தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்தமையினால், தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக இன்று வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் புரியவில்லை என கூறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, மாறாக உலகின் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காவின் எவ்.பீ.ஐ (FBI) நிறுவனத்தினால் பெயரிடப்பட்ட அமைப்பிற்கு எதிராகவே யுத்தம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் சிறார்கள் தற்போது புலிகள் அமைப்பினால் கடத்திச் செல்லப்படுவதில்லை எனவும், தமிழ் அரசியல்வாதிகள் புலிகள் தொடர்பில் அச்சம் கொண்டு தற்போது வாழவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமையினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தலை நடத்தி, அந்த பிரதேச மக்களின் இறையாண்மை அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றி பெற்றதன் ஊடாக முழு உலகத்தையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை முப்படையினர் மற்றும் போலீஸார், இன்று கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுகாதார பிரிவுடன் ஒன்றிணைந்து படையினர் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதம், வெள்ளப்பெருக்கு, தொற்றுநோய் என அனைத்து அனர்த்த சூழ்நிலைகளிலும், முப்படையினர் பொதுமக்களை பாதுகாக்க முன்நின்று செயற்பட்டு வருவதை மஹிந்த ராஜபக்ஷ நினைவூட்டியுள்ளார்.

சிவில் மற்றும் இராணுவம் என செயற்கையான பிளவொன்றை ஏற்படுத்துவதற்கு கடந்த நல்லாட்சி அரசியல் கட்சிகள் மேற்கொண்ட வஞ்சகமான முயற்சிகளை கண்டிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஓய்வுப் பெற்ற முப்படை அதிகாரிகளை, ஏதேனும் ஒரு பதவிக்கு நியமிக்கும் போது அதனை இராணுவமயமாக்கல் என அழைப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற முப்படையினரும் சிவில் பிரஜைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக முறைமைக்கு அப்பால் வந்த அனைத்து சவால்களையும் தோற்கடித்து, இந்த நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை அடிப்படையிலான இறையாண்மை அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு முப்படையினரும் போலீஸாரும் ஆற்றியுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பணியையும் தாம் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முழு உலகினையும் வியப்பில் ஆழ்த்திய யுத்த வெற்றியின் பதினோறாவது ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கம் முப்படையினரை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்தமை, முப்படையில் தற்போது பணியாற்றுமற்றும் ஓய்வுபெற்ற அதிகளவான வீரர்களை வேட்டையாடி, அவமானத்திற்கு உட்படுத்தியமையினை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்படும் என்பதை தான் உறுதிப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version