சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவையே அச்சுறுத்திய வெட்டுக்கிளிகள் தொல்லை மீண்டும் உருவெடுத்துள்ளது. உணவுப் பயிர்கள் அவற்றால் உண்ணப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் வட இந்திய மாநிலங்களில் தொடங்கியுள்ளன.
வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை காலை பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் காணப்பட்டதாகவும் அவற்றை அழிப்பதற்கான குழுக்கள் அந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்று ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகள், நேற்று, வெள்ளிக்கிழமை, நடைபெற்றன. இந்த கட்டுப்பாட்டு முயற்சிகளில் இருந்து தப்பித்த வெட்டுக்கிளிகள் கூட்டம் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி பகுதியில் மீண்டும் ஒன்று சேர்ந்தன.
அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை முதல் இன்று சனிக்கிழமை காலை வரை அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முயற்சிகளில் இருந்தும் அந்த வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டத்தில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான வெட்டுக்கிளிகள் தப்பித்து மூன்று வெவ்வேறு குழுக்களாகச் சென்றன.
அவற்றில் ஒன்று ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராம் பகுதியில் ஒன்று சேர்ந்தது. இன்னொரு கூட்டத்தைச் சார்ந்த வெட்டுக்கிளிகள் உத்தரபிரதேச மாநிலம் ஃபரிதாபாத்தில் ஒன்று சேர்ந்தன.
பாலைவன வெட்டுக்கிளிகள் எவ்வாறு பேரழிவாக மாறுகின்றன?
பகல் நேரங்களில் பெரும் கூட்டமாக பறந்து சென்று வயல்வெளிகளில் உள்ள பயிர்களை உணவாக உட்கொள்ளும் இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள், பொழுது சாய்ந்ததும் இரவு நேரங்களில் தாவரங்களில் ஒட்டிக்கொண்டு இயக்கமற்ற நிலையில் இருக்கும் தன்மை உடையவை.
இந்த வெட்டுக்கிளிகள் பிரச்சனை கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் உலக நாடுகள் பலவும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநாவின் உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு தொடக்கத்தில் கனமழை மற்றும் சூறாவளி ஏற்பட்ட சமயத்தில், வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் அதீதமாக அதிகரித்தது. இதனால், அரேபிய தீபகற்பத்தில் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்க வழிவகுத்தது.
1993ஆம் ஆண்டுக்கு பிறகு, இவ்வளவு பெரிய அளவில் வெட்டுக்கிளி தாக்குதலை இந்தியா எதிர்கொண்டதில்லை.
வெட்டுக்கிளி இனங்களில் ஒன்றான பாலைவன வெட்டுக்கிளிகள் பொதுவாக வெறிச்சோடிய பகுதிகளில் காணப்படுபவை. முட்டையிலிருந்து உருவாகி சிறகுகள் கொண்ட வெட்டுக்கிளியாக மாறும்.
ஆனால் சில நேரங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் ஆபத்தான வடிவத்தை எடுத்துவிடுகின்றன.
பச்சை புல்வெளிகளில் பாலைவன வெட்டுக்கிளிகள் திரளாக வரும்போது, அவை மக்கள் வசிக்காத இடங்களில் வாழும் சாதாரண பூச்சிகளைப் போல நடந்து கொள்வதில்லை.
மாறாக, அவை பயங்கரமான வடிவத்தை எடுக்கின்றன. இந்த கட்டத்தில், வெட்டுக்கிளிகள் தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொண்டு பேரழிவை ஏற்படுத்துகின்றன.
வானத்தில் பறக்கும் இந்த கூட்டங்களில் பத்து பில்லியன் வெட்டுக்கிளிகள் இருக்கும். இவை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவில் பரவிப் பறக்கும்.
இந்த வெட்டுக்கிளிகளின் பெருந்திரள்கள் ஒரே நாளில் 200 கிலோமீட்டர் பயணிக்கக்கூடியவை.
இந்த வெட்டுக்கிளிகள் தங்கள் உணவுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் பெரும்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன.