதம அமைச்சரான ஹக்கீம் அஹ்ஸனுல்லா கான் மற்றும் கோட்டையின் பாதுகாப்பு பொறுப்பாளர் கேப்டன் டக்ளஸ் ஆகியோரை வரவழைத்தார்.

ஆங்கில ராணுவ சீருடையில் இருந்த சில இந்தியர்கள், வாளேந்தியவாறு யமுனைப் பாலத்தை தாண்டி வந்துவிட்டதாகவும், அவர்கள் ஆற்றின் கிழக்குப் பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு தீ வைத்ததுடன், அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

பேரரசருக்கு செய்தி

தகவல் அறிந்த முகலாயப் பேரரசர் நகரின் அனைத்து வாயில்களையும், கோட்டையின் கதவுகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டார்.

நான்கு மணியளவில் கிளர்ச்சியாளர்களின் தலைவர் பேரரசரை சந்திக்க விரும்புவதாக செய்தி அனுப்பினார்.

 

கிளர்ச்சியாளர்கள் கோட்டையின் திவான்-இ-காஸ் எனப்படும் சிறப்பு மன்றப் பகுதியின் முற்றத்தில் கூடி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது டெல்லியில் வசித்த அப்துல் லத்தீப் என்ற முக்கிய பிரமுகர் தனது நாட்குறிப்பில் 1857 மே 11ஆம் தேதியன்று இவ்வாறு எழுதியுள்ளார்: “சதுரங்கப் பலகையில் முற்றுகையிடப்பட்ட ராஜாவின் நிலையைப் போலவே முகலாயப் பேரரசரின் நிலைமையும் இக்கட்டானதாக மாறிவிட்டது.

நீண்ட நேரம் அமைதியாக இருந்தார் அரசர் பகதூர் ஷா ஜாபர். பிறகு தனது அமைதியை உடைத்த அவர், என்னைப் போன்ற முதியவரை ஏன் இவ்வாறு அவமதிக்கிறீர்கள்? இந்த புரட்சிக்கு காரணம் என்ன? எனது வாழ்க்கை ஏற்கனவே அந்திம காலத்தை நெருங்கிவிட்டது. எனது வாழ்வின் கடைசி நாட்களில் எனக்கு அமைதியும் தனிமையும் தான் தேவை” என்று கூறினார்.

அரசர் முன் கிளர்ச்சியாளர்கள் தலை வணங்குகிறார்கள். இந்த சம்பவத்தைப் பற்றிய மற்றொரு கோணத்தை சார்லஸ் மெட்காஃப், தனது Two Nations Narrative என்ற புத்தகத்தில் கொடுத்துள்ளார்.

“நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக பணிபுரிந்து வருகிறீர்கள், மாதந்தோறும் ஊதியம் பெறும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டீர்கள். அரசரின் பொக்கிஷத்தில் பணம் இல்லை. அவர் உங்களுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? என அஹ்ஸனுல்லா கான் தனது படையினரிடம் கேட்டார்” என்று இந்த புத்தகத்தில் மெட்காஃப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த வீரர்கள், “நாங்கள் நாடு முழுவதிலும் இருந்து செல்வங்களை உங்கள் கஜனாவுக்கு கொண்டு வருவோம்’ என்று பதிலளித்தனர்.

 

‘என்னிடம் இராணுவமோ ஆயுதமோ அல்லது பணமோ இல்லை’ என்று ஜாஃபர் பதிலளித்தார். அதற்கு ‘எங்களுக்கு தேவையானது உங்கள் கருணை மட்டுமே. உங்களுக்காக எல்லாவற்றையும் கொண்டு வருவோம் என்று புரட்சியாளர்கள் தெரிவித்தனர்'” என்கிறார் மெட்காஃப்.

