கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து கொண்டு பொதுவெளிக்கு வந்துள்ளார்.

அமெரிக்க தலைநகரான வாஷிங்டனிலுள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நலன் விசாரிப்பதற்காக சென்றபோதே டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்தார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையிலிருந்து மருத்துவமனைக்கு புறப்படுவதற்கு முன்னர் பேசிய டிரம்ப், “நான் எப்போதும் முகக்கவசங்களுக்கு எதிராக இருந்ததில்லை.

ஆனால், அதை அணிவதற்கு தகுந்த நேரமும், இடமும் உள்ளதாக நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, வரும் நவம்பர் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனை முகக்கவசம் அணிந்ததற்காக கேலி செய்த டிரம்ப், தான் முகக்கவசம் அணியப்போவதில்லை என்று கூறியிருந்தார்.

எனினும், இதுதொடர்பாக உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமையன்று பேசிய டிரம்ப், “நீங்கள் ஒரு மருத்துவமனையில் இருக்கும்போது, குறிப்பாக அந்த குறிப்பிட்ட அமைப்பில், நீங்கள் நிறைய வீரர்கள் மற்றும் மக்களுடன் பேசும்போது முகக்கவசத்தை அணிவது நல்ல விடயம் என்றே நினைக்கிறேன்” என்றார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுவெளியில் நடமாடும்போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென்று அந்த நாட்டின் நோய்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் பரிந்துரை செய்தபோது, அதை தான் கடைபிடிக்கப்போவதில்லை என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொதுவெளியில் நடமாடும்போது கண்டிப்பாக முகக்கவசத்தை அணிய வேண்டுமென்று அதிபர் டிரம்பை அவரது உதவியாளர்கள் நீண்டகாலமாக கேட்டுக்கொண்டு வந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version