2009ம் ஆண்டிற்கு முன்னர் எமது இலக்கு வேறு. எமது அணுகுமுறை வேறு. தற்போது வித்தியாசமான அணுகுமுறை. இது உண்மை. பலரும் ஏற்றுக்கொண்டது.

பலர் வெளியில் கூறமாட்டார்கள். ஆனால் இது சகலருக்கும் தெரிந்த விடயம். தனிநாடு இலக்கு.

ஆயுதப் போராட்டத்தினால் பெறுவோம் என்பது அணுகுமுறை……

மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்ந்து குழப்பத்தை அதிகரிக்கின்றன.

2007ம் ஆண்டிற்கு முன்னர் தனிநாடு எமது இலக்கு என்றால் அந்த இலக்கு தமிழரசுக்கட்சியின் இலக்காக இருந்ததா? அல்லது விடுதலைப்புலிகளின் இலக்காக இருந்ததா? தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள அவர் 2007 ம் ஆண்டிற்கு முன்னர் எமது இலக்கு தனிநாடு, ஆயுதப் போராட்டம் வழிமுறை என்கிறார்.

அவ்வாறானால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட பேரழிவிற்கு தமிழரசுக்கட்சியும் உடந்தை அல்லவா? தம்மை எவ்வாறு ஜனநாயக கட்சி என அழைக்க முடியும்? இவை தொடர்பாக பல கேள்விகள் எழ வாய்ப்பு உண்டு.

கட்சிக்குள் எவ்வித ஜனநாயகமும் அற்று தனிநபர் ஆதிக்கம் நிறைந்துள்ள நிலையிலும், வெளியில் பலமான மாற்று அமைப்பு இல்லாத நிலையிலும் தமிழரசுக்கட்சி மக்களின் பெயரால் தாம் முடிவுகளை மேற்கொண்டதாகக் கூறுவது நியாயமெனில் இன்றைய ராஜபக்ஸ ஆதரவாளர்கள் மக்களின் பெயரால் அரசிலமைப்பிற்கு வெளியில் முடிவுகளை எடுப்பதாகக் கூறுவதும் நியாயமாகவே கருதவேண்டும்.

தமது கட்சியின் இலக்கு மாறியதற்கான விளக்கங்களை பின்வருமாறு தருகிறார்.

…… இப்போது தனிநாடு எமது இலக்கு அல்ல. இதனைக் கூறும்போது பலருக்குக் கசப்பாக இருக்கும். ஏன் இவர் இதைச் சொல்கிறார்? அது எமது இலக்கு அல்ல.

இது உண்மை. இந்த உண்மையை எமது மக்கள் புரிந்துள்ளார்கள். ஆனபடியால்தான் அவ்வாறான கேள்விகளை மக்களும் கேட்கவில்லை.

இந்த உண்மையை எல்லோருமே அறிந்துள்ளார்கள். ஆகையால் யாரும் அதுபற்றிப் பேசவில்லை.

ஆனால் நான் இதுபற்றிப் பேசினால் இவர் தேசியத்திற்கு விரோதமானவர். அந்த யதார்த்தம் சகலருக்கும் தெரிந்த யதார்த்தம்.

2009ம் ஆண்டின் பின்னர் எமது இலக்கு வேறு. அணுகுமுறை வேறு. ஆனால் இருந்த அரசாங்கத்தின் இலக்கு இன்னொன்று. அதன் அணுகுமுறை வேறொன்று……

சுமந்திரன் அவர்களின் மேற்குறித்த கருத்துக்கள் மிகவும் கவனத்திற்குரியவை. இவை தமிழரசுக்கட்சியின் உட்பொறிமுறை மிகவும் உழுத்த நிலையில் இருப்பதை உணர்த்தும் அதே வேளை, தமிழ் மக்களின் எதிர்காலம் மிக சூனியமாக, பரந்த விவாதம் அற்று அல்லது ஜனநாயக வழியிலான வகைகளில் அபிப்பிராயங்களைப் பெற்று எடுத்த முடிவுகளாக அவை இல்லை.

