தமிழகத்தில் புதிதாக 2,532 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 தொற்றால் மேலும் 53 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று இறந்த 53 நபர்களில், 37நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும், 16நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.

இறந்தவர்கள் 50 நபர்களுக்கு நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இணை நோய்கள் இருந்ததாகவும், மூன்று நபர்கள் மட்டும் எந்தவித இணைநோய்கள் இல்லாமல் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இன்று பாதிப்புக்கு உள்ளான 2,532 நபர்களில் 52 நபர்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய ராஜ்ஜியம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது .

இன்று ஒரே நாளில் 1,493 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் செயல்படும் 85 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 8,92,612 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 31,401 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1,438 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version