“அரசர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். உடனடியாக உரிய முடிவை எடுக்க முடியாதவர் என்ற விமர்சனத்தை எப்போதும் எதிர் கொண்டிருந்த முகலாய பேரரசர், அன்று மட்டும் முடிவெடுப்பதில் தாமதம் செய்யவில்லை. ஒரு நாற்காலியில் அரசர் அமர்ந்து கொண்டார்.

 

அனைத்து வீரர்களும் வரிசையில் வந்து, அரசரின் முன் தலை குனிந்து வணங்கியபோது, அவர்களின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.” என்று மெட்காஃப் குறிப்பிடுகிறார்.

“அதன்பிறகு சில வீரர்கள் கோட்டையின் அறைகளில் தங்கினார்கள். சிலர் தங்கள் படுக்கைகளை திவான்-இ-காஸ் எனப்படும் சிறப்பு மன்றப் பகுதியில் விரித்தனர்” என்று அன்றைய தினத்தின் தொடர் நடவடிக்கைகளை விவரிக்கிறார் மெட்காஃப்.

வெள்ளி சிம்மாசனம் மற்றும் புதிய நாணயங்கள்

உண்மையில் பேரரசரால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, நிர்வகிக்கவோ முடியவில்லை. மாறாக அவரே கூட்டத்தினரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டார் என்றே சொல்லலாம். அடுத்த நாள் பேரரசர் மிகச்சிறந்த ஆடைகளின் ஒன்றை அணிந்திருந்தார்.

ஒரு பழைய வெள்ளி சிம்மாசனம் வெளியே கொண்டுவரப்பட்டது. சில ராணுவ அதிகாரிகளுக்கும் பிரபுக்களுக்கும் முகலாய சக்கரவர்த்தியின் சார்பில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

பேரரசரின் பெயரில் நாணயங்கள் அச்சிடும் பணிகள் தொடங்கின. ஒரு பெரிய பீரங்கியும் சுடப்பட்டது.

 

பீரங்கி தோட்டாக்களின் உறை, பசு மற்றும் பன்றி கொழுப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதே இந்தக் கிளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. 1857 மே 10ஆம் தேதியன்று இந்தக் கிளர்ச்சி தொடங்கியது, வங்காள லான்சர் பிரிவின் சில வீரர்கள் டெல்லியை நோக்கி அணிவகுத்தனர்.

1857 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆராய்ந்த பிரபல வரலாற்றாசிரியர் ராணா சஃபாவி இவ்வாறு கூறுகிறார்: “அந்தக் காலத்தில் என்பீல்ட் துப்பாக்கிகள் இருந்தன, அவற்றின் தோட்டாக்களின் உறையை பற்களால் கடித்து அகற்றி பயன்படுத்த வேண்டும். அந்த உறைகளில் மாடு மற்றும் பன்றி கொழுப்பு இருப்பதாக வதந்தி இருந்தது.”

“எனவே அந்த தோட்டாக்களைப் பயன்படுத்த முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்துக்களும் தயங்கினார்கள். இதைத் தவிர படையினரின் அதிருப்திக்கு வேறு சில காரணங்களும் இருந்தன. ராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கடலைத் தாண்டி செல்வது தங்கள் மதத்திற்கு எதிரானது என்று பிராமணர்கள் நம்பினார்கள்” என சஃபாவி குறிப்பிட்டுள்ளார்.

“ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை, இந்திய வீரர்களால் சுபேதார் பதவிக்கு மேலே உயர முடியவில்லை. இந்த இந்திய வீரர்கள் தங்களுடைய உயரதிகாரிகளான ஆங்கிலேயர்களை கொன்றுவிட்டு, 44 மைல் தொலைவில் உள்ள டெல்லியை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.”