ஒரு வகையில் தமிழ் மக்கள் அக் கட்சிமேல் கொண்டுள்ள நம்பிக்கையை மிகவும் துஷ்பிரயோகம் செய்யும் வழிமுறை காணப்படுவதை அவரது கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாகவே ஒரு கட்சி தனது கொள்கைகளில் அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ளும்போது கட்சிக்குள் பலமான விவாதங்களை மேற்கொள்ளும்.

அதே போலவே பொதுமக்கள் மத்தியிலும் விவாதங்களைத் தூண்டும். எதிர்த் தரப்புடன் விவாதங்களை ஏற்படுத்தும்.

இவை எதுவுமே இல்லாது காணப்படும் நிலைக்கும், விடுதலைப்புலிகளின் தலைமையிலுள்ள ஒரு சிலர் எடுத்த முடிவுகளுக்குமிடையே வித்தியாசங்கள் இல்லை.

ஜனநாயகத்தை மரணப்படுக்கையில் தள்ளியபின் எடுக்கும் தீர்மானங்களே அவை.
அவ்வாறாயின் கட்சியிலுள்ள அதிகாரமிக்க ஒரு சில தனி மனிதர்கள் இவ்வாறான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல்களைக் கொண்டுள்ளார்களா? என்ற அடுத்த கேள்வி எழுகிறது.

நிச்சயமாக இல்லை. கட்சிக்குள் பல ஊடுருவல்கள் நிகழ்ந்துள்ளன. போரின் இறுதிக் காலங்களில் கட்சிக்குள் பல சந்தர்ப்பவாத சக்திகள் உட்புகுந்தன.

கொழும்பு ஆதிக்கம் அதிகரித்தது. வெளிநாட்டுத் தொடர்புகள் காரணமாக தமிழரசுக்கட்சி இந்திய, அமெரிக்க வலையில் சிக்கியிருந்தது.

உள்நாட்டு அரசியலில் பின்பற்றிய அரசியல் தந்திரங்கள் தோல்வியடைந்த நிலையில் அது தனது செயற்பாடுகளை இந்த நாடுகளின் கைகளில் ஒப்படைத்திருந்தது.

அரசியலமைப்பின் 6வது திருத்தம் காரணமாக விலகியவர்கள் மீண்டும் திரும்பினார்கள்.

முப்பது ஆண்டுகால தமிழ் மக்களுக்கெதிரான ராணுவப் படுகொலைகளில் சம்பந்தப்பட்ட சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது நிபந்தனையற்ற ஆதரவை இக் கட்சி வழங்கியது.

பின்னர் இலங்கை அரசுடன் அமெரிக்காவும் இணைந்து ஜெனீவாவில் தீர்மானங்களை முன்மொழிந்தபோது இக் கட்சி ஆதரவு வழங்கியது.

இவை யாவும் கட்சியின் பின்னணியில் செயற்படும் இயக்கு சக்திகளை அடையாளம் காட்டின. இதனை அவர் தரும் விபரங்களின் மூலம் காணலாம்.

…… நாங்கள் 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை எதனையும் செய்திருக்க முடியாது என்ற எண்ணம் பலரின் மத்தியில் உள்ளது.

பேசிப் பார்த்தோம். முயற்சி செய்து பார்த்தோம். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 நாட்கள் அமெரிக்க ராஜாங்க அமைச்சில் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாகத்தான் இறுதியிலே சில மாதங்கள் கழித்து 2012ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு பிரகடனத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அது நாம் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தைகளின் பிரதிபலிப்பு…..

சுமந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அமெரிக்க தரப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள்தான் ஜெனீவாவில் அமெரிக்க தீர்மானம் எனக் கூறும் கதைகள் தமிழரசுக்கட்சியை மிக உயர்ந்த இடத்தில் உலக நாடுகள் வைத்திருப்பதாகக் காட்டும் அரசியல் 21ம் நூற்றாண்டிலும் தொடர்வது மிக வெட்கமாக உள்ளது.

