தமிழ்நாட்டில் இன்று 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,149 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி, சென்னையில் மட்டும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,298ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 134 பேருக்கும் வேலூரில் 32 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 18 பேருக்கும் திருவள்ளூரில் 57 பேருக்கும் திருவண்ணாமலையில் 11 பேருக்கும் தூத்துக்குடியில் 26 பேருக்கும் நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,527ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்கள், குணமடைந்தவர்கள் தவிர, தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக 15,413 பேர் உள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14,982 சோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 6,07,952ஆக உயர்ந்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 286ஆக உயர்ந்திருக்கிறது.

உயிரிழந்த 17 பேரில் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 14 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 14 பேருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சனை போன்ற தீவிர உடல்நலப் பிரச்சனைகள் இருந்துள்ளன.

4 பேருக்கு அம்மாதிரி பிரச்சனைகள் ஏதும் இல்லை. உயிரிழந்தவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரும் திருவள்ளூரில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர எல்லா மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version