சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட உள்நோக்கத்திலேயே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கோருகின்றார்கள். எவ்விதமான பாரபட்மின்றி ஆட்சியை முன்னெடுக்கும் மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் இருப்பதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாத நிலையில் அதிகாரப்பகிர்விற்கான அவசியம் என்ன? என்று கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வீரகேசரி பத்திரிகைக்ககு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- நாட்டின் ஆட்சியாளர்கள் தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கின்றார். இந்த நாட்டு மக்களின் மீட்பர் ஒருவராகவே அவரைப் பார்க்க வேண்டும். விசேடமாக கொரோனா காலத்தில் வேறெந்த நபரும் ஆட்சியில் இருந்திருந்தால் நாடாளவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான மரணங்கள் சம்பவித்திருக்கும். இதனை நாட்டில் உள்ள துரோகிகள் ஏற்றுக்கொள்ளாதிருக்கின்றனர்.
ஆனால் யதார்த்தம் அதுவாகத்தான் உள்ளது. அதுமட்;டுமன்றி மூவின மக்களின் பாதுகாப்பு கவசமாகவும் தற்போதைய ஆட்சி உள்ளது என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
கேள்வி:- ஆனால்ரூபவ் நாடு இராணுவ ஆட்சியைநோக்கி நகர்வதாக விமர்சனம் செய்யப்படுகின்றதே?
பதில்:- இந்தக் கூற்று அபத்தமானதாகும். நாட்டில் சட்டம் ஒழுங்கு அமுலாக்கப்பட்டு நிருவாகம் முன்னெடுக்;கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆளுமையற்றவர்களே அவ்வாறு கூறுகின்றார்கள். அவர்கள் அவ்வாறு கூறுவதற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை. அவ்வாறு கூறுபவர்களின் காலத்தில் இலங்கை மத்தியவங்கியில் பகல்கொள்ளை இடம்பெற்றது.
ஊழல் மோசடிகள் நடைபெற்றன. சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடியிருந்தன. தற்போது அவற்றை கட்டுப்படுத்த முனைகின்ற போது தான் அதனைப் பொறுத்தக்கொள்ள முடியாது இராணுவ ஆட்சி உருவாகின்றது என்று விமர்சிக்கின்றார்கள்.
தற்போது தான் இந்த நாட்டில் பேதங்களின்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவல்ல இரு தலைவர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி ஏற்றுள்ளார்கள்.
ஆகவே அவர்களின் தலைமையில் பெரும்பான்மை சிங்களவர்களுடன் ஏனைய இனத்தவர்களும் ஒன்றாக வாழும் சிறப்பான நிலைமை தோற்றம்பெறவுள்ளது.
கேள்வி:- நாட்டின் அரச நிருவாகம் உள்ளிட்ட சிவில் கட்டமைப்புக்களில் படை அதிகாரிகள் தொடர்ச்சியாக உள்ளீர்க்கப்படுகின்றார்களே?
பதில்:- நாட்டில் வினைதிறனான ஆட்சியொன்றை ஜனாதிபதி முன்னெடுக்க முனைவது தவறு என்று கூறுகின்றீர்களா. செயற்திறன் அற்றவர்களுக்கு அதுபற்றிப் பேசுவதற்கு எவ்விதமான அருகதையும் இல்லை. நாட்டின் முன்னேற்றத்திற்காக வினைத்திறனான செயற்பாடுகளுக்காக செயற்திறன் மிக்க படை அதிகாரிகளை இணைத்தக்கொள்வதில் உள்ள தவறுதான் என்ன?
கேள்வி:- சிவில் கட்டமைப்புக்களில் பணியாற்றுவதற்கு சிவில் அதிகாரிகள் உள்ள நிலையில் சீருடை தரித்தவர்கள் அவசியம் தானா?
பதில்:- சிவில் அதிகாரிகளிலும் மிகத்திறமையானவர்கள் உள்ளார்கள். அதேபோன்ற இந்த நாட்டுக்காக தம்மை அர்ப்பணிக்கவல்ல படைகளிலும் திறமையானவர்கள் உள்ளார்கள். அவர்களை தெரிவு செய்தே நாட்டின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி பயன்படுத்துகின்றார். ஜனாதிபதி தனது தனிப்பட்ட நலன்களில் அவர்களை பயன்படுத்தவில்லையே. இந்த நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்குத்தானே அவர்களை உள்ளீர்த்துள்ளார்.