இங்கு சுமந்திரன் அவர்களின் உரையை முன் வைத்து விமர்சனங்களை மேற்கொள்வது, அவரை விமர்சனம் செய்வது என்பதை விட அக் கட்சியின் சார்பில் மிகவும் வெளிப்படையாகப் பேசும் ஒருவர் என்ற வகையிலும், கட்சியின் சார்பில் பேசுபவராகவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனும், அரசுடனும் பேசும் முக்கியஸ்தர் என்ற வகையிலும் அவரது கருத்துக்கள் அமைவதும், கட்சியின் உள்முரண்பாடுகளை அம்பலப்படுத்துவது ஒரு வகையில் உட்கட்சி ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு அவர் உதவுகிறார் என்ற வகையிலும், இவ்வாறான ஜனநாயக சக்திகளை மக்கள் அடையாளம் கண்டு உற்சாகம் அளிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புமாகும்.

அவர் கட்சியின் உட் கட்டுமானங்களில் உள்ள குறைபாடுகளை இவ்வாறு விபரிக்கிறார்.

….. இளைஞர்களை உள்வாங்கவேண்டும் என்பது எனது வெளிப்படையான விமர்சனம். கட்சிக்குள் நான் வைக்கும் விமர்சனமும் இதுதான்.

இளைஞர்களுக்கு, பெண்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை. இன்னமும் கொடுக்கப்படவில்லை. ஏற்றுக் கொள்கிறேன்.

கட்சிக்குள்ளும், வெளியிலும் கூறி வருகிறேன். சில இளைஞர்களை அடையாளம் கண்டு பயிற்சி கொடுத்து வளர்த்தோம்.

ஆனால் ஒரு மட்டத்திற்கு மேலே அவர்களை வளர விடமாட்டோம். அது மாற்றம் பெற வேண்டும்.

சென்ற தேர்தலின்போது பெண்களுக்கு 50 சதவீதம் நியமனப் பத்திரத்தில் வழங்கவேண்டுமெனப் பகிரங்கமாக கூறினேன்.

அந்த முயற்சியில் நான் பெரும் தோல்வி அடைந்தேன். ஓவ்வொரு மாவட்டத்திலும் மருந்துக்கு ஒருவரை நிறுத்தினோம். எல்லோரும் தோல்வி அடைந்தார்கள்.

இன்னொரு விடயத்தையும் கூறினேன். இருக்கிற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே திரும்பவும் நியமனம் கொடுப்பதாக இருந்தால் எஞ்சிய இடங்கள் கொஞ்சம்தானிருக்கும்.

அதிலே நாங்கள் நிறுத்துவது நிச்சயம் தோல்விஅடைபவர்கள் மட்டும்தான். அதிலே நாங்கள் நிறுத்துவது தோற்பவர்கள் மட்டும்தான்.

ஏனெனில் அவர்கள் வென்றால் நாங்கள் தோற்றுவிடுவோம். தற்போதுள்ள நிலையில் மூன்றுபேர் நிச்சயம் தோற்கவேண்டும். எனவே தோற்கிற மூவரை முதலில் நாம் தெரிவு செய்வோம். இல்லையேல் நாம் தோற்றுவிடுவோம்.

இது மாற்றப்பட வேண்டும். அதனால்தான் கட்சிக்குள்ளும். பகிரங்கமாகவும் கூறுகிறேன். இருக்கிற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தானாக நியமனம் கொடுக்க வேண்டாம்…..

இங்கு தமிழரசுக்கட்சியின் உள் விவகாரங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசும் ஒருவரை அதன் வரலாற்றில் முதலாவது நபராக அடையாளம் காண முடிகிறது.

பாராளுமன்ற பதவி என்பது ஒரு கருவி எனத் தெரிவிக்கும் அவர் இக் கருவியைப் பெற கட்சிக்குள் நடைபெறும் கலகங்களை இவ்வாறு விபரித்த பின்னரும் அவ்வாறு கூறுவது சற்றும் பொருத்தமானதாக இல்லை.

சுத்த மழுப்பலைத் தவிர வேறொன்றும் இல்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல இக் கட்சி மாற்றத்திற்குச் செல்வதற்கான எந்த வாய்ப்புகளும் அற்ற ஒன்றாகவே அவரது உரையின் சாராம்சம் தெரிவிக்கிறது.

