இந்தியாவில் புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியைச் சேர்ந்த 20 வயதான விவேக் திருவரங்குளம் அருகே இடையன்வயலைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகள் சாவித்திரியை(19) கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

விவேக்கும், சாவித்திரியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டுக்கும் தெரியாமல் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.

இவர்களது காதல் விவகாரம் சாவித்திரியின் வீட்டுக்கு தெரிந்ததால் அவரது தாயார் மற்றும் அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து சாவித்திரிக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஒரு மாப்பிள்ளையை பார்த்து பேசி முடித்ததாக கூறப்படுகின்றது.

இது பிடிக்காத சாவித்திரி விவேக்கிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்றும் தன்னை உடனடியாக அழைத்துச் செல்லுமாறு கூறியதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து விவேக்கும் சாவித்திரியும் கோயம்புத்தூருக்கு செல்ல திட்டமிட்டு ஒரு வாடகை காரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரகசியமாக புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் செல்லும் வழியில் குளித்தலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது விவேக்கும் சாவித்திரியும் சென்ற காரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி விவேக் மற்றும் சாவித்திரியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த காவல்துறையினர் விவேக்கிற்கு 21 வயது முழுமையாக நிறைவடையாததால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் அதனால் சாவித்திரியை பெற்றோரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், அதற்கு சாவித்திரி மறுப்பு தெரிவித்ததாகவும் தன்னை காப்பகத்திற்கு அனுப்பும் படி கூறியதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து பொலிசார், சாவித்திரியை எந்த ஒரு துன்புறுத்தலும் செய்யக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு அவரது பெற்றோரிடம் அனுப்பியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் விவேக்கின் உறவினர்களுக்கு இடையன்வயல் பகுதியிலிருந்து சாவித்திரி உயிரிழந்து விட்டதாகவும் இரவோடு இரவாக சாவித்திரியின் உறவினர்கள் உடலை எரித்து இறுதி சடங்குகளை முடித்து விட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

இதில் சந்தேகமடைந்த விவேக்கின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் ஒன்றினை கொடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version