குஜராத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் அவர்களுடைய உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர்கள் அம்ரிஷ் படேல் (வயது 42), அவுரங் படேல்(40). சகோதரர்களான இவர்கள் இருவரும் தங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கு அங்குள்ள வத்வா பகுதியில் உள்ள குடியிருப்பில் சொந்தமாக (பிளாட்)வீடு ஒன்று உள்ளது. ஆனால் அங்கு யாரும் வசிக்கவில்லை.

இந்த நிலையில் அண்ணன்-தம்பி இருவரும் கடந்த 17-ந் தேதி தங்களுடைய குழந்தைகள் 4 பேருடன் வெளியே செல்வதாக மனைவிகளிடம் கூறிவிட்டு சென்றனர். ஆனால் மறுநாள் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவர்களுடைய மனைவிகள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வத்வா பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்த குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 4 குழந்தைகள் உள்பட 6 பேரும் வெவ்வேறு அறைகளில் தூக்கில் பிணமாக கிடந்தனர். அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் 4 பேருக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு அவர்களை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு, அதன்பின்னர் சகோதரர்கள் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என்று அவர்கள் கூறினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் அவர்களுடைய உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version