அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆலையடி வேம்பு கண்ணகிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் இளைஞர் ஒருவர் குடும்பம் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.எல்.ஏ.றஸீட் முன்னிலையில் நேற்று (04) சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டபோதே 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த சிறுமி பாலமுனை திராய்கேணி பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் போது அப்பிரதேச பெண் ஒருவரால் இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது.
இதனையடுத்து பதிவுத் திருமணம் செய்யாமல் சட்டவிரோதமாக சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அக்கரைப்பற்று பொலிஸார் சந்தேக நபரான இளைஞரையும் இச்சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞரினதும் சிறுமியினதும் உறவினர்கள் இருரையும் கைது செய்து விசாரணையின் பின் மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர்.