ஆறு வருட சிறைத் தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருட காலமாக தலைமறவாகியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாகியிருந்த காலப் பகுதிகளில் வீடுகளை கொள்ளையடிப்பதில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இன்று (12) பியகம சியம்பலாபே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பிரதான சந்தேக நபருடன் இணைந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈட்பட்டுள்ளதாக கூறப்படும் இரு சகாக்களும் லுனுகம்வெஹர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளை தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் இக்கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த மேலும் நால்வரைத் தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர்.
இகந்தக் கொள்ளைக் கோஷ்டியின் தலைவர் பிரதான சந்தேக நபர் என தெரியவந்துள்ளதோடு இந்தக் குழுவினரால் ஹெய்யந்துடுவ, சூரியவெவ, படல்கும்புர,வீரம்புகெதர, குளியாப்பிடிய மற்றும் பியகம போன்ற பிரதேசங்களில் பத்து வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் அபகரிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொள்ளை நடவடிக்கைக்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு நவீன கார்கள், ஒரு ட்ரில் இயந்திரம், கூரிய கத்தி, சில முகமூடிகள், கையுறைகள் மற்றும் பூட் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இந்தக் குழுவினர் அதி நவீன கையடக்கத் தொலைபேசியை உபயோகித்து கூகுள் மெப் ஊடாக நாட்டிலுள்ள பணக்கார, சொகுசு வீடுகளைத் தேடி நவீன வாகனங்களில் சென்று இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதோடு கொள்ளையடிக்கப்படும் தங்க நகைகளை தற்போது தலைமறைவாகியுள்ள நான்கு கொள்ளையர்கள் ஊடாக விற்பனை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் பெறப்பட்ட பணத்தால் பிரதான சந்தேக நபர் நவீன ரக கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்காகச் சென்ற உப பொலிஸ் பரிசோதகரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிச் சென்றுள்ளதோடு பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து ஆறு வருட கால சிறைத் தண்டனையளித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேக நபர் இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தபோதிலும் அதற்கும் இத்தீர்ப்பே வழங்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
பிரதான சந்தேக நபர் (38) மல்வானை கனுகெடிய பிரதேசத்தைச் சேர்நதவராவார். ஏனைய இருவரும் இருவரும் (23 மற்றும் 26 வயது)லுனுகம்வெஹர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் மூவரும் மஹர நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர். சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.