யுத்த ஆயுதங்களுக்காக செலவழிக்கின்ற நிதியை கொரோனா போன்ற தொற்றுநோய்க்கு எதிரான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் படி திருத்தந்தை பிரான்சிஸ் சனிக்கிழமை வத்திக்கானில் இடம்பெற்ற புனித ஜெபமாலை பிரார்த்தனையின் போது உலகத்தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
சுமார் மூன்று மாதங்களின் பின் கடந்த 30 ஆம் திகதி வத்திகானில், திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் புனித ஜெபமாலை பிரார்த்தனை இடம்பெற்றது.
130 பேருடன் இடம்பெற்ற இந்த வெளிப்புற பிரார்த்தனை சேவையில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் தமது இறுதி பிரார்த்தனையின் போது இதனை வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது, தேசிய தலைவர்கள் தொலைநோக்கு மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும், இப்போது மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் மற்றும் நீண்டகால பொருளாதார மற்றும் சமூக தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.
மேலும் அதிக ஆயுதங்களை வைத்திருக்கவும், அவற்றை முழுமையாக்கவும் பெரும் தொகை பணம் செலவிடப்படுகின்றன.
மாறாக எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகளைத் தடுக்கவும் போதுமான ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்கு இந்தப் பணத்தை செலவழிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
வாத்திக்கானில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வில் உலகம் முழுவதும் உள்ள 50 க்கும் மேற்பட்ட கத்தோலிக்க ஆலயங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இத்தாலி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கையாக செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் மே 18 அன்று முழுமையாக திறக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.