போலந்து நாட்டு கத்தோலிக்கத் திருச்சபையில் சிறார்களிடம் நிகழ்த்தப்பட்ட பாலியல் மீறல்களை பாதிரியார்கள் மூடி மறைத்ததாக எழும் புகார்களை கத்தோலிக்கத் தலைமையகமான வத்திகான் விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டு கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடத்தில் இருக்கும் பேராயர் வோஜ்சீச் போலக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தப் புகார்கள் தொடர்பாக சனிக்கிழமை புதியதொரு ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கும்படி திருச்சபையின் தலைமையில் உள்ளவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

தாங்கள் குழந்தையாக இருந்தபோது தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பாதிரியார் ஒருவரை எதிர்த்துப் போராட முயலும் ஓர் அண்ணன்-தம்பியின் கதையைச் சொல்கிறது இந்தப் படம். ‘ஹைட் அன்ட் சீக்’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் யூ டியூபில் 19 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பில் அண்ணன், தம்பியான மாரெக், தோமாஸ் சீகெய்லெஸ்கி தயாரித்த இரண்டாவது ஆவணப்படம் இது.

விரைவில் இது தொடர்பாக வத்திகான் விசாரணைக்கு உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்ட இருவர் திருச்சபையில், இதை மூடிமறைக்க காரணமாக இருந்தவர்களை தங்கள் செயலுக்கு பொறுப்பாக்க முயல்கிறார்கள். இந்த முயற்சியை பின் தொடர்ந்து செல்கிறது படம். மூத்த ஆயர் ஒருவருக்கு இந்தக் குற்றச்சாட்டு பற்றித் தெரியும் என்றாலும் பல ஆண்டுகளாக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டதாக இந்தப் படம் குற்றம்சாட்டுகிறது.

கத்தோலிக்க செய்தி நிறுவனமான கே.ஏ.ஐ. வெளியிட்ட வீடியோவில் பேசியிருக்கும் பேராயர் போலக்,

“திருச்சபையில் உள்ள சிறார்கள் மற்றும் இளம்பருவத்தில் இருப்பவர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மதிக்கப்படுவதில்லை என்பதை இந்தப்படம் காட்டுகிறது. முறைகேடு செய்கிறவர்களை மூடி மறைத்து, திருச்சபையைப் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்படும் போலியான தர்க்கங்களை நம்பவேண்டாம் என்று பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள், பெற்றோர், கல்வியாளர்கள் ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன். குற்றங்களை மறைப்பதை நாம் அனுமதிப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் கடந்த ஆண்டு வெளியிட்ட அப்போஸ்தலக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்த ஆவணப்படத்தில் கூறப்படும் புகார்களை விசாரிக்க வேண்டும் என்று பேராயர் போலக் மேலும் கூறியுள்ளார்.

கத்தோலிக்க குருமார்கள் செய்யும் பாலியல் முறைகேடுகள், மூடிமறைப்புகள் பற்றி அவர்களுக்கு மேலுள்ள குருமார்கள் புகார் செய்யவேண்டும் என்பதை அந்த அப்போஸ்தலக் கடிதம் கட்டாயமாக்கியது.

இந்த ஆவணப்படத் தொடரின் முதல் படமான ‘டெல் நோ ஒன்’ என்ற படத்தை சீகெய்லெஸ்கி சகோதரர்கள் 2019 மே மாதம் வெளியிட்டனர். இந்தப் படம் 23 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. திருச்சபையில் நடக்கும் பாலியல் முறைகேடுகள் பற்றி பரவலான கோபத்தையும், தேசிய அளவிலான விவாதத்தையும் இந்தப் படம் கிளறியது.

ரகசிய கேமரா பதிவுகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றது. இப்படத்தில் பேசிய சில பாதிரியார்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

சிறாரிடம் பாலியல் முறைகேடுகள் செய்வோருக்கான சிறைத் தண்டனையை இரட்டிப்பாக்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவிப்பதற்கும் இந்தப்படமே தூண்டுகோலாக இருந்தது. சிறாரிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் பாதிரியார்களை விசாரிக்க ஆணையம் ஒன்றை அமைக்கவும் அரசு உறுதியளித்தது. ஆனால், அது இன்னும் நடக்கவில்லை.

போலந்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 400 குருமார்கள் சிறுவர்கள், இளம்பருவத்தினரிடம் முறைகேடாக நடந்துகொண்டதாக போலந்து திருச்சபை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒப்புக்கொண்டது

Share.
Leave A Reply

Exit mobile version