இங்கு அவர் கட்சியின் ஜனநாயகம் குறித்து விளக்கம் அளிக்கும் வகை இன்னும் வியப்பானது. மேலும் குழப்பங்கள் தொடர்கிறது.

….. எமது கட்சி ஒரு யுத்த காலத்தைக் கடந்து வந்த கட்சியாகும். இக் கட்சி யுத்தத்திற்கு முன்னரும், பின்னரும் உள்ள கட்சி. யுத்த காலத்திலே அடங்கிப்போயிருந்த கட்சி. செயலிழந்திருந்த கட்சி. திடீரென ஜனநாயகப் பண்புகள் வந்துவிடாது.

அது கொஞ்சக் காலம் எடுக்கும். ஏனெனில் 30 வருஷம் வேறு விதத்தில் பழகிப் போனோம்.

சொன்னதைச் செய்வது. யுத்த காலத்தில்கூட பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன. அவை ஒன்றாக வந்தது எப்படி? எனப் பலருக்கும் தெரியும்.

சகோதரப் படுகொலைகள் மூலமாகத்தான் அவ்வாறு ஏற்பட்டது பலருக்கும் தெரியும். ஜனநாயக வழியில் அப்படிச் செய்ய இயலாது…..

சுமந்திரன் அவர்களின் இக் கருத்துக்கள் மிகச் சமீபத்தில் வெளியானவை. தேர்தலை இலக்காக எண்ணி வெளியிடப்பட்டவை.

தேர்தல் காலத்திலும் தனது கட்சியைப் பற்றி மிகவும் விமரச்சித்து உரையாற்றுவது என்பது அக் கட்சிக்குள் அவர் வகிக்கும் காத்திரமான பலத்தின் அடிப்படையாக இருக்கலாம் அல்லது கட்சிக்குள் செயற்படும் ஜனநாயக சக்திகளுக்கு மேலும் பலத்தை வெளியில் ஏற்படுத்தும் நோக்கமாக இருக்கலாம்.

இருப்பினும் 2009ம் ஆண்டின் பின்னர் கட்சி அடிப்படை மாற்றங்களுக்குள் சென்றுள்ளதாக அறிவிக்கும் அவர் 2015ம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குக் தாமும் காரணியாக இருந்ததாக இவ்வாறு தெரிவிக்கிறார்.

……2014ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு நாங்கள் ஒரு முக்கிய காரணி. இது பலருக்குத் தெரியாத விஷயம்.

அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பதாக 2012ம் ஆண்டு சோபித தேரர் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தை ஆரம்பித்த போது தேசிய நூலகத்திலுள்ள சிறிய அறையில் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

அந்த முதலாவது கூட்டத்திலேயே நான் அவர்களுடன் பேசியுள்ளேன். நாங்கள் தொடர்ச்சியாக அவர்களுடன் பேசியிருக்கிறோம்…..

தமிழரசுக்கட்சியின் ஒற்றைக் குரலாக வெளிப்படும் இக் கருத்துக்கள் இரண்டு தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

அதாவது கட்சிக்குள் ஜனநாயக மாற்றங்களைத் தூண்டுவது அது சாத்தியப்படவில்லை எனில் வெளியில் அதற்கான வாய்ப்புகளைத் தூண்டுவது என்பதாகும்.

ஆனாலும் அவரது கருத்துக்களை ஆழமாக நோக்கும்போது அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் காத்திரமான மாற்றங்களுக்குள் செல்லக்கூடிய அளவிற்குக் கட்சி தயாராக இல்லை.

அவரது ஏக்கங்கள், நோக்கங்கள் செயற்பாட்டு வடிவங்களாக மாற வேண்டுமெனில் அவர் தனது தளர்ந்த கருத்து நிலையிலிருந்து காத்திரமான கோட்பாட்டு மாற்றங்களுக்குள் செல்ல வேண்டும்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஐ தே கட்சி, தமிழரசுக்கட்சி மத்தியிலான குழப்பங்களின் பின்னணியில்

சுதந்திரத்திற்குப் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட கட்சிகள் மத்தியில் தற்போது பெரும் உட்கட்சிப் போராட்டங்களும், கட்சிப் பிளவுகளும் அதிகரித்துள்ளன.

