கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் குறைந்து வருகிறது. பதட்டத்தை குறைக்க இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியாவும் சீனாவும் கூறுகின்றன.

திங்களன்று, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், “சீன மற்றும் இந்திய துருப்புக்கள் ஜூன் 30 அன்று தளபதிகள் அளவிலான 3 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

தளபதி அளவிலான பேச்சுவார்த்தைகளின் கடைசி இரண்டு சுற்றுகளில் உடன்பாடு இருந்த விஷயங்களை அவர்கள் செயல்படுத்துவதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் எல்லையில் பதற்றத்தை குறைப்பதில் நாங்கள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.” என்று கூறினார்

இருப்பினும், இதற்குப் பிறகும், பல கேள்விகள் எழுகின்றன. முதல் முக்கியமான கேள்வி, இந்திய ராணுவம் இந்திய எல்லைக்குள் தான் இருந்தது என்றால், அது பின் வாங்க வேண்டிய காரணம் என்ன?

நடந்தது என்ன?

கால்வன், கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து சீன துருப்புக்கள் பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக இந்திய அதிகாரிகள் திங்களன்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.


நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டிருந்த இரு நாட்டு வீரர்களும் இப்பொழுது அப்படி இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதாவது, ‘ஐ பால் டு ஐ பால்’ என்று சொல்லப்பட்ட நிலை இல்லை. ஆனால் பதற்றத்தை குறைக்கும் பணி இன்னும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பணிகள், கால்வன், கோகரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற மூன்று இடங்களில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிபிசிக்கு தகவல் கொடுத்த அதிகாரி, டெப்சாங் அல்லது பாங்காங் சோ ஏரி பற்றி எதுவுக் பேசப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

மற்றொரு அதிகாரி, “கூடாரங்கள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகள் இரண்டும் அகற்றப்பட்டு, வீரர்கள் பின்வாங்குகிறார்கள்” என்று கூறினார்.

“ஜூன் 30 அன்று இரு தரப்பு தளபதிகள் கூட்டத்திற்குப் பிறகு முடிவு செய்யப்பட்ட ஒரு செயல்முறையின் ஆரம்பம் இது” என்று அவர் கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் திங்களன்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரு தரப்பினரும் எல்லையில் பதட்டங்களைக் குறைக்கவும், தங்கள் துருப்புக்களை எல்லையிலிருந்து திரும்பப் பெறவும் ஒப்புக் கொண்டனர்” என்று செய்தி நிறுவனம் ஏ.எஃப்.பி கூறுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன வெளியுறவு மந்திரி வாங் யிக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. இதன் பின்னர், இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வைடோங் இந்த உரையாடலின் விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பேச்சு வார்த்தையில் குறிப்பாக நான்கு விஷயங்கள் குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. –

1. இரு நாடுகளுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் செயல்படுத்தப்படும். எல்லைப் பகுதிகளில் அமைதியுடன் அபிவிருத்திக்காக நீண்ட காலமாக ஒன்றிணைந்து பணியாற்ற இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

2. பரஸ்பர ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் கூட்டாக எல்லையில் பதற்றத்தை குறைக்க முயற்சிக்கும்.

3. சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான தொடர்பு மூலம், இரு தரப்பினரும் பரஸ்பர உரையாடலை மேம்படுத்துவார்கள்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்பாட்டு முறைமை மேம்படுத்தப்படும். இது இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தும்.

4. சமீபத்தில் நடைபெற்ற தளபதி மட்டக் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட விஷயங்களை இரு தரப்பினரும் வரவேற்றனர். ஜூலை 1 ம் தேதி நடந்த தளபதிகள் அளவிலான கூட்டத்தில், இரு தரப்பினரும் எல்லையில் பதற்றத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டனர்.

 

இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் இரு தரப்பினரும் எல்.ஏ.சி -யில் படை விலக்க நடவடிக்கைகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

ஆனால், அமைதியை நோக்கி நகர்வதற்கான அறிவிப்புகள் மற்றும் நேர்மறையான செய்திகளுக்கு மத்தியில், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வீரர்களும் பின்வாங்குகிறார்களா என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து தெளிவான பதில் இல்லை.

