தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 650 நபர்களுக்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவ முறை சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அவர்களின் உடல்நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவர்கள் கண்காணித்துவருகிறார்கள்.
கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவ முறையில் தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை என்ற நிலை நீடிக்கிறது. வைட்டமின் மாத்திரைகள் வழங்குவதோடு இந்திய மருத்துவ முறைகளையும் பின்பற்றவேண்டும் என இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்ததை அடுத்து, தமிழகத்திலும் இயற்கை, யோகா மருத்துவத்தில் சோதனை செய்யப்படுகிறது.
நோய் எதிர்ப்பு பானம் தயாரிப்பது எப்படி?
தமிழகத்தில் 650 நபர்களுக்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவ முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் உடல் மற்றும் மன நலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வல்லுநர் குழு ஆவணப்படுத்தி வருகிறது. வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக அரசின் இயற்கை மற்றும் யோகா மருத்துக் கல்லூரி மருத்துவமனையின் டீன் மணவாளனிடம் பேசினோம்.
”பாதிக்கப்பட்டவர்களின் பயத்தை போக்குவது,நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க வேண்டும் ஆகியவையே முதல் குறிக்கோள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு யோகா மருத்துவர்கள் பயிற்சிகளை கற்பிக்கிறார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆன்லைனில் சிகிச்சை அளிக்கிறோம்.சளி மற்றும் காய்ச்சல் பிரதான அறிகுறிகாக இருப்பதால், சளியை நீக்க கஷாயங்கள், மூச்சு பயிற்சி செய்வதை உறுதிசெய்கிறோம்,”என்கிறார் மணவாளன்.
வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எதிர்ப்பு சக்த்திக்கான சூடான பானத்தை தயாரிப்பது குறித்து விளக்கினார். ”கால் துண்டு தோல் நீக்கிய இஞ்சி, 10 துளசி இலைகள், அரை டீ ஸ்பூன் மிளகு, அதிமதுரம், கால் டீஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை 250 மிலி தண்ணீரில் கலந்து பச்சைவாசனை போகும்வரை காய்ச்சி, வடிகட்டி குடிக்கவேண்டும். தினமும் இரண்டு முறை அருந்தவேண்டும்,” என்கிறார் மணவாளன்.
நோய்த் தொற்று உள்ளவர்கள், ஏசிமட்டமாடிக் வகை நபர்கள் என தினமும் சுமார் 2,000 நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இயற்கை,யோகா மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
யோகா நித்ரா சிகிச்சை என்றால் என்ன?
மூச்சு திணறல் அதிகரித்து வெண்டிலேட்டரில் இருந்த நபர்களுக்கு அவர்கள் அருகில் இருந்து அவர்களின் மூச்சை கவனித்து எப்படி மூச்சை சரிசெய்யவேண்டும் என ஆலோசனை வழங்கியதாக சொல்கிறார் மருத்துவர் தீபா சரவணன்.
”நோய் குறித்த பயம் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை காலி செய்துவிடும். அச்சத்தை விலக்கினால் நம் உடல் நோயை எதிர்கொள்ளத் தயாராகிவிடும். வென்டிலேட்டரில் இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்குவோம். யோகா நித்ரா என்ற எளிமையான தியானம் மனபதற்றத்தை குறைத்து, உடலில் தளர்வை ஏற்படுத்தும். ரத்த அழுத்தத்தை சீர்படுத்தும். இது பாதிக்கப்பட்டவர் சகஜ நிலைக்கு திரும்ப உதவும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தீராத வியாதி தங்களுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். ”
தமிழகம் முழுவதும் இயற்கை யோகா முறையில் சோதனைக்காக தேர்வு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் பாதிக்கப்பட்ட 650 நபர்களில் ஒருவர் உமா(24). ”எனக்கும், கணவருக்கும் நோய் தொற்று இருந்தது. கடந்த 14 நாட்களாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். இயற்கை யோகா சிகிச்சை தொடர்ந்து எடுக்கிறோம். மருத்துவர்கள் ஆன்லைனில் கண்காணிக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி பானங்களை குடிப்பதால், சளி மற்றும் காய்ச்சல் குறைந்துள்ளது. மூச்சுப் பயிற்சி செய்வதால் மூச்சுக் குழாயில் அடைப்புகள் இல்லை, அதனால் மூச்சு திணறல் இல்லை. உணவு முறையில் கவனம் வந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி பானங்களை தயாரித்து குடிப்பதால் சோர்வு குறைந்துள்ளது,” என்கிறார் உமா.
கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சமயத்தில் தனக்கு வாசனை மற்றும் சுவை உணர்வு முற்றிலுமாக குறைந்திருந்தது என்ற அவர், ”முதல் மூன்று நாட்கள் பயிற்சி செய்த போது, முன்னேற்றம் தெரிந்தது. தற்போது இயற்கை யோகா பயிற்சியால் சுவை மற்றும் வாசனை உணர்வு வந்துவிட்டது. வைட்டமின் மாத்திரைகள், கஷாயம், ஆவி பிடிப்பது, யோகா செய்வது என எங்கள் அன்றாட வாழ்வு மாறியுள்ளது. இந்த உணவு பழக்கங்களை தொடர்வோம் என நம்பிக்கை உள்ளது,”என்கிறார் உமா.
மாநில சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் பேசும் போது, தமிழகத்தில் அலோபதி சிகிச்சைகளோடு, இந்திய மருத்துவ முறை சிகிச்சைகளை மருத்துவமனை மற்றும் முகாம்களில் அளிக்கப்படுவதாக தெரிவித்தார். இயற்கை மற்றும் யோகா மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை சிகிச்சைகளுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்படும் என்றார். சிகிச்சையின் முடிவில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இருந்தவர்களுக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்த பின்னர்தான் அந்த நபர் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார் என்றும் தெரிவித்தார்.