கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று, அருமைக்கண்ணுவை தற்கொலைக்குத் தூண்டியது மற்றும் முதியோர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் மகன்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீர்காழி அருகே இரண்டு மகன்கள்-மருமகள்கள் கவனிக்காததால், மனமுடைந்த மூதாட்டி விஷமருந்தி உயிருக்குப் போராடினார். அந்நிலையிலும்கூட தாயைக் காப்பாற்ற முன்வராத மகன்களின் செயலை நினைத்து, அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

இன்ஸ்பெக்டர் சதீஷ்

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாங்கூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர், கலியபெருமாளின் மனைவி அருமைக்கண்ணு. வயது 70. இவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அருமைக்கண்ணுவுக்கு 2 மகன்கள். ராகவனுக்கு திருமணமாகி மங்கையர்கரசி என்ற மனைவியும், வீரமணிக்கு திருமணமாகி கண்ணகி என்ற மனைவியும் உள்ளனர்.

மூத்தமகன் ராகவன், வீட்டில் சில நாள்கள் வசித்த அருமைக்கண்ணுவை மகனும் மருமகளும் புறக்கணித்ததால், இளையமகன் வீரமணியின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அவர்களும் உணவு வழங்காததுடன், உரிய கவனிப்பும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இறுதி நாள்களில் அருமைக்கண்ணு கூலி வேலை செய்து காலத்தைக் கடத்தியுள்ளார்.

முதுமையின் காரணமாக, தற்போது அருமைக்கண்ணுக்கு கூலி வேலைக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவுக்கும், மருந்துக்கும் தவித்திருக்கிறார். தன் பரிதாப நிலை பற்றி மகன்களிடம் கெஞ்சியும் பலனில்லை. மனமுடைந்து, விரக்தியின் எல்லைக்குச் சென்ற அநாதையாக்கப்பட்ட அந்தத் தாய், அருகிலுள்ள தோப்பில் அரளி விதையை அரைத்து உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றிருக்கிறார்.

உயிருக்குப் போராடிய அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், மகன்களுக்குத் தகவல் சொல்லியும் அவர்கள் வரவில்லை.

தாய் அருமைக்கண்ணு

108 ஆம்புலன்ஸ் வந்தபோது, மூதாட்டியின் உறவினர்கள் யாரும் உடன் செல்ல முன் வராததால், ஆம்புலன்ஸ் அவரை ஏற்றிச்செல்லாமல் திரும்பிச் சென்ற கொடுமையும் நடந்திருக்கிறது.

இதற்கிடையில் சிலர் அருமைக்கண்ணுவிடம் பேச, “ரெண்டு புள்ளைங்க இருந்தும் சோறு தண்ணி இல்ல. அப்பறம் எப்படி வாழறது. அதான் அரளி விதையைக் குடிச்சேன்” என்று தன் சோகத்தை குமுறியிருக்கிறார்.

இதுபற்றி தகவலறிந்த திருவெண்காடு இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீஸார் அங்கு வந்து, அருமைக்கண்ணை சிகிச்சைக்குக் கொண்டுசெல்ல இரு மகன்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்பின் நடந்தவற்றை திருவெண்காடு  காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சதீஷ் விவரித்தார். “மீண்டும் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் அருமைக்கண்ணு இறந்துவிட்டார்.

இச்செய்தியை காவல்துறைக்கும் தெரிவிக்காமல் அடக்கம் செய்ய முயற்சி நடக்கவே, அவரது உடலைக் கைப்பற்றி  பரிசோதனைக்கு அனுப்பினோம். யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை.

கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று, அருமைக்கண்ணுவை  தற்கொலைக்குத் தூண்டியது  மற்றும் முதியோர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்  கீழ் மகன்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவர்கள்மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார் உறுதியாக.

 

Share.
Leave A Reply

Exit mobile version