கோணேஸ்வரர் ஆலயம் பௌத்த விகாரைக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது என்று தேரர் கூறிய கருத்து ஒட்டுமொத்த இந்துக்களையும் பாதித்துள்ளது.
இந்த பிரச்சினை அடங்குவதற்குள் இராவணன் முஸ்லிம் மன்னன் என்று புது சர்ச்சை வெடித்துள்ளது.
இது தொடர்பில் உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் 40 அடியில் இராவணனின் சமாதி ஒன்று உண்டு என்றும் அதற்கருகில் அவன் தாயின் சமாதி உண்டு என்றும் இந்தியாவில் இருந்து வந்த சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே போல் கோணேஸ்வரம் கோயிலில் இராவணன் வெட்டும் உள்ளது. பௌத்தர்கள் இலங்கை வந்து வெறும் 2500 ஆண்டுகளே ஆகிறது.
இந்த 40 அடி சமாதி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனுடையதாய் தான் இருக்க வேண்டும்.
2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் ஆதாமின் வாரிசுகள் வாழ்ந்துள்ளனர்.
அதன் பிறகே விஜயன் இங்கு வந்து குவேனியை கரம் பிடித்தான். ஆதலால் குவேனி பௌத்த மதத்தைச் சேர்ந்தவள் இல்லை.
அவள் இந்து அல்லது முஸ்லிமாக இருக்கலாம். என்னுடைய ஆய்வின்படி, அவர்கள் எல்லாம் ஆதாமின் வாரிசுகளாவர்.
அதேவேளை ராமன் என்பவர் ரஹ்மான், சீதா என்பவர் சய்யிதா ஆகும்.
மரபுரீதியாக பேச்சு வழக்கு மாறிய போதே பெயர்களும் மாறியிருக்கலாம்.
ராமர் கூட எம் இறைதூதராக இருக்கலாம் என்றே நாம் நம்புகிறோம். இராவணன் தவறுகள் செய்த ஒரு முஸ்லிம். அவனை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமன். இதுவே எனது வாதம்” என்றார்.