குஜராத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு வந்து சேர்ந்த பெண் இறந்துவிட்ட நிலையில், அதை அறியாத அவரது குழந்தை அவரை எழுப்ப முயன்ற சம்பவம் அனைவரையும் வேதனை

ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறுகிறது.

இந்நிலையில் பீகாரில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவம், புலம்பெயர் தொழிலாளர்களின் சோகத்திற்கு முடிவே இல்லையா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் இறந்துவிட்டார். சரியாக சாப்பிடாததால் ரெயிலில் ஏறும்போதே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பசி, உடல் வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர்ச்சத்து குறைந்த நிலையில், ரெயில் முசாபர்பூரை நெருங்கும்போது அவர் இறந்துள்ளார்.

அவரது உடல் ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாய் இறந்ததை அறியாத அவரது பச்சிளம் குழந்தை, தாயை எழுப்ப முயற்சிக்கிறது. தாய் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுக்கிறது. அந்த குழந்தையை மூத்த குழந்தை தடுத்து வெளியே இழுக்கிறது. இதைப் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதே ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தையும் உயிரிழந்துவிட்டது. அந்த குழந்தையின் பெற்றோர் டெல்லியில் இருந்து வந்த மற்றொரு சிறப்பு ரெயில் மூலம் வந்தவர்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version