மாகாணசபையும், கம்பரெலியவும்..
உதாரணமாக கடந்த 2015 – 2019ம் ஆண்டுகால நல்லாட்சிக் காலத்தில் அதுவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும், தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற எண்ணிக்கைப் பலம் மிகவும் தேவைப்பட்ட வேளையில் வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி அபிவிருத்திக்கென தனியாக பணம் வழங்கப்பட்டது.
அத்துடன் ‘கம்பரெலிய’ திட்டத்தின் அடிப்படையில் மாகாண அபிவிருத்திகென நிதி வழங்கப்பட்டது. பிரதமரே வடக்கின் அபிவிருத்தி அமைச்சைக் கையாண்டதால் தமிழரசுக் கட்சியினரே அப் பணத்தைப் பங்கீடு செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர்.
இச் செயற்பாட்டின் பின்னணியில் நடைபெற்ற அரசியல் தோல்வி எதுவெனில் ‘கம்பரெலிய’ கொடுப்பனவு என்பது மாகாணசபை நிர்வாகத்திற்கு வெளியில் செயற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
அதுவும் மாகாணசபைக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட இத் திட்டங்கள் மாகாணசபையின் செயற்பாட்டைப் பலவீனப்படுத்துகிறது.
மாகாணசபை மக்களால் தெரிவு செய்யப்பட்டது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டது. மாகாணசபை நிர்வாகம் தமிழரசுக்கட்சியின் கட்டுப்பாட்டில் செயற்பட்டது.
இந் நிலையில் ‘கம்பரெலிய’ திட்டத்தில் தமிழரசுக்கட்சி இணைந்து செயற்பட்டதன் மூலம் அக் கட்சி சுயாட்சி பற்றிக் கொண்டிருக்கும் கொள்கை குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது.
”13வது திருத்தம் தொடர்பாக ஒரு புறத்தில் எதிர்ப்பது, மறுபுறத்தில் அந்த நிர்வாகங்களைக் கைப்பற்றுவது, பின்னர் அவற்றின் செயற்பாடுகளை முடக்குவது எனத் தொடர்ந்தது.
அவ்வாறெனில் இக் கட்சி ஒற்றை ஆட்சி அரசுக் கட்டுமானத்தைப் பலப்படுத்த உதவுகிறதே தவிர அதிகார பரவலாக்கத்தின் அடிப்படையிலான செயற்பாட்டை ஊக்குவிக்கவில்லை.”
தற்போது இலங்கையில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19வது திருத்தம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து முதலில் ஏப்ரல் 25ம் திகதி தற்போது யூன் 20ம் திகதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கொரொனா நெருக்கடி தணிவதாகத் தெரியவில்லை. இந் நிலையில் மீண்டும் தேர்தல் ஒத்திப்போடும் நிலை ஏற்படலாம்.
அவ்வாறெனில் அரசியலமைப்பு விதிகளின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டுப் புதிய பாராளுமன்றம் பதவி ஏற்கவேண்டும்.
பாராளுமன்றம் மார்ச் 2ம் திகதி கலைக்கப்பட்டதால் யூன் 2ம் திகதிக்கு முன்பதாக புதிய பாராளுமன்றம் கூடவேண்டும்.
அதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் மார்ச் 2ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக எடுத்த முடிவு செல்லுபடியாகாது.
எனவே ஜனாதிபதி தனது பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலை மீளப்பெற வேண்டும். அந்த அறிவித்தலை மேற்கொள்ள ஜனாதிபதி தயாராக இல்லை.
ஜனாதிபதியின் இந்த முடிவு ஜனநாயக விரோதமானது. அரசியல் யாப்பினை மீறுவதாகும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இதனைத் தமிழரசுக் கட்சியும் இணைந்து கூறுகிறது. இப் பிரச்சனையில் அதாவது இலங்கையின் அரசியல் அமைப்பின் ஜனநாயகத் தன்மை குறித்து தமிழரசுக்கட்சி இரட்டைவேடம் போடுவதாகவே கருதவேண்டியுள்ளது.
ஏற்கெனவே ‘ கம்பரெலிய’ திட்டத்தில் இணைந்ததன் மூலம் நாட்டின் ஒற்றை ஆட்சிமுறையை ஏற்றுச் செயற்பட்டிருப்பதை அறிந்தோம்.
அதேபோலவே 2018ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ரணிலின் பிரதமர் பதவியைப் பறித்து மகிந்தவைப் பிரதமராக நியமித்து அவர் 52 நாட்கள் பிரதமராகச் செயற்பட்டார்.
