இளைஞரின் காதல் விவகாரம் ஒன்று மரணத்தில் சென்று முடிந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா சுவப்பினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மது. 29 வயது இளைஞரான இவருக்கும் மைனர் பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம், மைனர் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவந்தது. ஆனால் மது வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், மைனர் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் மது தனது காதலியான மைனர் பெண்ணை வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதற்கிடையே தங்களது மகளை மது கடத்தி சென்று விட்டதாக, மைனர் பெண்ணின் பெற்றோர் ஆலூர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மைனர் பெண்ணை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது, ஜாமீனில் ஜெயிலில் இருந்து வெளியே வந்து இருந்தார்.

இதையடுத்து அவர் தனது காதலியான மைனர் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள் என்று மைனர் பெண்ணின் பெற்றோரிடம் கேட்டு உள்ளார்.

ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். ஆனாலும் மைனர் பெண்ணை, தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி மது தொடர்ந்து வற்புறுத்தி வந்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் காதலியின் வீட்டின் அருகே மது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மைனர் பெண்ணின் சித்தப்பாவான ரூபேஷ், மதுவைக் கண்டித்துள்ளார்.

அப்போதும் ரூபேஸிடம் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்படி பிரச்சனை செய்துள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. இந்த சந்தர்ப்பத்தில் திடீரென வீட்டிற்குள் சென்ற ரூபேஷ், துப்பாக்கியை எடுத்து வந்து மதுவைச் சுட்டார்.

இதில் மார்பில் குண்டு துளைத்ததில் மது சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபேஷ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மதுவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஆலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி சென்ற ரூபேஸை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version