பாடலாசிரியர் மதன் கார்க்கியின் புதிய முயற்சி மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களின் கனவு நனவாகி இருக்கிறது.

இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகிறார்கள். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்த வகுப்புகளில் இணைந்துள்ளனர்.

‘எழுது’, ‘பேசு’, ‘இலக்கணம்’, ‘இலக்கியம்’ என்ற நான்கு வகுப்புகள் இந்தப் பயில் இணைய அரங்குகளில் வழங்கப்படுகிறது. ஒரே வகுப்பில் எட்டு வயது சிறுவர் சிறுமியரும் எழுபது வயது முதியவர்களும் ஒன்றாகக் கூடி தமிழ் பயின்று வருகிறார்கள். இரண்டு ஆண்டு ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பதை வாழ்நாள் கனவாகக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் கனவு முப்பது நாட்களில் நனவாகியிருக்கிறது. பாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்ற கலைவடிவங்களோடு இணைய விளையாட்டுக்களின் மூலம் தமிழ் பயிற்றுவிக்கும் இந்த முறை, இந்தத் தலைமுறை குழந்தைகளையும் பெற்றோரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

உலகெங்கும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தப் பாடத்திட்டத்தை எடுத்துச் செல்லும் முயற்சியிலும் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version