மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் புகுந்த சுமார் 10 வயது சிறுவன், கண்ணிமைக்கும் நேரத்தில் 10 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் நீமுச் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் காலை 11 மணியளவில் சிறுவன் ஒருவன் நுழைந்துள்ளான்.

அப்போது அங்கிருந்த கேஷியர் அறைக்குள் நுழைந்த அந்த சிறுவன், தன் கையில் வைத்திருந்த பையில் அங்கிருந்த சுமார் 10 லட்ச ரூபாயை அள்ளிப் போட்டுக் கொண்டு தப்பித்துச் சென்றுள்ளான். சிறுவன் என்பதால் கேஷியர் அறைக்கு முன், வரிசையில் நின்றவர்களால் சிறுவன் பணத்தை கொள்ளையடித்ததை கவனிக்க முடியவில்லை.

30 வினாடிகளில் இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில், சிறுவன் வாசலில் சென்ற போது அலாரம் ஒலித்த நிலையில் அங்கிருந்த காவலாளர்கள் சிறுவனின் பின்னால் ஓடியுள்ளனர்.

ஆனால், சிறுவனை பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அங்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில், சிறுவனுடன் சுமார் 20 வயதுமிக்க இளைஞர் வந்திருந்ததாகவும், கேஷியர் தனது அறையில் இருந்து வெளியேறி செல்வதை கவனித்த அந்த இளைஞர், சிறுவனுக்கு சைகை கொடுத்ததும் சிறுவன் அங்கு சென்று பணத்தை திருடி தப்பித்துள்ளான்.


வங்கியின் வெளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சிறுவனும், இளைஞரும் வெவ்வேறு திசைகளில் ஓடியுள்ளனர்.

அப்பகுதியில் கடை நடத்தி வரும் சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரு கும்பல் இது போன்று சிறுவர்களுக்கு பயிற்சியளித்து, கொள்ளையடிக்க வைக்க பயிற்சிகள் நடந்து வருவதாக போலீசார் சந்தேகிக்கும் நிலையில், விரைவில் அந்த திருட்டு கும்பலை கைது செய்வோம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version