நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம் எண்ணுவதில்லை.

அடுத்தநாள் மீண்டும் ஆதவன் உதிப்பான் என்ற நம்பிக்கை எம்முள் இருக்கும். அதேபோலத்தான் இதுவும் என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான தீர்வை, தன்னால் மட்டும்தான் தரமுடியும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அண்மையில் தெரிவித்திருந்தார்.

அப்படி அவரால் கூறமுடியாதெனக் கூறிய சி.வி, காரணம், தமிழர்களின் பிரச்சினை என்னவென்றே பிரதமருக்குத் தெரியாதென்றார்.

வேண்டுமானால், இவ்வளவுதான் தரலாம் என்று தமது எச்சில் இலையில் உள்ள எலும்புகளை எமக்குத் தூக்கிப் போடலாம். தமிழர்களில் சிலர், அதனை ஏற்கச் சித்தமாக உள்ளார்கள்.

ஆனால் பெரும்பான்மைத் தமிழர்கள், தம்முடைய மாண்பையும் மதிப்பையும், நெடிய இருப்பையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வையே ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

“பின்னர் எப்படி தமிழர்களின் பிரச்சினைக்குத் தானே தீர்வைத் தரப்போவதாக அறிவிப்பது? எந்த ஒரு சிங்கள அரசியல்வாதியாலும் தமிழர்களுக்கான தீர்வைத் தர முடியாது.

அப்படி தருவதானால், அவர்கள் சில உண்மைகளை ஏற்க வேண்டியிருக்கும். அவர்களால் அவற்றை, ஏற்க முடியாது. அவர்களின் அகந்தை, அறியாமை போன்றவை அதற்கு இடம் கொடுக்காது” என்றும் அவர் கூறினார்.

“இந்நாட்டின் பூர்வீகக் குடிகள், சைவத் தமிழரே. சரித்திர ரீதியாக இதில் எந்தவித மயக்கமும் இல்லை. அவர்கள், தொடர்ந்து இலங்கையின் மேற்கு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில், 3,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

மகாவம்சம் வரலாற்று நூல், பௌத்தத்தை மாண்புறச் செய்ய எழுதப்பட்ட புனை கதையாகும். அது, பாளி மொழியில் எழுதப்பட்டது. அது எழுதப்பட்ட போது, சிங்களவர்களும் இருக்கவில்லை, சிங்கள மொழியும் இருக்கவில்லை.

“கி.பி. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டிலேயே, சிங்கள மொழி, ஒரு மொழியாகப் பரிணாமம் பெற்றது. பிரிட்டிஷார் 1833இல் நாட்டை நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் வரையில், தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கென இராச்சியங்களை அமைத்து, வடக்கு – கிழக்கில் 3000 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து குடியிருந்து வந்துள்ளார்கள்.

கிழக்கில் கண்டி அரசர்களுக்கு சில சமயங்களில் திறை செலுத்தினாலும், கிழக்கில் வாழ்ந்து வந்தவர்கள் தமிழரே.

இது வரையில் தமிழர்க்கு எதிராக நடந்து வந்திருப்பது இனப்படுகொலையே. இவற்றை ஏற்காது, எந்தச் சிங்களத் தலைவராலும் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைத் தரமுடியாது” என, சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version