உதவித்தொகையை வங்கி கணக்கில் இருந்து எடுக்க நேரில் வரச் சொன்னதால், 100 வயதை தாண்டிய மூதாட்டியை கட்டிலோடு வங்கிக்கு மகள் இழுத்துச் சென்ற உருக்கமான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

என்னதான் விஞ்ஞானம், தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், மனிதர்களின் மனம் மாறாவிட்டாலோ, விசாலமாகாவிட்டாலோ மக்களின் அவலங்கள் தீரப்போவது இல்லை என்பதை உணர்த்தும் உருக்கமான இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்து உள்ளது.

கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏழைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் பெண்களின் ஜன்தன் வங்கி கணக்கில் ஏப்ரல் முதல் ஜூன் வரை மாதம் தலா ரூ.500 செலுத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

அப்படி உதவித் தொகை பெற்றவர்களில் ஒடிசா மாநிலம் நவுபாரா மாவட்டம் பர்கோன் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி லாபே பாகல் என்பவரும் ஒருவர்.

 

இவருக்கு நூறு வயதுக்கும் மேலாகிவிட்டது. தள்ளாத வயதில் வீட்டில் படுத்த படுக்கையாக இருப்பதால் அவரால் வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருக்கும் பணத்தை பெற்று வரமுடியவில்லை. மாதங்கள் ஓடியதுதான் மிச்சம்.

இந்த நிலையில், செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் லாபே பாகலின் மகள் புன்ஜிமாதி தேய் (வயது 60), கடந்த 9-ந் தேதி தங்கள் கிராமத்தில் உள்ள உத்கல் கிராம வங்கிக்கு சென்று, மானேஜர் அஜித் பிரதானை சந்தித்து, தனது தயாரின் நிலையை விளக்கமாக எடுத்துக் கூறி, அவர் வர முடியாத நிலையில் இருப்பதால் அவரது வங்கி கணக்கில் உள்ள 1,500 ரூபாயை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு மானேஜர் அஜித் பிரதான், வங்கியில் கணக்கு வைத்திருக்கும் உங்கள் தயார் லாபே பாகலை நேரில் அழைத்து வந்தால்தான் பணத்தை வழங்க முடியும் என்று கண்டிப்புடன் கூறி விட்டதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த புன்ஜிமாதி தேய் சோகத்துடன் வீடு திரும்பினார்.

பணத்தேவை நெருக்கியதால் மறுநாள் தயாரை எப்படியாவது வங்கிக்கு அழைத்துச் செல்வது என்று முடிவு செய்தார். ஆனால் வாகன வசதி எதுவும் கிடைக்கவில்லை.

இதனால், கயிற்று கட்டிலில் எலும்பும் தோலுமாக சுருண்டு படுத்திருந்த தாயார் லாபே பாகலை, வேறு வழி இல்லாமல் கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்றார்.

 

கொளுத்தும் வெயிலில் கரடு முரடான ரோட்டில் அவர் கட்டிலை இழுத்துச் சென்றதை சிலர் பரிதாபத்துடன் பார்த்தனர். சிலர் அதை வீடியோ படம் எடுத்தனர்.

இந்த உருக்கமான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி புஞ்சிமாதி தேய் கூறுகையில், “எனக்கு வேறு வழி தெரியாததால் தாயாரை கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்றேன். அதன்பிறகுதான் மானேஜர் பணம் வழங்கினார்” என்று தெரிவித்தார்.

ஆனால் பணம் எடுக்க மூதாட்டியை வங்கிக்கு அழைத்து வருமாறு மானேஜர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுவதை நவுபாரா மாவட்ட கலெக்டர் மதுஸ்மிதா சாகோ மறுத்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், புஞ்சிமாதி தேய் பணம் எடுக்க வந்த போது, “வங்கியில் ஒரேயொரு ஊழியர் மட்டும் இருப்பதால் நான் உடனடியாக உங்கள் வீட்டுக்கு வந்து வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது பற்றி உங்கள் தாயாரிடம் விசாரிக்க முடியாது. எனவே நாளை வருகிறேன்” என்று வங்கி மானேஜர் கூறி இருக்கிறார்.

ஆனால் அதற்குள் ஆனால் அவர் போவதற்குள், புஞ்சிமாதி தேய், கட்டிலில் படுத்து இருந்த தனது தாயாரை அப்படியே இழுத்து வந்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

மூத்த குடிமக்களும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களும் வங்கிக்கு நேரடியாக வந்து பணம் எடுக்க முடியாத நிலையில் இருந்தால் அதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ், வாடிக்கையாளரின் சுயவிவர ஆவணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் பணம் வழங்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Share.
Leave A Reply

Exit mobile version