ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணையொன்றிலுள்ள ஒரு இலட்சம்  மின்க் வகை விலங்குகளை கொல்வதற்கு  அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கீரியைப் போலக் காணப்படும் குறித்த மின்க் வகை விலங்கு அங்குள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மே மாதத்தில் ஒரு பண்ணை ஊழியரின் மனைவி வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னர் ஸ்பெயினின் அரகோன் மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவரது கணவர் உட்பட ஆறு பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் ஜூலை 13 ஆம் திகதி  அங்கு வளர்க்கப்பட்ட 87 வீதமான மின்க் வகை விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக பிராந்திய கால்நடை சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவுகிறதா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், பண்ணைகளில் உள்ள 92 ஆயிரத்து 700 மின்க் வகை விலங்குகளை கொல்ல ஸ்பெயின் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயினின் மெட்ரிட்டுக்கு கிழக்கே 200 கிலோ மீற்றர் (125 மைல்) தூரத்திலுள்ள கிராமத்தில் அமைந்துள்ள இந்த பண்ணையை நடத்தும் நிறுவனத்திற்கு நிதி இழப்பீடு வழங்கப்படும் என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் மெட்ரிட் மற்றும் கட்டலோனியாவுடன் சேர்ந்து, ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று பரவிய இடங்களில் அரகோன் மாகாணமும் ஒன்றாகும்.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து 250,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 28,416 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version