மகிழ்ச்சியுடன் வரவேற்ற டெல்லி மக்கள்

தொடக்கத்தில் இவர்களை டெல்லி மக்கள் மனமார வரவேற்கவில்லை. மாறாக, சில இடங்களில் முகலாய அரசர் பகதூர் ஷாவுக்கு நெருக்கமானவர்கள்கூட கிளர்சியாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த கிளர்ச்சியாளர்கள் பேரரசருக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. தொடர்ந்து பல சட்ட திட்டங்களை மீறினார்கள். இவர்கள் அரசரின் அவைக்கு செல்வதற்கு முன்பு காலணிகளை கழற்றவில்லை என்றும், அரசருக்கு முன்னால் ஆயுதங்களை எடுத்துச் செல்வதாகவும், அரசருக்கு நெருக்கமானவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும், ‘Besieged: Voices From Delhi-1857’ என்ற பிரபல புத்தகத்தை எழுதியவருமான மஹ்மூத் ஃபாரூகி இவ்வாறு கூறுகிறார்: “டெல்லி மக்கள் மிகவும் கோபமடைந்தனர். ஆனால் அதற்குக் காரணம் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்பதல்ல. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை அனைவரும் தங்கள் விரும்பியபடி நடத்த விரும்பினார்கள் என்பதே அதற்கு காரணம்”.

“ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்திற்காக, நாற்பது வீரர்கள் தங்களுடைய வீட்டிற்குள் வந்து அமர்வதை யாரும் நிச்சயமாக விரும்பவில்லை.

மகாத்மா காந்தி, பகத்சிங் போன்றவர்களின் சகாப்தத்தில் விடுதலைப் போராட்டம் நடைபெற்றபோது கூட, தங்கள் வீட்டில் வந்து அனைவரும் உட்கார்ந்து கொள்வதையோ, காவல்துறையினர் தங்கள் வீட்டிற்கு வந்து அச்சுறுத்துவதையோ யாரும் விரும்பவில்லை. அதுதான் 1857 கிளர்ச்சி நடைபெற்ற சமயத்திலும் நடைபெற்றது.”

குழப்பங்களுக்கு மத்தியிலும் அமைப்பு பராமரிக்கப்பட்டது

இந்த நிகழ்வுகள் டெல்லி மக்களின் வாழ்க்கையில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அனைத்து கொந்தளிப்புகளையும் மீறி, இந்த அமைப்பு முன்பு இருந்ததைப் போலவே இருந்தது என்று ஃபாரூகி நம்புகிறார்.

“இந்திய சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை, ஒழுங்கின்மை எல்லா இடங்களிலும் பரவியது, படையினரிடையே ஒழுக்கம் இல்லை என்று 1857 இல் கூறப்பட்டது. ஆனால் அப்படியில்லை என்பதை நான் எனது புத்தகத்தில் தெளிவுபடுத்த முயற்சி செய்தேன்” என்று ஃபாரூகி கூறுகிறார்.

“ஆனால், ஒன்றரை லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரத்தில் முப்பதாயிரம் வீரர்கள் இருந்தால், குழப்பங்கள் ஏற்படும் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் எது எப்படியிருந்தபோதிலும், மிகவும் ஆச்சரியமான விஷயங்களையும் சிப்பாய் கிளர்ச்சியின்போது காணமுடிந்தது.

 

கட்டளைக்கு கீழ்படியாதவர்களை பிடித்து வருமாறு தளபதி தலைமை காவலரிடம் உத்தரவிட்டால், நான்கு வீரர்களை அவர் பிடித்துவந்து மன்னிப்பு கேட்க வைப்பார்.

போர்க்களத்தில் நான்கு சக்கர வாகனங்கள் 500தேவைப்பட்டால், அதில் குறைந்தபட்சம் நானூறாவது கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. அதாவது அவற்றை ஏற்பாடு செய்வதற்கான அமைப்பு இருந்தது” என்று தெளிவுபடுத்துகிறார் ஃபாரூகி.