இவை தற்செயல் சம்பவங்கள் அல்ல. கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் பாரிய பொருளாதார மாற்றங்களும், அரசியல் , சமூக மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

ஆனால் இக் கட்சிகள் மத்தியில் இம் மாற்றங்களுக்கு ஏற்றவாறான உட்கட்டமைப்பு மாற்றும் அரசியல் அணுகுமுறை மாற்றங்கள் இடம்பெறவில்லை.

உதாரணமாக ஐ தே கட்சி இன் தோற்றம் என்பது குடியேற்ற ஆட்சியாளரின் எச்ச சொச்ச நலன்களைப் பாதுகாப்பதாகவும், தொடர்ந்து முதலாளித்துவ, ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களின் காவலனாகவும் செயற்பட்டது.

1972ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அல்லது குடியரசாக மாற்றம் பெற்றதன் காரணமாக அவை ஏகாதிபத்திய, முதலாளித்துவ நலன்களுக்கு எதிராக அமைந்தன.

தேசிய பொருளாதாரக் கட்டுமானங்களை அல்லது தேசிய உற்பத்தியைச் சுயசார்பாக மாற்ற எடுத்த நடவடிக்கைகள் உள்நாட்டில் பெரும் பற்றாக்குறை நெருக்கடியை எற்படுத்தியது.

இறக்குமதிக் கட்டுப்பாடும், உள்நாட்டு உற்பத்திப் பற்றாக்குறையும் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் அவை மீண்டும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்தன.

இலவச அரிசி வழங்கல், அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் வரிசையில் நிற்பதைத் தடுத்தல் என்ற கோஷங்களுடன் ஐ தே கட்சி அரசு நாட்டைச் சிங்கப்பூராக மாற்றுவதாகவும் கூறிப் பதவிக்கு வந்தது.

இதுவே இன்றைய திறந்த பொருளாதார அடிப்படைகளுக்கு வாய்ப்புகளைத் திறக்க உதவியது.

அதே போலவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகாதிபத்திய ஆதரவுப் போக்கிற்கு எதிராகவும், தேசிய பொருளாதாரத்தைக் கட்;டமைக்கவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பட்டது.

இதன் காரணமாகவே 1970 இல் பதவிக்கு வந்த இக் கட்சி லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூ. கட்சி ஆகியவற்றுடன் இணைந்து கூட்டு அரசாங்கத்தை உருவாக்கி, ஏற்கெனவே காணப்பட்ட எச்சொச்ச ஏகாதிபத்திய, குடியேற்ற உறவுகளை முறிக்கும் பொருட்டு 1972ம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பினை வரைந்து நாட்டில் காணப்பட்ட குடியேற்ற ஆதிக்க நலன்களான பெருந்தோட்டம், துறைமுகம் மற்றும் பல துறைகளைத் தேசியமயமாக்கியது.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல அந்நிய இறுக்குமதிகளுக்குக் கட்டுப்பாடு விதித்துத் தேசிய உற்பத்திiயை அதிகரிக்க எடுத்த நடவடிக்கைகளாகும்.

தமிழரசுக்கட்சியின் தோற்றமும் இவ்வாறான ஓர் பின்னணியிலேயே உருவாகியது. ஏற்கெனவே தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்குள் நிகழ்ந்த தனிநபர் மோதல்கள், ஐ தே கட்சியுடனான உறவில் காணப்பட்ட முறுகல்கள் என்பனவற்றுடன், மலையக மக்களின் சிவில் உரிமைகளைப் பறிக்க ஐ தே கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்திய – பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் தமிழரசுக்கட்சியின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தன.

ஐ தே கட்சியின் இச் சட்டத்தை தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆதரித்தமையைக் காரணம் காட்டியே தமிழரசுகட்சி உருவாகியது.

