ரெயில் புறப்பட்ட நிலையிலும் 4 மாத குழந்தையின் பசியை போக்க, ரெயில் பின்னாடி மின்னல் வேகத்தில் ஓடி பால் பாக்கெட்டை பெற்றோரிடம் வழங்கிய போலீஸ்காரரை மத்திய மந்திரி பாராட்டியுள்ளார்.

பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிறப்பு ரெயில்களில் பயணம் செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான வகையில் உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் மத்திய மாநில அரசுகள் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் 4 மாத குழந்தைக்கு பெற்றோர் பால் இல்லாமல் தவித்த நிலையில், ஆர்.பி.எஃப். போலீஸ்காரர் ரெயில் புறப்பட்ட நிலையிலும், ரெயிலுக்குப் பின்னால் மின்னல் வேகத்தில் ஓடி குழந்தையின் பெற்றோரிடம் பால் பாக்கெட்டை வழங்கியுள்ளார்.

சிசிடிவி-யில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. போலீஸ்காரர் செயலை பாராட்டிய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், அவருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு ரெயில் ஒன்று சென்றுள்ளது. அந்த ரெயிலில் ஷரிஃப் ஹாஷ்மி என்ற பெண் அவரது கணவர் ஹசீன் ஹாஷ்மியுடன் பயணம் செய்துள்ளார். அவர்களுக்கு நான்கு மாத குழந்தை உள்ளது.

ரெயில் கடந்த 31-ந்தேதி போபால் ரெயில்வே நிலையம் வந்துள்ளது. இதற்கு முன் நின்ற சில ரெயில்வே நிலையங்களில் குழந்தைக்கு பால் வாங்க முயற்சி செய்துள்ளார் ஷரிஃப் ஹாஷ்மி. ஆனால் பால் கிடைக்கவில்லை. இதனால் பசியால் குழந்தை அழுது கொண்டே இருந்தது.

ரெயில் போபால் ரெயில் நிலையத்தில் நின்றதும் பாதுகாப்பு பணியில் இருந்து ஆர்பிஎஃப் போலீஸ்காரர் இந்தர் சிங் யாதவிடம் நிலைமையை கூறியுள்ளார். ரெயில் நிலையத்தில் ரெயில் 10 நிமிடம் மட்டுமே நிற்கும் என்றாலும், அவர் பரிதாபப்பட்டு குழந்தைக்கு பால் பாக்கெட் வாங்கி கொடுக்க முடிவு செய்தார்.

ரெயில் நிலையத்திற்குள் பால் இல்லாததால் வெளியில் உள்ள கடையில் சென்று பால் பாக்கெட் வாங்கி வந்தார். அவர் ரெயில் நிலையத்திற்குள் நுழையவும் ரெயில் புறப்பட்டது. ஆனால், தன்னுடைய ஓட்டத்திறமையை பயன்படுத்தி மின்னல் வேகத்தில் ஓடி அந்த பெண்ணிடம் பால் பாக்கெட்டை ஒப்படைத்தார். குழந்தையின் பெற்றோர் இந்தர் சிங் யாதவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து விடைபெற்றனர்.

இந்த காட்சி ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த செய்தியை அறிந்த மத்திய ரெயில்வேத்துறை மந்திரி பியூஸ் கோயல், இந்தர் சிங் யாதவை பாராட்டியதோடு, சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இந்தர் சிங் யாதவ் கூறுகையில் ‘‘நான் 1-ம் நம்பர் பிளாட்பாரத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த பெண் என்னிடம் அவரது பிரச்சனையை கூறினார். நான் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல், கடையில் பால் பாக்கெட் வாங்க பிளாட்பாரத்தில் இருந்து வெளியே ஓடினேன்.

ரெயில் 10 நிமிடம் மட்டுமே நிற்கும் என்பதால் பிரச்சனை உருவாகியது. என்றாலும் என்னுடைய ஓட்டத்திறன், அந்த பெண்ணிடம் பால் பாக்கெட்டை கொண்டு சேர்க்க உதவியாக இருந்தது. ஆனால், நான் பால் வாங்கிய பின் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும், ரெயில் புறப்பட தொடங்கியது.

மேலும் வேகமாக செல்லத் தொடங்கியது. இருப்பினும், என்னுடைய வலிமையால் ரெயிலை துரத்தி பிடித்து பால் பாக்கெட்டை குழந்தையின் பெற்றோரிடம் சேர்த்துவிட்டேன்’’ என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version