“இதுபோன்ற ஏற்பாடுகள் அனைத்தும் தானாக நடந்துவிடாதல்லவா? ஒருவர் உத்தரவிட்டார், யாரோ அதைக் கொண்டு வந்தார்கள், அவை உரிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

அதற்கு பணம் வழங்கப்பட்டது. எந்தவொரு போராக இருந்தாலும், வீரர்கள் மட்டுமே சண்டையிடுவதில்லை. அந்த நேரத்தில் மட்டுமல்ல, இன்றும் கூட முன்னணியில் நின்று போரிடுபவர்களுக்கு தண்ணீர், உணவு, ஆயுதங்கள், மணல் மூட்டைகள், சுமைதூக்கிகள் மற்றும் வேறு பல பொருட்கள் தேவை. ஒரு சிப்பாயின் பின்னால் நான்கு தொழிலாளர்கள் இருந்தனர். அமைப்பு சரியாக இல்லையென்றால், இவை அனைத்தும் எங்கிருந்து வந்திருக்கும்? ”

56 ஆங்கிலேயப் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்

மே 12ஆம் தேதி காலை, டெல்லியில் ஆங்கிலேயர்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவானது. ஆனால் சில ஆங்கில பெண்கள் கோட்டையின் சமையலறைக்கு அருகிலுள்ள சில அறைகளில் தஞ்சம் புகுந்தனர். பேரரசரின் எதிர்ப்பையும் மீறி, கிளர்ச்சியாளர்கள் அவர்கள் அனைவரையும் கொன்றனர்.


“கிளர்ச்சியாளர்கள் தாக்கியபோது, ஏராளமான ஆங்கிலேயர்கள் நகரத்தை விட்டு வெளியேறிவிட்டனர், ஆனால் சில ஆண்களும் பெண்களும் கோட்டையின் உள்ளே வந்து, அங்கிருந்த ஒரு கட்டடத்தில் தஞ்சம் புகுந்தனர். அங்கு இருந்த 56 பேரில் பெரும்பாலனவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். இவர்கள் அனைவரையும் கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றி கொன்றனர்” என ராணா சஃபாவி கூறுகிறார்.

“பிறகு, இது தொடர்பாக முகலாய அரசர் பஹாதுர்ஷா ஜஃபர் மீது வழக்குத் தொடரப்பட்டபோது, இந்த கொலைகளுக்கு அவர்தான் காரணம் என்பது அவருக்கு எதிரான மிகப்பெரிய குற்றச்சாட்டு. இருப்பினும், ஜாகீர் டெஹால்வியின் புத்தகத்தைப் படித்தால், பேரரசர் கிளர்ச்சியாளர்களுக்கு விளக்கமாக சொல்லி, இதை தடுக்க முயன்றார் என்பதும், நீங்கள் அப்பாவிகளைக் கொல்கிறீர்கள், இதை எந்த மதமும் ஏற்றுக்கொள்ளாது என்று அறிவுறுத்தினார் என்பதையும் புரிந்துக் கொள்ள முடியும்” என்று ராணா சஃபாவி விளக்கமாக கூறுகிறார்.

பின்னர் தொடங்கிய ஆங்கிலேயர்களின் கொலை அத்தியாயம்

ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, நிலைமை மாறியது. டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆங்கிலேயர்கள் மீண்டும் தங்கள் இடங்களுக்குத் திரும்பினர். அம்பாலாவிலிருந்து வந்த வீரர்களை வீழ்த்தி, ஆங்கிலேயர்கள் மீண்டும் டெல்லிக்குள் நுழைந்தனர்.


ஆங்கிலேயர்கள் இங்கு படுகொலைகளை செய்யத் தொடங்கினர். கச்சா சாலா என்ற ஒரே பகுதியில் மட்டுமே 1400 பேர் கொல்லப்பட்டனர்.

அன்றைய சூழ்நிலைப் பற்றி, எட்வர்ட் விபார்ட் என்ற 19 வயது பிரிட்டிஷ் சிப்பாய் தனது மாமா கார்டனுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இதற்கு முன் நான் பல பயங்கரமான காட்சிகளைப் பார்த்துள்ளேன். ஆனால் நேற்று நான் பார்த்தது போன்ற ஒரு காட்சியை ஒருபோதும் என்னைப் பார்க்கச் செய்யாதே என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.”