கேள்வி:- கிழக்கு மாகாணத்தினை இலக்குவைத்து தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதென்றபெயரில் ஜனாதிபதியால் செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதேன்?
பதில்:– கிழக்கு மாகாணத்தினை இலக்கு வைத்து அவ்வாறான செயலணி உருவாக்கப்படவில்லை. தென்னிலங்கையில் தொல்பொருள் இடங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்து விட்ட நிலையில் ஏனைய பகுதிகளிலும் அவ்விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதி செயலணியை நிறுவியுள்ளார். அதில் எவ்விதமான உள்நோக்கமும் இல்லை.
கேள்வி:– இந்த செயலணியானது பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் நீங்கள் உள்ளிட்டவர்களை மட்டுமே அங்கத்தவர்களாக கொண்டிருக்கின்றதே?
பதில்:- எமக்கு தனியான நிகழ்ச்சி நிரல் இல்லை. தொல்பொருள் இடங்களை அடையாளம் காணுவதும் அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் தான் எமது பிரதான பணியாக இருக்கின்றது. மேலும் ஜனாதிபதி செயலணியால் எந்தவொரு இனத்தினதும் மதத்தினதும் தனித்துவ அடையாளங்களுக்கு குந்தகம் ஏற்படுத்தப்படப்போவதில்லை. மாறாக அவற்றின் வரலாற்றுத் தொன்மங்கள் பாதுகாக்கப்படவுள்ளன.
அதுமட்டுமன்றி அவ்வாறான வரலாற்றுத்தொன்மங்களின் பெறுமதியை உயர்அந்தஸ்துடன் பேணும் செயற்பாட்டையே ஜனாதிபதி செயலணி முன்னெடுக்கவுள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இன,மத துரோகிகளே அரசியல் மேடைகளில் கூச்சலிடுகின்றனர்.
கேள்வி:- கிழக்கில் தொல்பொருளை பாதுகாப்பது என்ற பெயரால் உருவாகியுள்ள செயலணியால் சிங்கள, பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றதே?
பதில்:– இதுமிகத்தவறானதாகும். முதுசங்களாக இருக்கும் தொல்பொருட்களை பாதுகாப்பதற்கே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அச்செயற்பாட்டை முறையாக முன்னெடுக்கும்போது பலர் தடைகளை ஏற்படுத்துகின்றார்கள். இவ்வாறான கருத்துக்கள் அரசியல்வாதிகளிடமிருந்து தான் வருகின்றன.
அவர்களுக்கு அரசியல் புரிவதற்கு எதுமே இல்லாத நிலையில் இவ்வாறான பொய்யான தகவல்கள் நிறைந்த கதைகளை அவிழ்த்துவிடுகின்றார்கள்.
கேள்வி:- கிழக்கினைப்போன்று வடக்கிற்கும் ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்க வேண்டுமென்று கோரப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா?
பதில்:- தற்போது வரையில் அவ்வாறான முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை. நாடளாவிய ரீதியில் உள்ள தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
நாட்டின் நன்மைக்காக அமைக்கப்படும் ஜனாதிபதி செயலணிகளை அரசியல் மயப்படுத்தி அதில் அரசியல் இலாபமீட்டுவதை விடுத்து அவ்வாறானவர்கள் அனைவரும் ஜனதிபதி, பிரதமரைப் பலப்படுத்தி ஆட்சியை வலுவாக்க வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பம் இதுவாகும். ஆகவே தற்போதைய ஆட்சியாளர்களை பலப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
கேள்வி:- அரசியல்வாதிகளுக்கு அப்பால் சாதாரண தமிழ், முஸ்லிம் மக்களும் அவ்வாறான மனோநிலையிலேயே உள்ளார்கள். அதற்காக மிக அண்மித்த உதாரணமொன்றாக முஹூதுமா விகாரையையொட்டிய காணி விடயம் காணப்படுகின்ற நிலையில் உங்களின் பதில் என்ன?
