“என் மகளை பள்ளியில் சேர்க்க ஆறு மாதம் முன்பே நாங்கள் பள்ளி குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டோம்” என்கிறார் 6 வயது மகளின் தந்தையான திருச்சியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சிவக்குமார்.

“வீட்டிற்கு அருகிலேயே ஒரு தனியார் பள்ளி இருந்தது. எனது இரு மகன்களையும் அங்கு தான் சேர்த்தேன்”, என்கிறார் 90களில் தந்தையான கோயம்புத்தூரைச் சேர்ந்த முரளி.

“வீட்டிற்கு அருகில் இரண்டு மூன்று பள்ளிகள் இருந்தாலும் அதில் நல்ல பள்ளி எது என்று விசாரித்தே எனது குழந்தைகளை சேர்த்தேன்”, என்கிறார் 6 வயது மகனின் தந்தையான திருவாரூர் சத்யநாரயணன்

“எங்கள் ஊரில் அரசுப் பள்ளி இருந்தது. அதில்தான் என் மகளை சேர்த்தேன்”, என்று கூறுகிறார் 90களில் தந்தையான ஜமீன் ஊத்துக்குளி என்ற கிராமத்தை சேர்ந்த தந்தை முருகேசன்.

தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்து அக்கறை காட்டுவது, தந்தையின் கடமைகளில் ஒன்றாக இருந்தாலும், அந்த அக்கறை எப்படி வெளிப்படுகிறது என்பது காலத்திற்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது

ஒரு காலத்தில் தந்தை முன் நின்று பேசவே அச்சம். தாய் மூலமாக தந்தைக்கு சொல்ல வேண்டிய செய்திகளை சொல்வது என்று ஒரு காலத்தில் இருந்த தந்தையின் பிம்பம். கொஞ்சமாக மாறி, பிள்ளைகளே நேரடியாக தந்தை முன் சென்று விருப்பத்தைச் சொல்வது, அதன் பிறகு குழந்தைகளோடு நண்பர்களாக ஆவது என்று கொஞ்சம் கொஞ்சமாக உறவில் பரிணாம வளர்ச்சி ஒருபுறம் ஏற்படுகிறது. ஆனால், முந்தைய தலைமுறையின் வடிவங்கள் சில இடங்களில் தொடராமலும் இல்லை.

ஆனால் குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு தலைமுறைக்கு தலைமுறை வெளிப்படையாக தெரிந்து கொண்டே போனது.

ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுகிழமை தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த தினத்தில் இரண்டு தலைமுறையாக தந்தைகள் எப்படி மாறியுள்ளனர் அவர்களிடன் மாறாதது என்ன என்பதை ஆராயலாம்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தந்தையின் பங்களிப்பு தூக்கலாகத் தெரிவது அந்த குழந்தையின் பள்ளிப் பருவம் வரைதான். அதன்பின் அவர்கள் வாழ்க்கையில் தந்தையின் பங்களிப்பு அதிகமாக இருந்தாலும் அது வெளிப்படையாகத் தெரியாது.

அவ்வாறு இருக்க தலைமுறைக்கு தலைமுறை தந்தைகள் மாறிக்கொண்டே வருகின்றனர். அடிப்படை குணங்கள் எண்ணங்கள் ஒரே போல இருந்தாலும் அவர்களின் செயல்களில் மாற்றங்களை நம்மால் காண முடியும்.

கொண்டாட்டம்

ஒரு குழந்தைக்கு விழா, கொண்டாட்டங்கள் போன்றவை அவர்களின் குழந்தை பருவத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.

90களில் தந்தையான அதாவது 90’ஸ் கிட்ஸ் ஒருவரின் தந்தையான முரளி இதுபற்றி கூறும் போது, “குழந்தைகள் பிறந்த நாளின் போது பள்ளியில் இருக்கும் அனைவருக்கும் சாக்லெட்டுகள் கொடுப்பார்கள். வீட்டில் கேக் வெட்டி கொண்டாடுவார்கள்”, என்றார்.