இப் பிரச்சனைகளின்போது தமிழரசுக்கட்சியினர் ஐ தே கட்சியின் பக்கமாக செயற்பட்டுப் பாராளுமன்றப் பெரும்பான்மையை உறுதிசெய்தனர்.
இப் பிரச்சனையின்போது தாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே அதாவது அரசியல் அமைப்பு மீறலைத் தடுக்கவே செயற்பட்டதாகக் கூறினர். இந்த இரு சந்தர்ப்பங்களிலும் நாட்டின் ஒற்றை ஆட்சிமுறையைக் கொண்டுள்ள அரசியல் யாப்பினை முற்றாக ஏற்றுச் செயற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
தற்போதைய நெருக்கடிகளிலும் தமிழரசுக்கட்சியினர் அரசியல் யாப்பின் ஜனநாயகத் தன்மையைப் பலப்படுத்தும் நோக்கில் செயற்படுவதாகவே தெரிவிக்கின்றனர்.
இங்குள்ள பிரதான முரண்பாடு எதுவெனில் ஒரு புறத்தில் நாட்டில் ஜனநாயகம் இல்லை எனவும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் கூறும் இக் கட்சியினர் மறுபக்கத்தில் அதாவது அரசியல் அமைப்பை அரச அதிகார தரப்பினர் மீறுவதாகக் கூறும் தருணங்களில் அரசியல் அமைப்பின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்ல, சர்வதேச அளவில் இலங்கையின் அரசியல் யாப்பின் ஜனநாயகமற்ற தன்மையை மையப்படுத்தியே தமிழ் அரசியல் விவாதம் அமைந்துள்ளது. ‘ மாபெரும் மனிதக் கொலை’ என்ற வாதம் அங்கிருந்தே தொடங்குகிறது.
அரசியல் யாப்புக் குறித்த முரண்பட்ட போக்குகள்
இத்தகைய உறுதியற்ற நிலையைச் சிங்கள பேரினவாத அரசியல் சக்திகள் பலவீனமாகவே கருதுகின்றனர்.
இக் கட்சி வெறுமனே ஓர் எதிர்ப்பு அணியாக மட்டுமே செயற்படுவதாகவும், அதனால் நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஒரு புறத்தில் அரசியலமைப்பிற்கு எதிராக ஒரு வகை அரசியலை முன்னெடுப்பதும், மறுபுறத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக்கூறி அரசியல் யாப்பைத் தூக்கிப் பிடிப்பதும் மிகவும் முரண்பட்ட போக்கினை அடையாளப்படுத்துகிறது.
அவ்வாறாயின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது தவறான முடிவு எனக் கருத முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. அத்தகைய முடிவு தவறானது அல்ல.
பதிலாக இலங்கையின் அரசியலமைப்புத் தொடர்பான விவாதங்களில் அக் கட்சி தெளிவான நிலைப்பாட்டில் இல்லாமையால் பெரும் ஊசலாட்டத்தில் அது சிக்கியிருக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள ஆட்சி, சிங்கள ஏகாதிபத்தியம் எனக் கூறி தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் அமைப்பு வழிகளில் தீர்வு இல்லையேல் அதனை நிராகரிப்பது என்பதும், போராட்டங்களில் மக்களை ஈடுபடுத்துவதும் பின்னர் தேசிய அடிப்படையில் ஜனநாயகத்திற்கான பிரச்சனை எழும்போது அரசியல் யாப்பினை உயர்த்திப் பிடிப்பதும் கொள்கைக் குழப்பத்தைக் காட்டுகிறது. மக்களைத் தவறான வழிகளில் எடுத்துச் செல்கிறது.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல பலமான தலைமைத்துவம் அற்று வெறுமனே சில பாராளுமன்ற ஆசனங்களில் அல்லது உள்ளுராட்சித் தேர்தல்களில் மட்டும் அரசியலை எடுத்துச் செல்வது அதுவும் அதிகாரம் குறைந்த பலவீனமான உள்ளுராட்சிகளின் அதிகாரங்களில் ஆதிக்கத்தைக் காட்ட விளைவது அக் கட்சியின் பலவீனமாகவே கருதப்படுகிறது.
இப் பலவீனங்களின் வெளிப்பாடே அக் கட்சி தனது நிகழ்ச்சி நிரலை வெளிநாடுகளை நோக்கித் திருப்பியிருப்பதாகும்.