பதில்;:-முஹூதுமா விகாரை வரலாற்று தொன்மம் மிக்கது. அத்தகைய விகாரையொன்றுக்கு அருகில் உள்ள பகுதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலும் காணப்படுகின்றது.
அவ்வாறானதொரு இடத்தில் ஏன் குடியேறினார்கள். விகாரைக்குச் சொந்தமான பகுதியில் குடியேறுவதற்கு முடியாது. அது அவர்களின் பூர்வீக நிலமும் அல்ல. அத்தகையதொரு இடத்தில் அவர்கள் குடியேறுவதற்கு எந்த உரிமைகளும் கிடையாது. மேலும் அவ்வாறு குடியேறியவர்களுக்கு கூட மாற்றிடமொன்று வழங்குவதற்கும் தீர்மானம் உள்ளது. அப்படியிருக்க அவர்களுக்கு எவ்வாறு அநீதி இழைக்கப்பட்டது என்று கூற முடியும்.
கேள்வி:- தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களான வடக்கு கிழக்கில் தொல்பொருளை பாதுகாப்பதன் பெயரில் சிங்கள, பௌத்த மயமாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக நீண்டகாலமாக கூறப்பட்டு வருகின்றதே?
பதில்:– நீங்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாட்டையே பிரதிபலிக்கின்றீர்கள். பிரபாகரனே வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்று பிரகடனம் செய்தார்.
இலங்கையில் தமிழர்களுக்கான பூர்வீக பிரதேசம் எங்குள்ளது. இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமத்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
அவ்வாறிருக்கையில் தமிழர்களுக்கு என்று விசேடமாக பூர்வ பிரதேசமென்ற ஒன்று இல்லை.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை எடுத்துக்கொண்டால் அது தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக கொள்ளமுடியாது. கிழக்கிலங்கையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொல்பொருள் இடங்கள் காணப்படுகின்றன.
அவை அனைத்தும் பௌத்த, சிங்கள வரலாற்றுத் தொன்மங்களாகவே காணப்படுகின்றன. அங்கு தமிழர்களுக்கான பூர்வீக பகுதி எங்குள்ளது. சிங்களவர்களுடன் தமிழர்கள் வாழ்வதற்கு எங்குமே தடைசெய்யப்படவில்லை.
மேலும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிங்கள பெரும்பான்மையின படையினராலேயே பாதுகாக்கப்பட்டார்கள். கடந்த காலத்தில் தமிழர்களின் போராட்டக் குழுக்கள் அரங்கேற்றி படுகொலைகளை மறந்துவிடவேண்டாம்.
அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர்கள் சிங்களப்படையினர்களே. ஆகவே இலங்கையில் தமிழர்களுக்கென்று இல்லாத பூர்வீக பிரதேசத்தை இருக்கின்றது என்று கூறி இனவாதத்தினையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்க முயலவேண்டாம்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை செய்வதற்கு தயார் என்று அறிவித்துள்ளமையை எவ்வாறு பார்கின்றீர்கள்?
பதில்:– தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் தமிழ் மக்களுக்கு எள்ளளவும் அநீதி இழைக்கப்படவில்லை. அவ்வாறான தலைவர்கள் ஆட்சியில் இருக்கின்றபோது அவர்களுடன் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் சார்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அதற்கு யாரும் தடைகளை விதிக்கவும் முடியாது.
கேள்வி:- நீண்டகாலமாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவல்ல புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தால் ஆட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கத்தயார் என்றும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனரே?
பதில்:- கூட்டமைப்பு போன்ற தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களை தவறாக வழிநடத்துகின்றார்கள். இந்த நாட்டில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அசாதாரண சூழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் தென்னிலங்கைக்கு நிகராக வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்வதில் மத்திய அரசாங்கம் பல்வேறு பணிகளை முன்னெடுத்தள்ளது. அவ்வாறிருக்கையில் அதிகாரப்பகிர்வின் அவசியம் என்ன?
சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட உள்நோக்கத்திலேயே அதிகாரப் பகிர்வினை தமிழ்த் தலைவர்கள் கோருகின்றார்கள். மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் இருப்பதிலுள்ள பிரச்சினைகள் என்ன? மத்திய அரசாங்கம் பாரபட்சமின்றி செயற்படுகின்ற நிலையில் அதிகாரப்பகிர்வு யாருக்கு தேவையாகவுள்ளது.
