தோல் அழற்சியை உண்டாக்கும், கொரோனா வைரஸ் உடன் தொடர்புடையது என்று கருதப்படும், ஒரு விதமான நோய்க்கு அமெரிக்கா மற்றும் மற்றும் பிரிட்டனில் உள்ள பல குழந்தைகள் ஆளாகியுள்ளனர்.
இவர்களில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையும் உள்ளது.
பிரிட்டனில் இதன் காரணமாக சுமார் 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற ஐரோப்பிய நாடுகளிலும் தோலில் வீக்கமடைந்து சிவந்து போதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு திறன் காரணமா?
உடலில் நோயை ஏற்படுத்தும் காரணிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு அமைப்பு தாமதமான தாக்குதலில் ஈடுபடுவதால் நல்ல அணுக்களும் பாதிக்கப்படுவது இந்த நோய் உண்டாக காரணம் என்று கருதப்படுகிறது.
மிகவும் அரிதான, ஆனால் ஆபத்தான இந்த தொற்று குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் அதுகுறித்து கண்காணிக்குமாறு பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவை அதன் மருத்துவர்களுக்கு ஏப்ரல் மாதமே அறிவுறுத்தியிருந்தது.
இதன் காரணமாக உயிரிழந்த ஒரு 14 வயது குழந்தை உட்பட எட்டு குழந்தைகளுக்கு லண்டனின் இந்த நோய் ஏற்பட்டுள்ளது இந்த அறிவுறுத்தலுக்கு பிறகு கண்டறியப்பட்டது.
அதிகமான காய்ச்சல், தோல் சிவப்பது, கண்கள் சிவப்பது, வீக்கம் மற்றும் உடல் வலி ஆகிய அறிகுறிகளுடன் எவலினா லண்டன் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த அனைத்து குழந்தைகளுக்கும் இருந்தன.
கவாசகி டிசீஸ் ஷாக் சின்ட்ரோம் எனப்படும் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை தாக்கும் ஓர் அரிய நோயைப் போன்று இதுவும் ஒரு விவரிக்க முடியாத புதிய நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள நோய் இளம் வயதில் உள்ள குழந்தைகளை மட்டுமல்லாது 16 வயது வரை உள்ள குழந்தைகளையும் தாக்குகிறது.
அவர்களின் மிகச் சிறுபான்மையினர் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
கோவிட்- 19 பெருந்தொற்றுக்கு பின்
“கோவிட்- 19 பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில் இப்படி ஒரு நோய் குழந்தைகளுக்கு உண்டாவது இந்த இரண்டுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உண்டு என்பதை காட்டுகிறது,” என்கிறார் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் குழந்தைகள் தொற்றுநோய் மற்றும் நோயெதிர்ப்பு பிரிவின் விரிவுரையாளர் டாக்டர் லிஸ் வைட்டேக்கர்.
“மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்புதான் பிரிட்டனில் கோவிட்- 19 உச்சநிலையை அடைந்தது. அதன் பின்பு நாம் இப்போது இது போன்ற ஒரு நோய் குழந்தைகளுக்கு வருவதைப் பார்க்கிறோம். இது நோய்த்தொற்றுப் பரவலுக்குப் பிந்தைய நிலை என்றே நான் கருதுகிறேன்,” என்கிறார் அவர்.
அதாவது நோய்த்தொற்று உண்டான பின் நோய் எதிர்ப்பொருட்கள் உடலில் அதிகரித்து, அவை செயல்படுவதுடன் இந்த நோய் தொடர்புபடுத்தப்படுகிறது.
குழந்தைகளை விளையாட அனுமதிக்கலாமா?
ராயல் காலேஜ் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்டு ஹெல்த்-இன் தலைவரான பேராசிரியர் ரஸ்ஸல் வைனர், இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளான பல குழந்தைகள் சிகிச்சை மூலம் குணம் அடைந்துள்ளதாகவும், வீடு திரும்பத் தொடங்கியுள்ளதாகவும் கூறுகிறார்.
இது அரிதினும் அரிதான ஒரு நோய் என்று அவர் குறிப்பிட்டார்.
பெரும்பாலான குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் அல்லது அறிகுறிகள் தென்படாமல் ’அசிம்டமேட்டிக்’ நிலையில் இருக்கும் சூழல் ஏன் உண்டாகிறது என்பதை இந்த அழற்சி நோய் குறித்து புரிந்து கொள்வதன் மூலம் அறிய முடியும் என்கிறார் அவர்.
அமெரிக்காவில் ஆராய்ச்சி
அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இதே போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 15 மாகாணங்கள் இந்த நோய் ஏன் உண்டானது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக நியூயார்க் மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ கியோமோ தெரிவித்துள்ளார்.
நியூயார்க் மாகாணத்தில் இந்த அழற்சி நோய் உண்டான 82 குழந்தைகளில் 53 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது அல்லது வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருட்கள் உடலில் உருவாகி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவ சேவை வழங்குநர்களுக்கு இந்த நோய் குறித்து, அமெரிக்காவின் நோய்தடுப்பு மையம் இந்த வாரத்துக்குள் எச்சரிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்ட விளக்கங்களை அளிக்க உள்ளது.
பிப்ரவரி மாத மத்தியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை இத்தாலியின் மிகவும் மோசமான வைரஸ் பாதிப்புக்குள்ளான பெர்காமோ நகரில் 10 குழந்தைகளுக்கு இந்த அழற்சி நோய் உண்டாகியுள்ளது. அவர்கள் அனைவருக்குமான சராசரி வயது ஏழு.
இந்த குழந்தைகளிடம் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர்களில் எட்டுப் பேருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததற்கான அறிகுறிகள் தெரிந்தன.
எனினும் இந்த சோதனை முடிவுகள் நூறு சதவிகிதம் துல்லியமானவை அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நோய் குழந்தைகளுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று கூற முடியாது என்று பிரிட்டனிலுள்ள குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பீடியாட்ரிக் இன்ஃப்லமேட்டரி மல்டிசிஸ்டம் சின்ரோம் ( paediatric inflammatory multisystem syndrome ) என்று அவர்கள் கூறும் இந்த நோய் குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் உடன் சேர்ந்து அவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.