இலங்கை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான முகமது சஹரான் ஹாசிம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன் உதவி புரிந்ததாக புலனாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.

சஹரானுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல ரிப்கான் பதியுதீன் உதவி புரிந்தார் என சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்று ரிப்கான் கூறியுள்ளதோடு, அரசியல் பழிவாங்கலுக்காக இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

காத்தான்குடி – அல்லியார் வீதியில் 2017ம் ஆண்டு இடம்பெற்ற மோதல் ஒன்று தொடர்பில் சஹரான் ஹாசிமை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்ததாகவும் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே சஹரான் ஹாசிம் இந்தியா தப்பிச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சஹரானும் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதியில் சஹரான் ஹாசிம் குருநாகல் மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளுக்கு சென்றிருந்ததாகவும், அங்கிருந்து வேறொரு இடத்திற்கு சென்றதாகவும் தமக்கு அறிய முடிந்ததாக புலனாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர் கூறினார்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன்னர் சஹரான் ஹாசிம் மன்னார் பிரதேசத்திற்கு வருகை தந்து, அங்கிருந்து இந்தியா நோக்கி படகு மூலம் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் காஷ்மீர் வரை அவர் பயணித்தமைக்கான தகவல் கிடைத்திருந்ததாகவும், சந்தேக நபர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஹைதராபாத்திலிருந்து வீடியோவொன்றை பதிவேற்றம் செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரிப்கான் பதியூதீன் பதில்

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சஹரான் ஹாசிம், கடல் மார்கமாக இந்தியா செல்ல தான் உதவி புரிந்துள்ளதாக புலனாய்வு துறை முன்னாள் பணிப்பாளர் அளித்த சாட்சியம் உண்மைக்கு புறம்பானது என ரிப்கான் பதியூதீன் தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும்கூட.

எந்தவித தொடர்பும் இல்லாத தனது பெயரை, புலனாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது பக்க நிலைப்பாட்டை தெளிவூட்ட தனக்கும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என ரிப்கான் பதியூதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் பழிவாங்கலுக்காகவே இவ்வாறானதொரு சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தனது சகோதரர் ரியாஜ் பதியூதீனை பழிவாங்கும் நோக்குடன் தனது பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், விடயங்களை தெளிவூட்ட தனக்கும் வாய்ப்பளிக்குமாறு அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version