ஒருவேளை அப்படி நடந்தால், அது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. காரணம் சீனப் படைகள் பைகோங்க் ஸோ ஏரியிலிருந்தும் தெப்சாங்க் பகுதியிலிருந்தும் இன்னும் படைகளை விலக்கிக் கொள்ளவில்லை

கல்வானில் சீனப்படைகள் ஏன் பின்வாங்குகின்றன?

முதலில் எழும் கேள்வி, கல்வான் பிராந்தியத்தில் சீன வீரர்கள் ஏன் பின்வாங்குகிறார்கள் என்பதுதான். இந்த கேள்விக்கான பதில் பிரதமர் மோடியின் லே பயணத்தில் தான் மறைந்துள்ளது என்று, சீனா குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ள மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பிரேம்ஷங்கர் ஜா கூறுகிறார்.


“சீனாவைப் பற்றி ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் சமிக்ஞ்சைகளை நன்கு புரிந்துகொள்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோதி லே சென்று நமது துருப்புக்களை ஊக்குவித்தார், ஆனால் அவர் சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இதன் பொருள் இந்தியா போரை விரும்பவில்லை என்பது தான் என்று சீனா புரிந்து கொண்டது. ராஜதந்திரத்தில், சிறிய சமிக்ஞைகள் கூடச் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

சீனா இந்த சமிக்ஞையைப் புரிந்து கொண்டது. ஆனால், இது ஒரு பிரச்சனையின் முடிவு அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு ஆரம்பம்.” என்று அவர் கூறுகிறார்.

அதே நேரத்தில், சீன-இந்தியா உறவுகள் குறித்து கவனித்துவரும் ஜே.என்.யூ பேராசிரியர் ஸ்வர்ன் சிங், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்பதைக் காட்டுகிறார்கள் என்று கூறலாம், இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கருத்து தெரிவிக்கிறார்.

மேலும் ஸ்வர்ன் சிங் கூறுகிறார், “இரு நாடுகளின் பிரதிநிதிகள் மூலமாக லடாக் எல்லையில் உள்ள படைப்பிரிவு தளபதி மற்றும் கார்ப்ஸ் தளபதி வரை பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

உரையாடலில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று இரு தரப்பினரும் கருதுகின்றனர். ஆனால் இந்த முழு உரையாடலின் போதும் இராணுவ மற்றும் இராணுவ உபகரணங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

எனவே அரசாங்கம் அறிக்கை வெளியிடும் வரை நிலைமை குழப்பமாகவும் பதட்டமாகவும் தான் இருக்கும். இப்போது, நிலைமை என்னவென்றால், டாக்டர்கள் சொல்வது போல் ஸ்டேபிள் பட் க்ரிடிக்கல். நிலைமை சீராக உள்ளது. ஆனால் ஆபத்து நிறைந்தது.”

பைகோங்க் ஸோ மற்றும் தெப்சாங்க் -ல் இருந்து சீனப் படைகள் இன்னும் ஏன் விலகவில்லை?

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன துருப்புக்களுக்கு இடையிலான தூரம் அதிகரிக்கும் செய்தி வந்தபிறகு, சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களிலும் ஒரு நேர்மறையான எண்ணம் நிலவுகிறது.

ஆனால் சீன வீரர்கள் இன்னும் தெப்சாங் மற்றும் பைகோங் பகுதியில் இருந்து பின்வாங்கவில்லை என்பதால் இது பிரச்சினையின் முடிவாக கருதப்படக்கூடாது என்று பிரேம் சங்கர் ஜா எச்சரிக்கிறார்.

“தெப்சாங்கில் அவர்கள் இருப்பது அவர்கள் கரகோரம் பகுதியில் கவனம் செலுத்துகின்றனர் என்பதைக் குறிக்கிறது.

சீனா இதுவரை உரிமை கோரி வந்துள்ள பைகோங்க் ஏரி பகுதியில் தனது நிலையை பலப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் ஒரு புதிய புரிதல் உருவாகும் வரை அந்தப் பகுதியிலிருந்து அவர்கள் திரும்பிச் செல்ல மாட்டார்கள்.” என்று அவர் கூறுகிறார்.

 

‘இந்தியா மற்றும் சீனா’ என்ற நூலின் ஆசிரியர் பிரேம் சங்கர் ஜா கூறுகையில், “சீன ராணுவம் தாங்கள் உரிமை கோரிய பைகோங்க் ஏரி பகுதியில் ஃபிங்கர் 4 ஐ கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது ஃபிங்கர் 8 வரை உரிமை கோருகிறது.