குறிப்பாக அரசியல் கோரிக்கைகள் உள்நாட்டில் பலவீனமடைந்துள்ள நிலையில் சர்வதேச மனித உரிமை அமைப்பு, புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு எனக் கோரிக்கைகள் வெளியாரை நோக்கித் திரும்பியுள்ளன.
குறிப்பாக மனித உரிமைகள், போர்க்குற்றம், மனிதநேய உதவிகள் என்பவைகளையே அரசுக்கு எதிரான அல்லது அரசியல் தீர்வை நோக்கிச் செல்வதற்கான புதிய பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இவை யாவற்றையும் ஆராயும்போது இலங்கையில் ஆட்சியமைக்கும் பிரதான கட்சிகள் எவையும் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதில் எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்ற முடிவுக்கு எப்போதோ இவர்கள் வந்திருக்க முடியும்.
இதற்கான பிரதான காரணிகளில் முக்கியமானது தமிழரசுக் கட்சியின் அல்லது தமிழர் அரசியல் தலைமைகளின் மீதான சிங்கள மக்களின் அவநம்பிக்கையே.
தமிழ் அரசியல் தலைமைகளின் பலவீனமும், உள் முரண்பாடுகளும் தற்போது மிகவும் தெளிவாகவே புலப்படத் தொடங்கியுள்ள நிலையில் தேசிய இனப் பிரச்சனை என்பது இலங்கையில் இல்லை எனவும், பயங்கரவாதமே நிலவுகிறது என்ற வாதம் மிகவும் பலமானதாக தற்போது வெளிப்படுகிறது. இதுவே இன்றைய ராஜபக்ஸ அரசாங்கத்தின் சிந்தனையாக உள்ளது.
உட்கட்சிப் பலவீனங்களும், தாக்கங்களும்
இச் சிந்தனைக்கான பின்புலங்கள் சிலவற்றை நாம் பார்க்கலாம். 2009ம் ஆண்டின் பின்னர் தமிழரசுக் கட்சி தனது அரசியல் அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தது.
குறிப்பாக பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்க அடிப்படையில் தேசிய இனப் பிரச்சனைகளை அணுகப்போவதாக அறிவித்தது.
ஆனால் பெரும்பான்மை சிங்கள அரசியல் தலைமை கூட்டமைப்பின் இத்தகைய மாறுதல்களைச் சந்தேகத்துடன் நோக்கியது.
ஒரு புறத்தில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுதல், போர்க்குற்ற விசாரணை எனக் கூறிக்கொண்டு மறுபுறத்தில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணுதல் என்ற திட்டத்தினைச் சர்வதேச சதி என நோக்கியது.
இதற்குக் காரணம் தமிழரசுக்கட்சிக்குள் பிளவுகள் காணப்பட்டன. கட்சித் தலைமையின் சிலரே இலங்கை அரசுடனும், சர்வதேச அரசுகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
குறிப்பாக சுமந்திரன், இரா. சம்பந்தன் ஆகியோர் கட்சியின் பிரதான முடிவுகளை எடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனவே பிரிக்க முடியாத, பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்க அடிப்படையிலான தீர்வு என்பதில் கட்சிக்குள் முழுமையான உடன்பாடு இல்லை என்பது தெளிவாகியது. கட்சிக்குள் இன்னமும் பிரிவினைச் சக்திகள் செயற்படுவது துலங்கியது.
அத்துடன் தமிழரசுக்கட்சியின் உயர் மட்டத்தின் இந்த முடிவு அக் கட்சியின் தனித்த முடிவு அல்ல என்பதும் படிப்படியாக தெரியவந்தது.
பிராந்திய வல்லரசுகளின் குறிப்பாக சீனா, இந்தியா, அமெரிக்க நாடுகளின் பூகோள ஆதிக்கப் போட்டி இலங்கை அரசினதும், தமிழரசுக்கட்சியினதும் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை தெரியவந்தது.
இதன் வெளிப்பாடாகவே இலங்கை அரசின் இறுக்கமான போக்கும், தமிழரசுக்கட்சியின் புதிய மாற்று அணுகுமுறைகளும் புதிய கதவுகளைத் திறக்கவில்லை.
இலங்கைத் தமிழர்களின் சார்பு நிலையில் இந்திய அணுகுமுறை காணப்படுவது சீனாவின் பூகோள அரசியல் தாக்கம் என்பது இலங்கையில் அதிகம் காணப்படுவதால் எழுந்துள்ள மாற்று அணுகுமுறை என்பது தெளிவாகியது.
