ஒரு 12 வயது சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை ஓட்டல் தொழிலாளி. தாய் மன நலம் பாதிக்கப்பட்டவர். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சிறுமியின் தந்தை வெளியூரில் தாம் வேலை செய்துவந்த ஓட்டலிலேயே தங்கிவிட்டார்.

வறுமையின் காரணமாக உதவி தேடிய சிறுமி

இந்நிலையில், அச்சிறுமி அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்கள் கொடுக்கும் சிறு, சிறு வேலைகளை செய்து அதற்கு அவர்கள் தரும் பணம் மற்றும் உணவு பொருட்களைக் கொண்டு தாயையும் காப்பற்றியதோடு, தாமும் உயிர் பிழைத்து வாழ்ந்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் அந்த சிறுமி தனது பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமியிடம் அதே தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதை கண்ட பக்கத்து வீட்டு பெண் அந்த சிறுவனை பிடித்து கண்டித்து அனுப்பிவிட்டார்.

உதவி செய்வது போல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

பின்னர் சிறுமியிடம் அந்த பெண் விசாரித்துள்ளார். அப்போது அந்த சிறுமி தான் செல்லும் வீடுகளில் உள்ளவர்கள் தனக்கு உதவி செய்வதோடு பாலியல் தொல்லையிலும் ஈடுபடுவதாக, கூறியுள்ளார்.

ஒரு மளிகை கடைக்காரர் எப்படியெல்லாம் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்பதையும் அந்தச் சிறுமி செய்து காட்டியுள்ளார். இதனை விடியோவாக பதிவு செய்த அந்தப் பெண், சிறுமியின் அப்பாவிடம் இது பற்றிக் கூறியுள்ளார்.

வீடியோ ஆதாரம்

இதையடுத்து அந்த சிறுமி பேசும் வீடியோவுடன் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார் தந்தை.

இந்தப் புகார் குறித்துவிசாரிக்க குளச்சல் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டதோடு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய குளச்சல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சிறார் உட்பட ஆறு பேரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் “இந்த வழக்கில் சிறுமி மற்றும் குடும்பத்தினரிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி உதவி கேட்க செல்லும் போது பணம் கொடுப்பதோடு சிறுமிக்கு பலர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது” என்று கூறினார்.

முதியோர் கைது

75 வயது மளிகைக் கடைக்காரர், போட்டோ ஸ்டுடியோ நடத்தும் ஒருவர், இரு சிறுவர்கள் உள்பட இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டபிறகு நாகர்கோயில் பெண்கள் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் நால்வர் மாவட்டச் சிறையிலும் இருவர் நெல்லை சிறார் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

சமூக வலைத் தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை

பாதிக்கப்பட்ட சிறுமி பேசுவதாகத் தோன்றும் விடியோ பல வாட்ஸாப் குழுக்களில் பகிர்ந்ததாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சிறுமி பேசியதாகத் தோன்றும் விடியோ மற்றும் அவரது புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

சமூக வலை தளங்களில் இந்த வழக்கு குறித்து வரும் தகவல்கள் பற்றிகருத்து கூறத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காவல் துறை சார்பில் சிறுமிகள், பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். பெண்கள் தாமாக முன் வந்து பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஆன்லைன், வாட்ஸ்ஆப், சைல்டு லைன் 1098 மூலமாக புகார் அளித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் புகார் கொடுக்கும் பெண்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறினார் ஸ்ரீநாத்.

கட்டைப் பஞ்சாயத்து மூலம் தப்பிக்கும் குற்றவாளிகள்

இந்த வழக்கு பற்றி ஜனநாயக மாதர் சங்க குமரி மாவட்ட தலைவர் லீமா ரோஸ் பிபிசி தமிழிடம் பேசினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறை, தொந்தரவுகள் அதிகரித்துள்ளன.

பாலியல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும். ஜாமீனில் வெளியே வந்துவிடலாம் என்ற தைரியத்தில் குற்றவாளிகள் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Image caption அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த லீமா ரோஸ்

குற்றவாளிகளை ஜாமீனில் வெளியே எடுக்க உதவி செய்பவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினரிடம் நஷ்ட ஈடு பெற்று தருவதாக கூறியும், குடும்ப மரியாதை போய்விடும், பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம் பாதிக்கும் என்றெல்லாம் கூறி கட்டைப் பஞ்சாயத்து செய்து குற்றவாளிகளை காப்பாற்றி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் பாலியல் குற்ற வழக்குகளில் சிறப்பாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனைகளை பெற்று தருகின்றனர்.

ஆனால், காவல்துறையில் உள்ள சிலர் பாலியல் குற்றவாளிகளுக்கு உதவி செயவதால் அவர்கள் உள்ள தைரியத்தில் குற்றவாளிகள் பாலியல் குற்றங்களில் துணிந்து ஈடுபடுகின்றனர் என்றும் லீமா ரோஸ் குறிப்பிட்டார்.

சமூக வலைத் தளங்களில் மத ரீதியாக திசை திருப்பும் வகையில் இந்த வழக்கு பற்றி எழுதுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாலியல் சம்பந்தமான உளவியல் பாடங்களை 6 ஆம் வகுப்பில் இருந்து பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும். அப்படிச் செய்தால் ஒருவர் எந்த கண்ணோட்டத்தில் தன் மீது கைவைக்கிறார் (GOOD TOUCH, BAD TOUCH) என்பது குறித்து சிறுவர்களால் புரிந்துகொள்ள முடியும். இதுவே பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரைக் காக்கும் உத்தியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version