திருக்கோணச்சரம், நல்லூர் உட்பட எந்தவொரு வரலாற்றையும் நான் திரிபுபடுத்தவில்லை என்று தெரிவித்துள்ள கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தமிழ்த் தேவார பதிகங்களே அதற்கு சான்றாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை இராவணன் ஆண்டதாக கூறுவது கட்டுக்கதை, வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் அல்ல என்று குறிப்பிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த எல்லாவெல மேதானந்த தேரர் தற்போது திருக்கோணேஸ்வரம் ஆலயம் கோகண்ண விகாரையாகும். யாழ். நல்லூர் முருகன் ஆலயம் சபுமல்குமார என்ற சிங்கள இளவரசனால் கட்டப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தமிழர்கள் மற்றும் இந்து அமைப்புக்களிடத்திலிருந்து கண்டனங்களும், வரலாற்று சுட்டிக்காட்டுதல்களும் வெளிப்பட்டதையடுத்து அவ்விடயங்களை முன்னிலைப்படுத்தி எல்லாவெல மேதானந்த தேரரிடத்தில் வினாக்களைத் தொடுத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருக்கோணேச்சரம், நல்லூர் உள்ளிட்டவை தொடர்பில் நான் கூறிய கருத்துக்களை மீளப்பெறமுடியாது. நான் வரலாற்றினை திரிபுபடுத்தவில்லை. தமிழ் தேவார பதிகங்களின் அதற்கான சான்றுகள் உள்ளன. தற்போது அவற்றை அழித்திருப்பார்களோ தெரியாது. ஆனால் என்னால் தெரிவிக்கப்பட்டவையே வரலாற்று உண்மையாகும்.

அதற்காக நாம் கோணேச்சர, நல்லூர் ஆலயங்களை இடித்துவிட்டு மீண்டும் விகாரகைளை கட்டுவதென்று பொருள்பாடாது. இவ்வாறான வரலாற்று தலங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

கிழக்கு மாகாண செயலணி தற்போது மட்டக்களப்பில் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. செயலணியின் உறுப்பினர்கள் தொல்பொருள் இடங்களை பர்வையிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதேநேரம் ஜனாதிபதி செயலணி தொடர்பில் யாரும் அச்சமடைய வேண்டியதில்லை. அந்த செயலணி தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் செயற்பாட்டையே முன்னெடுக்கவுள்ளது.

இதில் யாருக்கும் எந்தப்பிரச்சினையும் கிடையாது. தொல்பொருள் செயலணிக்கு பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் என்ற போதங்கள் இல்லை. தொல்பொருட்களாக எவையெல்லாம் அடையாளப்படுத்தப்படுகின்றதோ அவற்றை பாதுகாகப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் வரலாற்று பணியையே செயலணி மேற்கொள்ளவுள்ளது.

தற்போது தேர்தல் காலம் என்பதால் செயலணியை வைத்து அரசியல் செய்வதற்கே விளைகின்றார்கள். ஆனால் பொதுமக்கள் தெளிவாக உள்ளார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version