இதன் விளைவாக இலங்கை தனது உள்நாட்டுப் பிரச்சனையைத் தேசிய பாதுகாப்பு என்ற நிலைக்கு உயர்த்தியது.
சர்வதேச தலையீடுகளும், உள்நாட்டு மாற்றங்களும்
இங்கு நாம் இந்திய அணுகுமுறைகளில் இலங்கை தொடர்பாக சமீபகாலமாக ஏற்பட்டுவரும் மாற்றங்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டில் பாரிய எழுச்சி தற்போது இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா தி மு க போன்ற கட்சிகள் தற்போது தனித் திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு மத்திய அரசுடன் மிக நெருக்கமாகச் சென்றுள்ளன.
மத்திய அரசு என்பது பிராந்தியக் கட்சிகளின் கூட்டுத் தலைமை என்ற அளவிற்கு அரசியல் மாறியுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் பிரிவினை அரசியல் என்பது படிப்படியாக பலவீனமாகியுள்ளது. இந்திய அரசின் இலங்கை தொடர்பான அணுகுமுறைகள் மாறிச் சென்றுள்ள நிலையில் இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்பு என்பதும் வெகுவாக மாறியுள்ளது.
உதாரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பு வலையங்களாக மாற்றமடைந்துள்ளன. இந்தியாவிலிருந்து வரும் போதைப் பொருட்களைத் தடுத்தல் என்ற போர்வையில் தமிழப் பகுதிகளுக்குள் இந்திய ஊடுருவலைத் தடுக்கும் பல மறைமுக ஏற்பாடுகள் நிறைவேற்றப்படுகின்றன.
உள்நாட்டிலும் குறிப்பாக சிங்களப் பகுதிகளிலும் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்கள் ஸ்தாபனமயமாகி வருகின்றன.
அரசிலும் தீவிர இந்திய எதிர்ப்பு சக்திகள் அங்கம் வகிக்கின்றன. உதாரணமாக, 13வது திருத்தத்தினை அரசியலமைப்பிலிருந்து நீக்குமாறு கோருதல், இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்பது திணிக்கப்பட்ட ஒன்று என வரையறுப்பது, 13 வது திருத்தம் என்பது பிரிவினைக்கான ஆரம்பம் என விளக்கமளிப்பது என்பன தொடர்கின்றன.
இந்தியா எவ்வாறு தனது எல்லைப் பிரதேசமான கஷ்மீரைக் கையாள்கிறதோ அதே நிலை இங்கும் காணப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக கஷ்மீர் மக்கள் சுயநிர்ணய உரிமை கோரிப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஆனால் இந்தியா அங்கு ராணுவத்தைக் குவித்து ஒடுக்குமுறையைக் கையாள்வதோடு தற்போது அரசியல் அமைப்பின் 370 பிரிவின் செயற்பாட்டை முடக்கி அப் பிரதேசத்தின் தரத்தினை யூனியன் பிரதேசமாகக் குறைத்துள்ளது.
இதற்கான பிரதான காரணம் கஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள் என்பதால் பிரிவினை என்பது பாகிஸ்தானுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமே காரணமாகும்.
இவ்வாறான மனநிலையே இலங்கை ஆளும் வர்க்கத்தின் மத்தியிலும் இந்தியா தொடர்பாகக் காணப்படுவதால் தமிழரசுக்கட்சியினரின் கோரிக்கைகள் அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருத முடியவில்லை.
அரசியல் அணுகுமுறை மாற்றங்கள்
இங்கு வெளிப்படும் பிரதான அம்சம் எதுவெனில், உள்நாட்டு அரசியலில் அதிகளவு வெளிநாட்டு அழுத்தங்கள் என்பது மேற்குறித்த அச்சங்களின் விளைவாக எழுந்துள்ள புரிதலின் விளைவுகளாகும்.
எனவேதான் தமிழரசுக்கட்சியின் தற்போதைய அணுகுமுறைகள் அதாவது பொறுப்புக்கூறல், மனித உரிமை, இறந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கான நீதி என்ற கோரிக்கைகள் அவற்றின் முடிவுகளை நோக்கியது என்பதை விட அரசியல் தீர்வுகளுக்கான புதிய வழிமுறையாகவே உள்ளது.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல தமிழரசுக்கட்சி அல்லது கூட்டமைப்பினரும், அரசாங்கமும் விளையாடவேண்டிய பந்தாக இதுவே உள்ளது.