ஆனாலும் குடியேற்ற ஆதிக்க சக்திகளின் ஆதரவை இக் கட்சி தேசியமயக்கல்களின்போது வெளிப்படுத்தியது.

இதுவே ஐ தே கட்சிக்கும், தமிழரசுக்கட்சிக்குமிடையேயுள்ள பொதுவான இணைப்பாக உள்ளது.

இவற்றிற்கிடையே முறுகல் நிலை காணப்படினும் நலன்கள் குறித்து எப்போதும் இணக்கம் உள்ளது.

சுதந்திரத்தின் பின்னர் மலையக மக்கள் தலைமைக்கும், முஸ்லீம் மக்கள் மத்தியிலும் பலமான ஆதரவை வைத்திருந்த இக் கட்சி படிப்படியாக பிரிவினைக் கோரிக்கைகளுக்குள் சென்றபோது மலையக, முஸ்லீம் மக்கள் இவர்களிலிருந்து படிப்படியாகவே விலகினர்.

தற்போது சிறீலங்கா சுதந்திரக்கட்சி மரணப்படுக்கையில் உள்ளது. அதற்குக் காரணம் அக் கட்சிக்குள் கொள்கை வேறுபாடுகள் குறைந்து தனிநபர் ஆதிக்கம் நிறைந்துள்ளமையாகும்.

1977ம் ஆண்டின் பின்னதான திறந்த பொருளாதார செயற்பாடுகள் இக் கட்சியின் தேசிய பொருளாதார வளர்ச்சியை விரும்பும் சக்திகளுக்குப் பலமான ஊக்குவிப்பை வழங்கியுள்ளது.

இதனால் ஐ தே கட்சிக்கும், சுதந்திரக்கட்சிக்குமிடையேயான பொருளாதார முரண்பாடுகள் அருகின.

இரு கட்சிகளுமே திறந்த பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தின. தற்போதுள்ள பிரதான முரண்பாடாக தேசிய பொருளாதார வளர்ச்சியில் குழு ஆதிக்கமே உள்ளது.

தேசிய சிறுபான்மை இனங்களிடையேயும் சந்தைப் பொருளாதாரத்திற்கான ஆதரவு பெருகையில் இனக் குழும ஆதிக்கம் அதாவது சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கமே இக் குழுக்களின் பிளவுக்கான பிரதான காரணமாக உள்ளது.

தமிழரசுக்கட்சியின் உட் கட்டுமானங்களில் தற்போது திறந்த பொருளாதாரத்திற்கான ஆதரவு சக்திகள் பலமாக இருப்பதால் தேசிய அளவிலான இணக்கத்தை இச் சக்திகள் விரும்புகின்றன.

இதனால் ஏற்கெனவே இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை முன்னிறுத்திய இக் கட்சி தற்போது படிப்படியாக அபிவிருத்திச் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதால் தேசிய இனப் பிரச்சனை இரண்டாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதுவே தற்போது சுமந்திரன் தொடர்பான வாதங்களின் பின்னணியாக உள்ளது. ஒரு புறத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக அல்லது பிரிவினையை மறைமுகமாக முன்னிறுத்தி அரசியல் செய்யும் சக்திகளுக்கும், மறுபுறத்தில் தேசிய பொருளாதாரக் கட்டுமானங்களில் பங்குபற்றி அதனடிப்படையில் ஏற்படும் நல்லிணக்கத்தின் பின்னணியில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை நோக்கிச் செல்லலாம் என்ற வாதங்களின் விளைவே இவைகளாக உள்ளன.

தமிழ்க்குறும் தேசியவாதம், பிரிவினை என்பவற்றை ஆதரிக்கும் சக்திகளுக்கும். தேசியவாதத்தைப் பன்மைத்துவ நிலைக்கு மாற்ற அல்லது தேசிய சகவாழ்வை நோக்கி இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்குமிடையேயான பிளவாகவே இவை உள்ளன.