அதே காலத்தைச் சேர்ந்தவர் ஆனால் கிராமத்தில் வசிக்கும் முருகேசன், “வீட்டில் கேக் வெட்டி குழந்தைகளின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம். பள்ளியில் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். அனைவரும் குழந்தைக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வார்கள் அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்”, என்றார்.

அடுத்த தலைமுறையான 2K கிட்ஸ் தலைமுறையினரின் தந்தையான பரமேஸ்வரன் சிவக்குமார் கூறுகையில், “கேக் வெட்டி கொண்டாடுவோம். ஆனால் அதே போல் அவர்களை சிரமப்படுத்தாமல் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு அவர்களை அருகில் எங்காவது அழைத்து செல்வோம். கோயிலுக்கு கூட்டி செல்வோம்.

பள்ளியைப் பொருத்தவரையில் குழந்தையின் வகுப்பில் படிக்கும் எல்லோருக்கும் பரிசளிப்போம். இது பள்ளியில் இருக்கும் ஒரு விதிமுறை போன்றது. அப்போது தான் யாரும் தனித்து விடப்பட்டதாக உணர மாட்டார்கள் என்பதற்காக இது நடத்தப்படும். குறிப்பாக பிறந்த நாளை அந்த குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் வண்ணம் கொண்டாடுவோம்”, என்றார்.

அதே காலத்தைச் சேர்ந்த சத்ய நாரயணன், “கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் இருந்தாலும் வெளியில் எங்காவது கூட்டி செல்வது, கோயிலுக்கு கூட்டி செல்வது போன்றவை செய்வோம். பள்ளியைப் பொருத்தவரையில் அங்கு யாருக்கும் பிறந்த நாள் என்று சிறப்பாக கொண்டாட விடமாட்டார்கள். ஏனெனில் குழந்தைகளுக்குள் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அனைவரும் சேர்ந்து பிறந்த நாள் குழந்தைக்காக கூட்டு பிரார்த்தனை செய்வார்கள்”, என்றார்.

மாநகரம் அல்லது கிராமம் என்பதையெல்லாம் தாண்டி தலைமுறையினருக்கு நடுவில் இருக்கும் வேற்றுமைகளைப் பார்க்க முடிகிறது.

பரிசுகள்

குழந்தைகளுக்கு அளித்த பரிசு என்றால் சைக்கிள் மற்றும் புது ஆடைகள் ஆகியவைக் கூறலாம் என்கிறார் முரளி

“என் மகளுக்கு நான் வாங்கி கொடுத்த பரிசுகள் கைப்பை மற்றும் கடிகாரம் ஆகியவை”, என்கிறார் முருகேசன். இது 90களின் அப்பாக்களின் பரிசுகளாக பார்க்கப்படுகிறது.

“என் மகளுக்கு நாய்க்குட்டிகள் என்றால் பிடிக்கும். அது தவிர ஊஞ்சல் பரிசாக தந்துள்ளோம்”, என்கிறார் பரமேஸ்வரன் சிவக்குமார்.

“பஞ்சால் ஆன கரடி பொம்மைகள் மற்றும் அவர்கள் ஆசைப்படும் பொம்மைகளை வாங்கி கொடுப்போம்”, என்கிறார் சத்ய நாரயணன்.

விடுமுறைகள்

“விடுமுறை நாட்களில் குழந்தைகளை உறவினர்களின் வீட்டுக்கு அழைத்து செல்வோம். அந்த காலத்தில் அனைவரது வீட்டிலும் தொலைக்காட்சி இருக்காது. ஆனால் என் உறவினர் வீட்டில் தொலைக்காட்சி இருக்கும். அதை பார்ப்பார்கள். அங்கே குழந்தைகளுடன் விளையாடுவார்கள். அன்று இரவு வீட்டிற்கு வந்து விடுவோம்”, என்றார் முரளி. “ஆனால் கோடைக்கால விடுமுறைக்கு அவர்கள் தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பிவைப்போம்”, என்று கூறினார்.

