பிரசித்தி பெற்ற நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா இன்றைய தினம் ஆரம்பித்துள்ள நிலையில் அங்கு பக்தர்கள் குவிந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் ஒன்று குவிந்துள்ள பக்தர்கள் எவரும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்கவில்லை என்றும், மக்கள் குழுமியிருப்பதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கைப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலய தரிசனத்திற்கு பக்தர்களை 50 பேர் வரையே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குழுமியிருக்கும் பக்தர்கள் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு குழப்பம் விளைவித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக அனுமதிக்கப்பட்ட 50 பேரும் தரிசனம் முடித்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததையடுத்து வெளியே காத்திருந்த பக்தர்கள் பலர் குழப்பமடைந்து நிர்வாகத்துடன் முரண்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சூழ்நிலையிலேயே தங்கள் அனைவரையும் உள்ளே செல்ல விடுமாறு குழம்பியிருப்பதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் குழம்பியிருக்கும் பக்தர்களுடன் பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50 பேர் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள முடியுமென ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தாலும், ஆலய நிர்வாகத்தினர் மாத்திரமே திருவிழா நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

இதுவொருபுறமிருக்க ஆலய வளாகத்திற்குள் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version