எனவே பழமைவாய்ந்த இக் கட்சிகளால் நவீன பொருளாதார மாற்றங்களுடன் இணைந்து செல்ல முடியாதவாறு அக் கட்சிகளின் உட் கட்டுமானங்கள் இருப்பதால்தான் இக் கட்சிகளுக்குள் பாரிய பிளவுகள் தோன்றியுள்ளன.

அந்த வகையில் தற்போது தமிழரசுக்கட்சிக்குள் எழுந்துள்ள நிலமைகள் ஏற்கெனவே ஐ தே கட்சி, சுதந்திரக்கட்சி மத்தியிலே ஏற்பட்டுள்ள பிளவுகள் போலவே இக் கட்சியும் பிரிவினை, வன்முறை, குறும்தேசியவாதம் என்பவற்றிற்கெதிரான அபிவிருத்தி, சகவாழ்வு, மனித உரிமை, ஜனநாயகம் ஆகிய நவீன கோரிக்கைகளுடனான மோதல்கள் என்றே குறிப்பிடலாம். எனவே இப் பிளவுகள் ஒரு வகையில் தவிர்க்க முடியாதவை.

முடிவாக…..

இக் குரல்கள் சக்திவாய்ந்ததாக மாற்றப்படுதல் அவசியமாகிறது. தேசிய இனப் பிரச்சனை என்பது தமிழ் தரப்பினாலும், சிங்கள தரப்பினாலும் வௌவேறு விதமான விளக்கங்களுக்குள் சென்றுள்ளது.

சிங்கள பேரினவாத தரப்பினர் சிறுபான்மையோர் என்ற அடையாளப் பிரச்சனை நாட்டில் இல்லை என மறுதலிக்கும் நிலைக்குச் சென்றுள்ள வேளையில், சிறுபான்மைத் தேசிய இனங்கள் தாம் மேலும், மேலும் ஒடுக்கப்பட்டுச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற அச்சத்திற்குள் சென்றுள்ளனர்.

அத்துடன் பெரும்பான்மை முஸ்லீம் மக்களும், மலையக மக்களும் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்திற்குள் வாழ்வதால் அமைதியைப் பேணுவது முதன்மையானதாகவும் உள்ளது.

இங்கு தேசிய சிறுபான்மை இனங்களிடையே போதிய நல்லிணக்கம் இல்லாமலிருப்பது பேரினவாதிகளுக்கு வாய்ப்பானதாகவே உள்ளது.

இந்த இறுக்கமான போக்கினைத் தளர்த்துவதாயின் சுமந்திரன் போன்றவர்கள் அரசியல் யாப்பை விட தேசிய நல்லிணக்கத்திற்கு முதலிடம் வழங்க வேண்டும்.

தமிழ் மற்றும் முஸ்லீம் தரப்பினரிடையே இணக்கத்திற்கு எதிரான போக்குகள் வலுவாக உள்ளன. அவை அரசியல் சௌகரியங்களுக்காக நன்கு பயன்படுத்தப்பட்டன.

ஆனால் தற்போது இருப்பிற்கே ஆபத்து ஏற்பட்டுள்ள வேளையில் எதிர்காலத்திற்கான திட்டமிடுதலின் அவசியம் ஏற்பட்டுள்ளது.

தேசிய அரசியல் என்பது இனவாதத்திற்கு எதிரான, சமாதான சகவாழ்விற்கு ஆதரவான, பலமான கட்டுமானத்திலிருந்தே ஆரம்பிக்கப்படுதல் அவசியமாகியுள்ளது.

உதாரணமாக, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டதாக அறிவிப்பதன் மூலமோ அல்லது பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கல் அடிப்படையிலான தீர்வுகளை நோக்கிச் செல்வது என்பவை மட்டும் தமிழ் அரசியலில் அல்லது தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை.

வெறுமனே தேசிய இனப் பிரச்னையைக் கருவூலமாக முன்வைக்கும் அணுகுமுறைகள் அரசியல் பெரும்பான்மை தேசபக்த சக்திகளின் நம்பிக்கையைப் பெற உதவப் போவதில்லை.

தேசிய இனப் பிரச்னைக்குச் சார்பாக பெரும்பான்மை மக்கள் மத்தியில் குரல் கொடுக்கும் சக்திகள் பலமடைய வேண்டும்.

