இலங்கையின் வடமேல் மாகாணத்திற்கு வெட்டுக்கிளிகள் பிரவேசித்துள்ள நிலையில், அங்குள்ள விவசாயிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் பகுதியிலேயே இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இலங்கைக்குள் பிரவேசித்துள்ள இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான பயிர்கள் மற்றும் மரங்களின் இலைகளை உட்கொள்ளும் திறன் கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வெட்டுக்கிளிகள் தொடர்பில் தமது திணைக்களத்திற்கு நேற்று முன்தினம் (30) முதன் முறையாக தகவல் கிடைத்திருந்ததாகவும், அது தொடர்பில் நேற்றைய தினம் (மே 31) முதல் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் ஊடாக, இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான மரங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த வெட்டுக்கிளிகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தத் தலறினால் எதிர்காலத்தில் இது இலங்கைக்கு பாரிய பிரச்சினையாக இது உருவெடுக்கக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

இந்தியாவை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளியும், இலங்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெட்டுக்கிளியும் ஒன்றா என வினவினோம். இந்தியாவை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளியும் இலங்கையை அச்சுறுத்தும் வெட்டுக்கிளியும் வேறுபட்டவை என விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் குறிப்பிட்டார்.

இந்த வெட்டுக்கிளிகள் இலங்கைக்குள் எவ்வாறு படையெடுத்தன எனவும் அவரிடம் வினவினோம்.இந்த வெட்டுக்கிளிகள் இலங்கைக்குள் படையெடுத்தவிதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்குள் ஏற்கனவே இருந்த வெட்டுக்கிளிகளின் இனப் பெருக்கத்தினால் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக குறித்த வெட்டுக்கிளி வெளிநாடொன்றிலிருந்து அண்மை காலத்தில் வந்திருப்பதற்கான வாய்ப்பில்லை என்றே தாம் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த வெட்டுக்கிளி சில சந்தர்ப்பங்களில் மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கைக்குள் வந்திருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், குறித்த வெட்டுக்கிளியின் மாதிரிகளை பெற்று அது தொடர்பிலான ஆய்வுகளை நடத்தி வருவதாகவும்.வீரகோன் தெரிவித்தார்.எவ்வாறாயினும், குறித்த வெட்டுக்கிளி குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம பகுதியில் மாத்திரமே படையெடுத்துள்ளமை தொடர்பில் முதற்கட்டமாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், அந்த பகுதியில் மாத்திரம் குறித்த வெட்டுக்கிளி இருப்பதற்கான வாய்ப்பு கிடையாது என கூறிய அவர், மேலும் சில பகுதிகளை நோக்கியும் வெட்டுக்கிளி படையெடுத்திருக்கக்கூடும் என அவர் சந்தேகம் தெரிவிக்கின்றார்.குறித்த ஒரு பகுதியில் மாத்திரம் திடீரென வெட்டுக்கிளிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் விவசாய திணைக்கள அதிகாரிகளை தெளிவூட்டி வருவதாகவும் அவர் கூறினார்.எவ்வாறு இந்த வெட்டுக்கிளிகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது எனவும் பிபிசி தமிழ் வீரகோனிடம் வினவியது.கட்டுப்படுத்தக்கூடிய அளவிலான வெட்டுக்கிளிகள் இருக்குமானால், அவற்றை கைகளில் எடுத்து அழிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறின்றி, தனிநபர் ஒருவரினால் கட்டுப்படுத்த முடியாத அளவு வெட்டுக்கிளிகள் படையெடுத்திருக்குமேயானால், அந்த விடயம் தொடர்பில் தமது திணைக்களத்தின் உதவிகளுடன் கிருமி நாசினிகள் தெளித்து அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

இவ்வாறான வெட்டுக்கிளிகளை ஆரம்பத்திலேயே முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே சிறந்தது என வீரகோன் தெரிவிக்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version