“பெண்களை விட்டுவிட்டார்கள், ஆனால் அவர்களின் கணவர்கள் மற்றும் மகன்கள் கொல்லப்பட்டதைக் கண்ட அவர்களின் அலறல்களும், ஓலக்குரல்களும் இன்னும் எனது காதுகளில் எதிரொலிக்கின்றன.

அவர்கள் மீது எனக்கு எவ்வித பரிதாபமுமில்லை என்பது கடவுளுக்குத் தெரியும், ஆனால் வயதானவர்களை ஒன்றாக கொண்டு வந்து நிறுத்தி, என் கண்களுக்கு முன்னாலே சுட்டுக் கொலை செய்தார்கள். இந்த சம்பவங்களின் தாக்கம் இல்லாமல் என்னால் வாழ முடியாது” என்று அந்த 19 வயது ஆங்கிலேய சிப்பாய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட கலைஞர்கள்

நிலைமையை மேலும் தெளிவாக விளக்குகிறார் மஹ்மூத் பாரூக்கி. “1857 ஆம் ஆண்டு டெல்லி முழுவதும் குழப்பம் ஏற்பட்டது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்துடன் சண்டையிடும்போது அது இயல்பானதே. நகரத்தில் பெரும் பீதி ஏற்பட்டது.

ஆனால் 1857 இல் மீண்டும் ஆங்கிலேயர்கள் டெல்லிக்குள் நுழைந்த பிறகு, நகர மக்களை அவர்கள் ஒடுக்கிவிட்டார்கள். அங்கு ஆங்கிலேயர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கான சுவடே இல்லாதவாறு நிலைமை முன்போலவே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.”

“நகர மக்கள் அனைவரும் டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மழை மற்றும் குளிர்காலத்தில் ஆறு மாதங்கள் முழுவதும் திறந்த வெளியிலேயே இருந்தனர். அனைத்து வீடுகளும் கிட்டத்தட்ட சூறையாடப்பட்டன என்றே சொல்லலாம்” என்று நிலைமையை விவரிக்கிறார் மஹ்மூத் பாரூக்கி.

“அந்த நேரத்தில் டெல்லியில் வசித்து வந்த மிர்ஸா காலிப், 1857க்கு பிறகு 12 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அந்த காலகட்டத்தில் மொத்தம் 11 கஜல்களை மட்டுமே எழுதியுள்ளார், அதாவது ஆண்டுக்கு ஒரு படைப்புகூட வெளிவரவில்லை.

ஒருவேளை கவிஞர் மிர்ஸா காலிப் மற்றும் பிற கவிஞர்களின் கவித்துவமும் 1857ஆம் ஆண்டு படுகொலையில் சிதைந்து போய்விட்டதாக சொன்னால் அது தவறாக இருக்காது” என்று ஆதங்கப்படுகிறார் மஹ்முத் பாரூக்கி.

சரணடந்தார் பகதூர் ஷா ஜாஃபர்

ஆங்கிலேயர்கள் டெல்லியில் நுழைந்தபோது, பகதூர் ஷா ஜாஃபர் செங்கோட்டையின் பின்பக்க வழியாக ஒரு பல்லக்கில் அமர்ந்து, நிஜாமுதீன் கல்லறைக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து ஹுமாயூன் கல்லறைக்குச் சென்றார். 1857 செப்டம்பர் 18ஆம் தேதியன்று, கேப்டன் வில்லியம் ஹாட்சன் அவரை அங்கிருந்து கைது செய்தார்.

பிறகுர், சி.பி சாவுண்டர்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் அவர் இதைப் பற்றி எழுதியிருக்கிறார். “பேரரசர் ஜாபர் மிர்ஸா பாதுகாவலர் மற்றும் மதகுரு ஒருவருடன் பல்லக்கில் வெளியே வந்தார். அடுத்த பல்லக்கில், ராணி தனது மகன் மிர்சா ஜவான் பக்த் மற்றும் தந்தை மிர்சா குலி கான் ஆகியோருடன் வெளியே வந்தார்.”