“விடுமுறை நாளின் போது வெளியில் எங்காவது செல்வோம். அருகில் இருக்கும் கோயில், பூங்கா போன்ற இடங்களை பார்த்து விட்டு வருவோம். கோடைக்கால விடுமுறையின்போது பக்கத்து ஊரின் இருக்கும் உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்போம்”, என்றார் முருகேசன்.

“சாதாரண விடுமுறை நாளில் பெரிதாக எங்கும் வெளியில் செல்ல மாட்டோம். ஆனால் கோடை விடுமுறையின்போது அனைவரும் உறவினர்கள் வீட்டிற்கு சென்று அங்கிருந்து அருகில் இருக்கும் இடங்களுக்கு செல்வோம்”, என்கிறார் பரமேஸ்வரன் சிவக்குமார்.

இந்த காலத்து தந்தையான சத்ய நாரயணனும், “சாதரண விடுமுறை நாளில் எங்கும் செல்ல மாட்டோம். ஆனால் கோடை விடுமுறையின் போது அருகில் இருக்கும் ஏதெனும் ஒரு இடத்திற்கு சென்று வருவோம். தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு செல்லமாட்டோம். அந்தப் பயணம் குழந்தைகளை சோர்வாக்கிவிடும்”, என்கிறார்.

இந்த இரண்டு தலைமுறையினரிடம் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் தங்கள் குழந்தைகளின் கல்வி, கொண்டாட்டம் அவர்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் குறித்து தந்தைகள் அக்கறையாக இருந்துள்ளனர் என அவர்கள் அளித்த சில பதில்களில் தெரிய வருகிறது.

“அவர்களுக்கு என்ன தேவையோ அதை நான் செய்து கொடுத்து விடுவேன். அதை தவிர அவர்களுக்கு இருக்கும் ஆசையை அவர்கள் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்”, என கூறும்போது முரளியிடமுள்ள தந்தைக்குரிய கண்டிப்பும் தன் மகன்களுக்கு அவர் அளிக்க நினைக்கும் ஊக்கத்தையும் பார்க்க முடிகிறது.

“என் மகளின் நட்பு வட்டாரங்களைப் பற்றி எனக்கு தெரியும். அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆண் நண்பர்கள் பெண் நண்பர்கள் என பாகுபாடு காட்டாமல் அனைவரிடம் ஒன்றாகவே பழக வேண்டும் என கூறுவேன். அனைத்து நண்பர்களும் எங்களுக்கு உதவிகள் பல செய்துள்ளனர்”, என கூறும் போது முருகேசன் தந்தையாக தன் மகளின் மேல் இருக்கும் பாதுகாப்பு உணர்வையும் மகளின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பார்க்க முடிகிறது.

“என் மகளுக்கு அனைத்து விஷயங்களையும் நானே கற்றுக்கொடுப்பேன். அவளிடம் இருக்கும் திறமைகளை அறிந்து அதை ஊக்குவிக்கும் பள்ளியாகவே நான் தேர்ந்தெடுதேன். அவளுக்கு பிடித்தவற்றை அவள் செய்ய வேண்டும்”, என்கிறார் பரமேஸ்வரன் சிவக்குமார்.

இதிலும் மகளுக்குத் தரும் சுதந்திரத்தையும் பார்க்க முடிகிறது.

“நாம் காட்டும் வழியிலேயே குழந்தைகள் செல்கின்றன. எனவே அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும் என நான் நினைக்கிறேன்”, எனக் கூறும்போது மகனுக்கு நல்ல வழி காட்டும் பொறுப்பு ஒரு தந்தையின் கடமை என சத்ய நாராயணன் கூறுவதாக தெரிகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version