இதுவரை சர்ச்சைக்குரிய பகுதிகளாக இருந்த நான்கு மலைத்தொடர்களில் சீனா தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில், சீனர்கள் இந்திய எல்லைக்குள் வரவில்லை என்று மோதி சரியாகக் கூறியிருந்தார், ஏனெனில் அவர்கள் வந்தது சர்ச்சைக்குரிய ஒரு இடம் தான். ” என்று கூறினார்.

மூன்று மாதங்களில் கள நிலவரத்தில் என்ன மாற்றம் வந்தது?

புவியியல் ரீதியாகப் பார்த்தால், தெப்சாங் சமவெளி மற்றும் பைங்கோங்க் ஏரி பகுதியில் சீனத் துருப்புக்களின் இருப்பு முன்பை விட வலுவாகிவிட்டது, ஆனால் இதை நில விரிவாக்கம் என்ற பார்வையில் பார்க்கக்கூடாது என்று பிரேம் சங்கர் ஜா கூறுகிறார்.


அவர் கூறுகிறார், “இரு நாடுகளுக்கும் நில பற்றாக்குறை இல்லை. இந்த நிலையில், யார் எவ்வளவு தூரம் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்ற கோணத்தில் இதைப் பார்க்கக்கூடாது.

மூலோபாய நடவடிக்கையாகத் தான் இதைப் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு 2014 க்கு முன்னர் மிகவும் சிறப்பாக இருந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில், இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சீனாவை இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியிருக்கிறது.”

தனது கருத்தை விளக்கி, பிரேம் சங்கர் ஜா கூறுகையில், “அரசியலமைப்பின் 370 வது பிரிவை நீக்கி, லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றி, அக்சாய் சின்னை உள்ளடக்கிய ஒரு ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டு, இந்த முடிவுகளின் மூலம் இந்திய அரசு சீனாவைச் சீண்டியது.

இதனால், சீனா தனது சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (சிபெக்) பாதுகாப்பு குறித்து சந்தேகம் அடைந்துள்ளது, ஏனெனில் இவ்வளவு முதலீடு செய்து இந்தத் திட்டத்தை சீனா செயல்படுத்துவது, ஒரு வேளை மேற்கு நாடுகள் கடல் வர்த்தக பாதையில் அதன் வர்த்தக பொருட்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தால், இந்த பாதை வழியாக தனது சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் தான்.” என்கிறார்.

“ஆனால் இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகளால், சீனாவின் இந்த லட்சிய திட்டத்தின் எதிர்காலம் நெருக்கடியில் காணப்பட்டது. அதனால்தான் முதலில் சீனா பேச்சு வார்த்தை மூலமாக சமிக்ஞை அனுப்பியது. இப்போது ராணுவ ரீதியில் சமிக்ஞை அனுப்புகிறது “.

இந்தியா பின் வாங்கக் காரணம் என்ன?

இந்திய ராணுவம் பின்வாங்கியிருந்தால், சர்வதேச அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும் சர்வதேச விவகாரங்களில் அறிவும் உள்ள புஷ்ப் அதிகாரி நம்புகிறார்.

மேலும் அதிகாரி கூறுகிறார், “கல்வான் குறித்து ஊடக அறிக்கைகளில் வருவது முற்றிலும் உண்மை என்று நான் முதலில் நம்பவில்லை.

அப்படியே அது உண்மை என்று கொண்டாலும் என்னைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தம் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இதற்கு ஒரு காரணம், இந்தியா அதன் மூலோபாய திறன் எவ்வளவு என்பதை புரிந்து கொள்ள விரும்புகிறது, இதன் காரணமாக இந்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது.”

அவர் மேலும் கூறுகிறார், “இந்த நேரத்தில் துணைக் கண்டத்தில் முடக்கமான சூழல் உருவாகி வருகிறது. இது யாருக்கும் பயனளிக்காது. மேலும் உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள், வளரும் வல்லரசுகள் தங்களுக்குள் மோதிக்கொள்வது கூடாது என்பதும் இரு நாடுகளுக்கும் தெரியும்.”

“தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, இந்தியா-சீனா உறவுகள் விஷயத்தில் ஒரு முற்றுப்பெறாத நிலையே காணப்படுகிறது. வருங்காலத்தில் அது பல மாற்றங்களைக் காணலாம்.”

 

Share.
Leave A Reply

Exit mobile version