“அவர்களின் பல்லக்குகள் இரண்டும் நிறுத்தப்பட்டன. அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்பதை என்னுடைய வாயிலிருந்து கேட்க விரும்புவதாக அரசர் செய்தி அனுப்பினார்.

நான் எனது குதிரையிலிருந்து இறங்கிச் சென்று அவரிடம் பேசினேன். அவரை காப்பாற்ற வேறுவிதமான முயற்சிகள் ஏதும் நடைபெறாவிட்டால், அவர்களுடைய உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் அளிப்பதாகவும், மன்னிப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தேன்.

அரசரை அவமானப்படுத்தமாட்டோம் என்றும் அவருடைய கெளரவத்தை காப்பாற்றுவோம் என்றும் சொன்னேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகதூர் ஷாவின் மூன்று மகன்களின் கொலை

பகதூர் ஷா ஜாபரின் உயிர் காப்பாற்றப்பட்டது, ஆனால் அவரது மகன்களான மிர்சா முகல், கிஜ்ர சுல்தான், அபுபக்கர் என மூன்று இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்கள் அப்போது ஆயுதம் ஏந்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வில்லியம் ஹாட்சன் தனது சகோதரிக்கு எழுதிய கடிதத்தில், “நான் இயல்பில் இரக்கமற்றவன் அல்லன். ஆனால் இவர்களை பூமியிலிருந்து விரட்டியடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சி கிடைப்பதாக நம்புகிறேன்” என்று குறிப்பிடுள்ளார். பிறகு அரசர் செங்கோட்டையில் ஒரு சாதாரண கைதியாக வைக்கப்பட்டார்.

‘Memoirs of my Indian Career’ என்ற புத்தகத்தில் சர் ஜார்ஜ் காம்ப்பெல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒரு விலங்கு கூண்டில் அடைக்கப்படுவது போல் அரசர் வைக்கப்பட்டிருந்தார்”.

பேரரசர் ஜாஃபரின் கடைசி நாட்கள்

அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த லெப்டினன்ட் சார்லஸ் கிரிஃபித்ஸ் தனது ‘Siege of Delhi’ என்ற புத்தகத்தில் பேரரசர் ஜாஃபரின் இறுதி நாட்கள் பற்றி எழுதியிருக்கிறார்.

“முகலாயப் பேரரசின் கடைசி பிரதிநிதி ஒரு எளிய படுக்கையில் அமர்ந்திருந்தார். அவரது வெண்மையான தாடி இடுப்பைத் தொட்டுக் கொண்டிருந்த்து. வெண்ணிற ஆடையும், வெள்ளை நிறத் தலைப்பாகையும் அணிந்திருந்தார்”.

“அவருக்கு பின் நின்றுக் கொண்டிருந்த இரண்டு பணியாளர்கள் மயிலிறகு விசிறியால் வீசிக் கொண்டிருந்தனர். அரசரின் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.

அவர்களின் கண்கள் தரையில் நிலைகுத்தியிருந்தன. ஒரு பிரிட்டிஷ் அதிகாரி பேரரசரிடமிருந்து மூன்று அடி தூரத்தில் அமர்ந்திருந்தார்” என்று லெப்டினன்ட் சார்லஸ் கிரிஃபித்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“ஆங்கிலேயர்களின் இரு சிப்பாய்கள் கையில் ஈட்டியுடன் நின்றுக் கொண்டிருந்தார்கள். யாராவது பேரரசரைக் காப்பாற்ற முயன்றால், உடனடியாக அவர்களைக் கொல்ல வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விலங்குகளைப் போல அறையில் அடைக்கப்பட்டிருந்தார்

முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர் மிகவும் அவமதிக்கப்பட்டார், அரசர், எவ்வாறு கைதியாக இருக்கிறார் என்பதை பார்க்க செங்கோட்டைக்கு ஆங்கிலேயர்கள் கூட்டமாக வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

“செங்கோட்டையைப் பார்க்கவும், பகதூர் ஷா ஜாபர் எப்படி இருக்கிறார் என்பதை பார்க்கவும் ஆங்கிலேயர்கள் சுற்றுலாப் பயணிகளைப் போல கும்பலாக வந்தார்கள்.

