தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவிகளை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் காயமடைந்தவர்கள் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் பிரத்தியேக வகுப்பிற்கு சம்மாந்துறை பகுதியிலிருந்து சென்ற இரு மாணவிகளை தொடர்ச்சியாக வீதியில் நின்று சில இளைஞர்கள் சீண்டி வருவதாக குறித்த மாணவிகள் அவர்களது உறவினர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இதையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை (7) வழமை போன்று குறித்த மாணவிகள் தனியார் வகுப்பிற்கு செல்கின்ற போது வீதியில் நின்ற இளைஞர்கள் சீண்டியுள்ளனர்.

இதனால் குறித்த மாணவிகளுடன் சம்மாந்துறை பகுதியில் இருந்து வந்தவர்களுக்கும் சாய்ந்தமருது பகுதியில் மாணவிகளை சீண்டியவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இக்கைகலப்பினால் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இத்தாக்குதலில் மாணவிகளுடன் சென்ற சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 17 ,18 வயதுடைய இருவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version