தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கிடையிலான கலந்துரையாடலில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்து வெளித்தெரிந்தது. மோதல் வெடிக்கும் என முன்கூட்டியே எதிர்பார்த்ததாலோ என்னவோ, பத்திரிகையாளர்களை கூட்டத்திலிருந்த வெளியேற்றப்பட்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், உடனடியாக நிகழ்விலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆகியவற்றின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டாதவர்கள், மற்றும் உள்ளூர் பிரமுகர்களை உள்ளடக்கியதாக இடம்பெற்ற இந்த கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் 10 பேரும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே எம்.ஏ.சுமந்திரன் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். விடுதலைப் புலிகளின் மூத்த போராளியும், தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனுடன் ஆரம்ப நாட்களில் செயற்பட்டவரும், திருநெல்வேலி கண்ணிவெடி தாக்குதலில் பங்குபற்றியவர்களில் எஞ்சியிருக்கும் ஒரேயொருவருமான மனோகரன் (பஷீர் காக்கா) நேற்று உணர்வுபூர்வமாக தமிழ் மக்களிடம் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ் தேசியத்தை வெற்றியடைய வைக்க வேண்டுமென்றால் எம்.ஏ.சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். அந்த செய்தியை இன்று உதயன் நாளிதழ் இன்று வெளியிட்டது.

இன்றைய உதயன் பத்திரிகைகளில் ஒரு தொகையை கொள்வனவு செய்து, இன்று நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, மண்டபத்தில் இருந்தவர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் விநியோகித்தார்.

இதன்போது உதயன் உரிமையாளர் சரவணபவன் நிகழ்விற்கு வந்திருக்கவில்லை. சற்று தாமதமாகவே வந்தார். நிகழ்வு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே யாழ் மாவட்ட வேட்பாளர் ஈ.சவணபவன் உடல் நல குறைவு காரணமாக உரையாற்றாமல் சென்று விட்டார்.

கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

ஏனைய 9 வேட்பாளர்களும் தலை 3 நிமிடம் உரையாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாவை சேனாதிராசா உரையாற்றிய போது, கட்சிக்குள் சுமந்திரன் தரப்பும், சரவணபவன் தரப்பும் மோதிக் கொண்டிருப்பதை- பகிரங்கமாக பெயர் சொல்லாமல்- குறிப்பிட்டு, அனைத்து தரப்பும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென்றார்.

த.சித்தார்த்தன் உரையாற்றிய போது, தமிழ் அரசு கட்சிக்குள் நடக்கும் மோதலை சுட்டிக்காட்டினார். ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதற்கு வேட்பாளர்கள் முனைகிறார்கள். பேஸ்புக், பத்திரிகைகளில் மற்ற வேட்பாளரை அவதூறு செய்கிறார்கள். இதன் மூலம் எதிராளியை வீழ்த்தலாமென நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியே சிதைகிறது, ஒருவரையொருவர் அவதூறு செய்யாமல் பிரச்சார பணிகளில் ஈடுபட வேண்டுமென ஆலோசனை சொன்னார்.

அவர் பேசிய விடயங்களை கருத்தில் எடுத்தாரோ என்னவோ, மேடையிலேயே தாக்குதலை ஆரம்பித்தார் சுமந்திரன். சித்தார்த்தன் தொடர்பாக தாக்கும் விதமான மேடையில் சில கருத்துக்களை தெரிவிததார்.

இதையடுத்து உரையாற்றி எழுந்த கஜதீபன் அதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்தார். சுமந்திரன் 5 வயதில் கொழும்பு போய், 48 வயதில் திரும்பி வந்துள்ளார். அவருக்கு இந்த மண்ணின் வரலாறு தெரிந்திருக்காமலிருக்க வாய்ப்புள்ளது என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version