இந்த நிலையில் நிச்சயமாக தனது வாழ்நாள் முழுவதுமே, மரணம் எப்போது வரும் என்று அரசர் காத்திருந்தார் என்றே சொல்லலாம்” என்று மஹ்மூத் ஃபாரூகி கூறுகிறார்.

“அவர் டெல்லியில் இருந்து ரங்கூனுக்கு அனுப்பப்பட்டார். அந்த காலகட்டத்திலேயே பர்மாவின் அரசர் இந்தியாவின் ரத்னகிரிக்கு அனுப்பப்பட்டார். இறுதி காலத்தில், பகதூர் ஷா ஜாஃபர் ‘அடக்கம் செய்ய இரண்டு கஜ இடம் கூட கிடைக்காத துரதிருஷ்டசாலி ஆனார்” என்று எழுதியவை மிகவும் சரியானவை.

பேரரசரின் மரணம்

1862 நவம்பர் ஏழாம் நாளன்று, சில பிரிட்டிஷ் வீரர்கள், ரங்கூன் சிறைச்சாலையில் இருந்து 87 வயதான முதியவரின் சடலத்தை சிறை முற்றத்தில் ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த கல்லறைக்கு கொண்டு சென்றனர்.

இறந்தவரின் இரண்டு மகன்களும் ஒரு பெரிய தாடி வைத்திருந்த மதகுருவும் சடலத்துடன் நடந்து சென்றனர். இறுதிச் சடங்கில் பெண்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

சந்தையில் இருந்த சிலருக்கு இது குறித்து ஒரு துப்பு கிடைத்து, இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்வதற்காக அவர்கள் சென்றார்கள். ஆனால் ஆயுதமேந்திய வீரர்கள் அவர்களை அருகில் வர விடவில்லை.

கல்லறையில் வைப்பதற்கு முன்னதாக சடலத்தின் மீது சுண்ணாம்பு தெளிக்கப்பட்டது. இதனால் சடலம் மிக விரைவாக மண்ணோடு மண்ணாகிவிடும் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள்.

ஒரு வாரம் கழித்து, லண்டனுக்கு அனுப்பிய அறிக்கையில் பிரிட்டிஷ் கமிஷனர் எச்.என். டேவிஸ் இவ்வாறு குறிப்பிட்டுளார்:

“அடக்கம் செய்த பிறகு மீதமுள்ள அரச கைதிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்காக நான் சென்றேன். அங்கு எல்லாமே சரியாக இருக்கிறது. முதியவரின் மரணத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை. அவரது மரணம் தொண்டை புண்ணால் ஏற்பட்டது.”

“காலை ஐந்து மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அன்றே அரசர் அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய கல்லறையைச் சுற்றி ஒரு மூங்கில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலி அழிந்து போவதற்கு முன்னதாக அந்தப்பகுதி முழுவதிலும் புல் முளைத்து புதர் உருவாகிவிடும்.

முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கடைசிப் பேரரசர் இங்கு அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாகி போனது யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே இருந்துவிடும்” என்று முகலாய பேரரசிற்கு முற்றுப்புள்ளி வைத்ததை, தனது அறிக்கையில் முத்தாய்ப்பாய் சொல்லி முடித்திருந்தார் பிரிட்டிஷ் கமிஷனர் எச்.என். டேவிஸ்.

Share.
Leave A Reply

Exit mobile version