கேள்வி:- நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்று கருதுகின்றீர்களா இல்லை புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென்றுகருதுகின்றீர்களா?
பதில்:– நாட்டினை சிறப்பாக நிருவகித்துச் செல்வதற்கான அடிப்படைச் சட்டமாக இருப்பதே அரசியலமைப்பாகும். அதில் விரும்பியவாறெல்லாம் திருத்தங்களை மேற்கொள்ளமுடியாது.
மாறிவரும் ஒழுங்குகளுக்கு ஏற்ப அடிப்படைச்சட்டங்களில் மாற்றங்கள் அவசியமாக இருந்தால் உரிய பிரேரணைகள் ஊடாக பாராளுமன்றில் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
அதனைவிடுத்து விரும்பிய நபர்களுக்கோ அல்லது குழுவினருக்கோ ஏற்றால் போல் அரசியலமைப்பில் மாற்றங்களை செய்வது கேலிக்கூத்தாகும். குறிப்பாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் ஒருதரப்பினரை திருப்தி செய்வதற்காக திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. மேலும் புதிய அரசியலமைப்பொன்று இந்த நாட்டிற்கு அவசியமா இல்லையா என்பதை ஜனாதிபதியும் பிரதமருமே தான் தீர்மானிக்க வேண்டும்.
கேள்வி:- நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள், சிங்கள, பௌத்தவாதத்திற்கு முதன்மைத்தானம் வழங்கிச் செயற்படுவதாக கூறப்படுகின்றதே?
பதில்:- இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்களாக காணப்படுகின்றார்கள் கிறிஸ்தவம், இஸ்லாம் சமயங்கள் வரமுதலே பௌத்த சமயம் இருந்துவருகின்றது. அத்துடன் அரசியலமைப்பிலும் அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவற்றை பேணிக்காப்பதில் தவறில்லை. அதேநேரம் அவர்கள் ஏனைய இன, மதங்களையும் புறந்தள்ளவில்லையே. அதற்கும் முக்கியத்தவம் அளிக்கின்றார்கள்.
கேள்வி:-பௌத்த மதத்தலைவர்களை ஆட்சியாளர்கள் அரசியலுக்காக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றதே?
பதில்:- பௌத்த பிக்குமார் அரசியலுக்காக பயன்படுத்தப்படவில்லை. மாறாக நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அவர்களே முன்னிலையாகி அவற்றை சுமுகமாக தீர்ப்பதற்கு உதவியிருக்கின்றர்கள் என்பதே இந்தநாட்டின் வரலாறாக இருக்கின்றது.
அவ்வாறு அவர்கள்செயற்பட்டதன் காரணத்தினால் தான் தமிழ்ரூபவ் முஸ்லிம் தரப்பினரும் இங்குள்ள பல்மதத்தவர்களும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
கேள்வி:- அண்மைய நாட்களில் கருணா அம்மான் இராணுவத்தினரை கொலை செய்ததாக கூறிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்ற நிலையில் அது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- இந்த விடயத்தில் ஜனாதிபதி பிரதமரே பதிலளிக்க வல்லவர்கள். அவர்களே கருணா அம்மான் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வேண்டியவர்கள். என்னைப்பொறுத்தவைரயில் கருணா அம்மான் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஜனநாயக முரண்பாட்டு செயற்பாடுகளால் வெறுப்படைந்தே அதிலிருந்து வெளியேறினார்.
எம்முடன் நட்புறவுகளை மேம்படுத்தி இணைந்து செயற்பட்டார். அவர் கடந்த காலத்தினைப் பற்றிக் கூறியிருக்கின்றார்.
அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் இந்த நாட்டில் உயிர்ப்பலிகளுக்கு காரணமாக இருந்த அரசில் கட்சிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஆகவே வரலாற்றில் கடந்த காலங்களில் தவறிழைத்தவர்கள் அதனை மீண்டும் செய்யாது இழைக்கப்பட்ட தவறுகளை தவறு என்றெண்ணி நினைவு கூருவது எந்தவகையில் தவறாகும்? தற்போது அரசியலை மையப்படுத்தியே கருணா அம்மான் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.