உதாரணமாக, இன்னொரு நிகழ்வினைத் தருவது பொருத்தமாக அமையும். 2010ம் ஆண்டு தேர்தல் முடிவடைந்த பின்னர் அடுத்து என்ன நடவடிக்கை என்பதில் கூட்டமைப்புத் தடுமாறியது.
அரசு அழைக்கும் வரை பொறுத்திருப்பதா? அல்லது தாமே சில இறுக்கமான முடிவுக்குச் செல்வதா? என்பதாகும்.
13வது திருத்தம் தொடர்பாக அவர்களால் தெளிவான நிலைப்பாட்டிற்குச் செல்ல முடியவில்லை. ஏனெனில் கட்சிக்குள் பெரும் பிளவு காணப்பட்டது.
அதாவது ஒரு புறத்தில் தாம் அதனை எதிர்க்கும் தீவிரவாதிகளாகக் காட்டிக்கொண்டதால் அரசுடன் 13வது திருத்தம் தொடர்பாக பேசுவதில் தயக்கம் காணப்பட்டது. அது மட்டுமல்ல, கட்சியில் யாழ்ப்பாண ஆதிக்கம் அதிகம் காணப்பட்டதால் அதற்கு வெளியில் செல்ல முடியவில்லை.
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியம், சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, வடக்கு- கிழக்கு இணைப்பு போன்ற அம்சங்கள் காத்திரமாக மிக நீண்டகாலமாக வேருன்றியிருந்தன.
கூட்டமைப்பினர் இந் நிலைப்பாடுகளிலிருந்து விலகிச் செல்வதை அடையாளப்படுத்தும் சில மாற்று அரசியல் அமைப்புகள் இளைஞர் மத்தியில் பரவலாக வேருன்றி வந்தது.
இதனால் தமது கூட்டமைப்பின் அடித்தளத்தினைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்த்து வந்தனர்.
இதனால் யாழ்ப்பாண அபிலாஷைகளுக்கும், தெற்கின் யதார்த்தத்திற்குமிடையே சமநிலையைப் பேணுவது கட்சிக்குள் பெரும் போராகவே காணப்பட்டது. தற்போதுள்ள நிலையில் தெற்குடன் அரசியல் பேரம் பேசுவது பிரபாகரன் காலத்தைப் போல் இல்லை.
அத்துடன் இவர்கள் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைக் கொண்டிருப்பதாகவும் காண முடியவில்லை. சந்திரிகா காலத்தில் முன்வைக்கப்பட்ட அரசியல் பொதி, ரணிலின் 2001ம் – 2004ம் ஆண்டுகால முயற்சிகளும் சிங்கள தீவிரவாதிகளால் தோற்கடிக்கப்பட்டன.
அதே போலவே தமிழரசுக்கட்சியினர் மங்கள முனசிங்க அவர்களால் இந்திய அரசியல் திட்டத்திற்கு அண்ணளவாக தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அத் திட்டத்தில் வடக்கு – கிழக்கு பிரிக்கப்படுதலை ஏற்கவேண்டும் என்பது முன்நிபந்தனையாக இருந்தது.
ஆனால் இன்று நிலமை என்ன? சந்திரிகா அம்மையாரால் கிட்டத்தட்ட சமஷ்டிக்கு அண்ணளவான திட்டங்கள் 1995, 1997, 2000 ஆண்டுகளில் முன்வைத்தபோது தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்த்தனர்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் பாரதூரமான தவறுகள் இருப்பதாகவும், அதிகாரம் ஒற்றை ஆட்சி அடிப்படையில் ஜனாதிபதியிடம் குவிந்திருக்கையில் அவர் ஆளுனர் மூலமாக தனது அதிகாரத்தைப் பிரயோகிக்கையில் மாகாணசபை சுயாதீனமாக இயங்க முடியாது எனக் கூறி அதனை எதிர்த்தனர்.
இவை யாவும் அரசியல் யாப்பினை எதிர்ப்பதாகவே அமைந்தன. இந் நிலையில் அவர்கள் இன்று எந்த ஜனநாயகத்தைப் பாதுகாக்க விழைகின்றனர்? என்பதே கேள்வியாகும்.
தொடரும்…
வி. சிவலிங்கம்
நன்றி. தமிழ்மிரர்
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும்!! (பகுதி-1)-வி. சிவலிங்கம் (கட்டுரை)