கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி தனது மூன்று இளம் மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தை ஒருவர் எகிப்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிகளின் தந்தையிடம் இருந்து பிரிந்து வாழும், அவர்களின் தாய் அளித்த புகாரின்பேரில் இந்தக் கைதுகள் நடந்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க தடுப்பூசி செலுத்தப்படுவதாகக் கூறி, அந்த சிறுமிகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, இந்த சடங்கு செய்யப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

எகிப்தில், சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு செய்வது 2008 முதல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சடங்குக்கு சிறுமிகள் உட்படுத்தப்படுவது தொடர்ந்து வருகிறது.

பெண்ணுறுப்பு சிதைப்பால் பெண்களுக்கு சிறுநீர் குழாயில் தொற்று, கருப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகளில் தொற்று, சிறு நீரகத் தொற்று, நீர்க்கட்டிகள், கருத்தரிப்பில் பிரச்சனை மற்றும் உடலுறவின்போது வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பெண்களின் கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்கால திருமணத்திற்காக இவ்வாறு செய்ய வேண்டும் என்ற கலாசார மூட நம்பிக்கையினால் பெண்ணுறுப்பு சிதைப்பு நடந்து வருகிறது.

ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப்பின் தகவலின்படி ஆஃப்ரிக்கா மற்றும் அரபு பிராந்தியத்தில் உள்ள 31 நாடுகளில் இப்பழக்கம் உள்ளது. அவற்றில் குறைந்தது 24 நாடுகளில் இதற்கு எதிரான சட்டமும் உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version