Site icon ilakkiyainfo

வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு – அமெரிக்க தூதர் மன்னிப்பு கோரினார்

வாஷிங்டனில் நடந்த வன்முறையில் காந்தி சிலை சேதமடைந்ததற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரினார்.

அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு (46) என்பவர், மின்னியாபொலீஸ் நகரில் போலீசார் பிடியில் கடந்த 25-ம் தேதி கொலை செய்யப்பட்டது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படுகொலைக்கு நீதி வேண்டி கருப்பர் இன மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்குகளையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கி தொடர்ந்து 8-வது நாளாக போராடி வருகின்றனர்.

அமெரிக்கா முழுவதும் 40-க்கும் அதிகமான நகரங்களில் வன்முறை தாண்டவமாடி வருகிறது. பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களோடு உள்ளே நுழைந்த நைஜீரிய அகதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக போராட்டக்காரர்களே புகார் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை போராட்ட கும்பலில் சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் பூங்கா காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், இந்திய தூதரகத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக அமெரிக்கா சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இதனை இந்திய அரசு கருணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version