Site icon ilakkiyainfo

”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரை நிரந்தர தீர்வொன்று எட்டப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

கொழும்பிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இந்த விடயம் தொடர்பில் இராஜதந்திர உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், தமது அரசாங்கம் அந்த பகுதியை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டவில்லை என பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) வெளியிட்ட கருத்து பிழையானது என பிரதமர் தெரிவித்தார்.

ஆணையிறவு பகுதியில் ஒரே இரவில் 2000 முதல் 3000 இலங்கை ராணுவத்தை கொலை செய்ததாக கருணா அம்மான் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் வினவிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்திய வருவதாகவும் அவர் கூறினார்.

கருணாவிற்கு மன்னிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த முன்னாள் போராளிகள் 12,500 பேருக்கு தாம் மன்னிப்பு வழங்கியதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் கருணா அம்மானும் ஒருவர் என அவர் குறிப்பிடுகின்றார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு

இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தை தன்னால் தனித்து செய்ய முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தியே தீர்வை பெற்றுகொடுக்க வேண்டும் எனவும், கலந்துரையாடல்களை நடத்த தான் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்கு தான் வழங்கிய அதிகாரத்தை ஐ.தே.க சூறையாடியது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலை நடத்த தான் வழங்கி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் சூறையாடியதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

குறித்த மாகாணங்களில் யுத்தம் காரணமாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாதிருந்த சந்தர்ப்பத்தில், பல அழுத்தங்களுக்கு மத்தியில் தான் அந்த தேர்தலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம் என தெரிவித்துகொண்டே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த தான் அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், தன்னால் வழங்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை, கடந்த ஆட்சியாளர்கள் தேர்தல் நடத்தாது, அதனை சூறையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டு ஊக்குவிப்பு

இலங்கைக்கு முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்யுமாறு தமது அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் கூறுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

தெற்கில் காணப்படும் முதலீட்டுகளை போன்றே, வடக்கிலும் முதலீடுகளை செய்ய தாம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு குறைவு என கூறப்படும் கருத்தை நிராகரித்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கில் தமிழர்கள் கைது

இலங்கையின் தென் பகுதியில் அதிகரித்து காணப்படும் பாதாள உலக குழுக்களை போன்றே, வடக்கிலும் சில குழுக்கள் செயற்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

வடக்கிலுள்ள 21 தமிழர்கள் கடந்த சில தினங்களில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக இராணுவ முகாம்களுக்கு அருகிலிருந்து வெடி பொருட்கள் சில மீட்கப்பட்ட நிலையில், வடக்கிலுள்ள 21 தமிழர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தென் பகுதியிலும் இவ்வாறான கைதுகள் இடம்பெற்று வருவதாக கூறிய அவர், மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை

ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூத்த நீதிபதிகள் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவிக்கின்றார்.

இந்த விடயத்தில் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமையினால் தாம் அது தொடர்பில் தலையீடு செய்வதில்லை எனவும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் இந்த ஆணைக்குழு முன்னிலையில் விசாரணை செய்யப்படுவார்களா என வினவிய போது, ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானிக்கப்படும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கபட்டோர் விவகாரம்

யுத்த காலத்தில் வலிந்து காணாமல் போனதாக கூறப்படும் உறவினர்களுடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

காணாமல் போனதாக கூறப்படும் சிலர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகவும், சிலர் உள்நாட்டில் மறைந்திருக்கக்கூடும் எனவும், அவ்வாறு இல்லையென்றால் சிலர் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து, காணாமல் போனோரின் உறவினர்களுக்கு தீர்வொன்றை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும், இந்திய மீனவர்களின் பிரவேசம் தொடர்ந்தும் காணப்படுவதாக பிரதமர் கூறுகின்றார்.

இந்திய மீனவர்களுக்கு மாற்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் தொடர்ந்தும் இலங்கைக்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த பிரச்சினை குறித்து விரைவில் தீர்வொன்றை பெற்றுகொடுக்க இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார்.

Exit mobile version