எனவே ஐக்கிய இலங்கையின் தேசிய நல்லிணக்கம், பொருளாதாரக் கட்டுமானம் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டிற்குச் செல்ல வேண்டும்.

உதாரணமாக ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதாகக் கூறி ரணில் அரசுடன் இணையும்போது தேசிய பொருளாதாரத்தைச் சுரண்டும் திறந்த பொருளாதாரத்தையும் ஏற்றுச் செல்வதாகவே முடிகிறது.

நாட்டின் பெரும்பான்மை ஏழை மக்கள் வாழும் பகுதிகளின் பொருளாதார வாழ்வு சீரழிவது குறித்த அவர்களது கவலைகளில் அல்லது போராட்டங்களில் நாம் பாராமுகமாக இருப்பது ஐக்கிய இலங்கை என்ற கொள்கைக்கு வலுச்சேர்க்க மாட்டாது. ஐக்கிய இலங்கை என்பது தேசத்தின் எல்லை சம்பந்தப்பட்டது அல்ல. அது பொருளாதாரம் குறித்த நிலைப்பாடு ஆகும்.

தமிழரசுக்கட்சியினர் வெறுமனே பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கை எனக் கூறி அதனை வெற்றிடமாக விட்டுச் செல்ல முடியாது.

அதன் தெளிவான அர்த்தம் செயலிலும் வெளிப்பட வேண்டும். தேசிய பொருளாதாரம் குறித்து பெரும்பான்மை மக்களின் அல்லது தேசிய ஒருமைபட்ட கொள்கையுடன் இணைந்து செல்ல வேண்டும்.

தேசிய இனப் பிரச்சனை என்பது வெறுமனே வெற்றிடத்திலிருந்த பிறந்ததல்ல. தேசிய பொருளாதார வளர்ச்சியிலிருந்து அல்லது அதற்கான பாகுபாடான திட்டங்களிலிருந்தே தோற்றமடைகிறது.

எனவே சுமந்திரன் போன்றவர்கள் மாற்றத்தை நோக்கிச் செல்வதாயின் தெளிவான தூர நோக்கை வரையறுக்க வேண்டும்.

அதற்கான பரந்த முன்னணிக்கான, தேசிய நல்வாழ்விற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். மிகவும் வங்குறோத்து அரசியலுக்குள், வெறும் தமிழ்த் தேசியம் என்ற மலட்டுத்தனமான கோஷங்களுக்குப் பதிலாக சகல இனங்களினதும் சக வாழ்வை உறுதி செய்யும் திட்டங்கள் வழிநடத்த வேண்டும்.

இதற்கு தமிழரசுக்கட்சிக்குள் தனிக் குதிரை ஓட்டி இலக்கை அடைய முடியாது. தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சகல ஜனநாயக சக்திகளுக்கும், திறந்த தூர நோக்குடன்கூடிய அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள அரசியல், பொருளாதாரச் சூழ்நிலையில் உலக நாடுகள் பலவற்றின் உட் கட்டுமானங்களில் பாரிய மாற்றங்களும், அதன் அடிப்படையில் உலக உறவு முறைகளும் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போலவே இலங்கையின் பொருளாதாரமும், மிகவும் நெருக்கடிக்குள் சிக்கும் ஆபத்து உள்ளது.

இவற்றைக் கட்சி மோதல்களினாலோ அல்லது ராணுவ பலத்தினாலோ மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

அவை பலமான தேசிய நல்லுணர்வை வேண்டி நிற்கின்றன. எனவே மக்கள் தேசத்தின் எதிர்காலம் குறித்து ஆழமான சிந்தனைக்குள் செல்வது தவிர்க்க முடியாததாகும்.

முற்றும்.

சுமந்திரன் வருகையின் மாற்றங்களும், தாக்கங்களும்!!: தமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-3)

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும்!(பகுதி-2)-வி.சிவலிங்கம்

 

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும்!! (பகுதி-1)-வி. சிவலிங்கம் (கட்டுரை)

 

Share.
Leave A Reply

Exit mobile version